Friday, October 29, 2010

கள் வேண்டுவோர் கழகம்

80களில் தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி அளித்திருந்த காலம். என் அப்பாவும் இன்னொரு உறவினரும் சேர்ந்து கள்ளுக்கடை வைத்திருந்தார்கள். அப்போது டாஸ்மாக் இல்லாத காலம், நகரங்களில் மட்டுமே 'சாராயக் கடை'கள் இருந்த காலம். உள்ளூர் குடிமக்களின் நலன் கருதி இந்தக் கடை திறக்கப்பட்டது!

கள் இறக்கவென்று 'தெக்கேருந்து' (தென் தமிழ்நாட்டிலிருந்து) கலியமூர்த்தி என்ற 'நாடாவி' (மரமேறுபவர்) வரவழைக்கப்பட்டு, எங்கள் இடத்தில் ஒரு குடிசை வீடும் அமைக்கப்பட்டு, தினமும் கள் விற்பனை ஜோராக நடந்தது. எங்கள் வீட்டில் இருந்த சில தென்னை மரங்களில் இருந்து 'தனிக்கள்' இறக்கி வீட்டுக்குப் போகும். சில மரங்களில் இருந்து 'பயனி' (பதநீர்) எடுக்கப்பட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பரிமாறப்படும்.

எனக்கு முதன் முதலில் கள் குடிக்கக் கற்றுக்கொடுத்தது என் அப்பாதான் (நல்ல அப்பாடான்னு முனுமுனுக்காதீங்க!). அரை லிட்டர் காணும்படி ஒரு சொம்பில் ஊற்றிக் கொடுப்பார். 'ஒடம்புக்கு நல்லதுடா. கண்ண மூடிகிட்டு இழுத்தெறி'ன்னு சொல்லுவார். ஒருமாதிரியான இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவை அது. கொஞ்ச நேரத்துக்கு சுள்ளென்று இருக்கும், அப்புறம் சரியாகிடும். தென்னை மரக்கள், பனைமரக்கள்ளை விட கொஞ்சம் இனிப்பு அதிகம். மயக்கம் குறைவு!



நாடாவி, மரங்களைத் தேர்வு பண்ணி 'பாளை' சீவி விட்டுக் கட்டி விடுவார். சில நாட்கள் கழித்துதான் பாளை நுனி சீவி அதில் பானையைக் கட்டுவார். அடுத்த நாள் ஒரு சுரை குடுவையுடன் மேலேறி, ஒவ்வொரு பானையிலும் வடிந்திருக்கும் கள்ளை குடுவையில் சேகரித்துக்கொண்டு இறங்குவார். குடுவையில் பார்த்தால், ஊர்பட்ட பூச்சிகள் இறந்துகிடக்கும் (ஒரு வேளை போதைக்கு இதுதான் காரணமோ?) . பூச்சி, தும்பட்டைகள் வடிகட்டப்பட்டு இன்னொரு பெரிய பானையில் கள் சேகரிக்கப்படும். இப்படியே ஒரு 40-50 மரங்கள் ஏறி கள் இறக்குவார். நமக்கு ஒரு மாமரம் கூட ஒழுங்கா ஏறத் தெரியாது!!! பானையின் உள்புறத்தில் சுண்ணாம்பு தடவினால் அதில் கிடைப்பது பதநீர். அவ்வளவு சுவையாக இருக்கும். நோ மயக்கம்... :)



கடையில் ஒரு பெரிய பானை இருக்கும். அதில் சேகரம் செய்யப்பட்ட கள் ஊற்றப்படும். நமக்கு கடைக்கு செல்ல அனுமதியில்லை!! கடை பக்கத்தில் ஒரு 'சாக்கனா கடை' இருக்கும். சுண்டல், ஊறுகாய், மாங்காய் வத்தல், முறுக்கு போன்ற சைடுகளுடன், அவித்த முட்டையும் ஆம்லெட்டும் கிடைக்கும். ரொம்ப நாளாக, போதைக்காக பானைக்கு கீழே ஊமத்தங்காய்களையும், பானைக்குள் பழங்கஞ்சியும் சேர்ப்பதாக ஒரு வதந்தியும் உலவியது. உண்மை தெரியவில்லை. அங்கு போய் நமக்கு சாப்பிடவும் அனுமதியில்லை.

கள்ளுகடை வைப்பதற்கு முன்பே என் அப்பா மன்னார்குடி பகுதி 'கள் வேண்டுவோர் கழகத்தில்' இருந்தார். கள் விற்க அனுமதி தர அரசை தொடர்ந்து வற்புறுத்துவதுதான் இதன் நோக்கம். இந்தக் கழகத்தின் வழி அப்பா மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். மன்னை நாராயணசாமி அவர்கள் வென்று அமைச்சரான தேர்தல் அது. வெளியூரில் ரொம்பப் பிரபலம் ஆகாததாலும், உள்ளூரில் அடிதடியான 'போக்கிலி' (போக்கிரி) என்று பெயர் எடுத்திருந்ததாலும், அப்பாவால் 5000 க்குமேல் ஓட்டு வாங்க முடியவில்லையாம் :)

இப்போது கள்ளுக்கு மீண்டும் வருவோம்!! கள் குடித்தால் கேடு என்று சொல்லித்தான் அரசாங்கம் 'மேல்நாட்டு' வகை சரக்குகளை விற்கிறது. இந்த மேல்நாட்டு மதுவகைகளின் லட்சணம் நிறைய நண்பர்களுக்கும் தெரியும். என்னத்ததான் போட்டு செய்றாய்ங்களோன்னு நிறைய பேர் புலம்புவதையும், ஒரு குவாட்டர்தான் சாப்பிட்டேன் ஒரே தூக்கா தூக்கிடுச்சு போன்ற அலறல்களையும் கேட்டுகிட்டுதான் இருக்கோம். ஆனால், கள்ளில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவது இல்லை. முழுக்க முழுக்க இயற்கை அளிக்கும் ஒரு பானம்தான் இது. எனக்குத் தெரிந்து எந்த உடல் உபாதையும் இதனால் வந்தது இல்லை.

இந்தப் பதிவு, கள் குடிப்பதற்கு மட்டும் ஆதரவானது இல்லை. பனைமரத்தை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதியும்தான். பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களின் பயன்கள் எண்ணிலடங்காதவை. சில பயன்கள்:

- ஓலை (வீட்டுக் கூரை வேய, விசிறி, பெட்டிகள் செய்ய)
- பனை மரம் (வீடு கட்ட உதவும்)
- பனைமட்டைக் கழி (நார் உறிக்க)
- பனங்காய் (நுங்கு)
- பனங்கிழங்கு (உணவுப்பொருள்)
- கள் (சிறந்த இயற்கை பானம்)
- பதநீர் (சுவை மிகுந்த இயற்கை பானம்)
- பதநீரிலிருந்து பனைவெல்லம் (சிறந்த இயற்கை இனிப்பு)
- பனங்கல்கண்டு (இருமலுக்கு நல்லது. சிறந்த இயற்கை இனிப்பு)
- கருப்பட்டி (இரும்புச்சத்து மிகுந்த இயற்கை இனிப்பு)

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் திருச்செந்தூர் போகும் வழியில், காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினரைக் கொஞ்ச நேரம் காக்கவைத்து விட்டு, 3 லிட்டர் பதநீர் குடித்துவிட்டுதான் போனேன்!! வரும்போது நிறைய்ய்ய்ய்ய்ய பனங்கல்கண்டு வாங்கி வந்தோம். பால், டீயில் போட்டுக் குடித்தால் அமிர்தமாக இருக்கும்!!

இப்படி ஏகப்பட்ட பயன்தரும் பனைபொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்ய அரசு உதவலாம். பதநீரையும், பனம்பழக் கூழையும் பதப்படுத்தி இனிப்புகள் செய்ய பயன்படுத்தலாம். கண்ணில் தெரியா பொருட்கள் கொண்ட 'ஈக்குவல்' இனிப்பான் பயன்படுத்துவதைவிட, பனங்கல்கண்டைப் பயன்படுத்தச் சொல்லலாம். எல்லாவற்றையும் விட, கள்ளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி, அதை விற்பவர் மட்டுமல்ல, குடிப்பவர் வயிற்றையும் பாதுகாக்கலாம்.

கள் வேண்டுவோர் கழகத்தில் சேந்துகுறீங்களா?? :)

25 comments:

தமிழ் அமுதன் said...

நல்ல ஒரு பதிவு...! கள்ளுக்கடை வேணும்னு சொல்லி நான் எழுதிய பதிவு இங்கே..!

http://pirathipalippu.blogspot.com/2009/11/blog-post_05.html

PB Raj said...

அப்பாவை பற்றி எழுத
தைரியம் வேண்டும் நான் கள் குடித்தது இல்லை

THOPPITHOPPI said...

தஞ்சாவூரு குசும்பு?

குடுகுடுப்பை said...

இதோ எந்தன் கள்ளுக்கடை

Ravichandran Somu said...

கள் வேண்டுவோர் கழகத்தில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

கள் சிற்ந்த இயற்கை பானம். எனக்கும் கள் குடிக்க கத்து கொடுத்தது என் அப்பாதான். முதன் முதலில் எட்டாவது படிக்கும் போது எங்கள் வீட்டு தென்னை மரத்தில் இறக்கிய தனி மர கள் ஒரு லோட்டா கொடுத்து “உடம்புக்கு நல்லது... கண்ணை மூடிகிட்டு குடிடா” என்று சொல்லி குடிக்க வைத்தார். அவ்வப்போது பெரியப்பாவும், அப்பாவும் தனி மர கள்ளை குடிக்க கொடுப்பார்கள்.

பதநீரின் சுவைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. பனங்கல்கண்டு இருமலுக்கு சிறந்த மருந்து.

பல பயண்களை கொடுக்கும் இந்த குடிசைத் தொழிலை ஆதரிக்க வேண்டும்.

அப்பா மன்னையையே எதிர்த்து நின்றவரா?!!!

Chitra said...

பனை வெல்லமும் கருப்பட்டியும் - Diabetes patients கூட நல்லது என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.

Unknown said...

@தமிழ் அமுதன்,
நன்றி. உங்க பதிவைப் படித்தேன். ஒரே மாதிரி சிந்தனை!!

@ராயல் ராஜ்,
என் அப்பா ரொம்ப அப்பாவி ஆனால் முன்கோபக்காரர். கள் குடிச்சதில்லையா? கெட்ட புள்ளையா இருக்கீங்க?

@தொப்பிதொப்பி,
ஆமா, அதே... :)

Unknown said...

@குடுகுடுப்பை,

ஒரே மட்டை :)

@ரவி,
இவ்வளவு நற்குணங்கள் கொண்ட கள்ளைத் தவிர்த்துவிடமுடியாது.
உங்க அப்பாவும் நல்ல அப்பாதான் :)

//அப்பா மன்னையையே எதிர்த்து நின்றவரா?!!!//

எதிர்த்து இல்லைங்க ரவி. அப்போ 'அப்பாவும்' நின்றார் சுயேட்சையா! எங்க அம்மா இன்னும் அதச் சொல்லி வம்பு இழுப்பாங்க. எலக்ஷன்ல நிக்கிறேன்னு சொல்லிட்டு காசக் கரியாக்கிக் கூத்தடிச்சார்னு!!

Unknown said...

@சித்ரா,

//பனை வெல்லமும் கருப்பட்டியும் - Diabetes patients கூட நல்லது என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.//

ஆமாங்க. இருமல், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது.

vinthaimanithan said...

அட ஏங்க வயித்தெரிச்சலைக் கிளப்புறிங்க? ஒரு மரத்துக் கள்ளு உடம்புக்கு நல்லதுன்னு சொலுவாரு எங்க தாத்தா. ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!

குமரன் (Kumaran) said...

நான் கள் குடித்ததில்லை. ஆனால் பதனீர் மிகவும் விரும்பிக் குடித்திருக்கிறேன். இந்த வருடம் மதுரை சென்ற போது தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

ஜோதிஜி said...

கள் குறித்து பார்க்க வந்தால் போதையே வந்து விடும் போலிருக்கு. உங்களின் தொடர்ச்சி தமிழ் அமுதன் போகின்றேன்.

Indian said...

//கள் வேண்டுவோர் கழகத்தில் சேந்துகுறீங்களா?? :)//

சேருவதில் பிரச்சினையில்ல.

//குடுவையில் பார்த்தால், ஊர்பட்ட பூச்சிகள் இறந்துகிடக்கும் (ஒரு வேளை போதைக்கு இதுதான் காரணமோ?) .//

Only this gives "yucky" feeling. நுட்ப முன்னேற்றமாக பூச்சிகளை வடிகட்டும் பொருட்டு பானையின் வாயில் ஒரு பில்டரை மாட்டக்கூடாது?
இல்லை பழமையான முறையை மாற்றமாட்டோம் என்றால் கள் வணிகம் தூய்மை பேணும் புதிய தலைமுறை சந்தையைப் புறக்கணிக்கிறது என்றுதான் பொருள்.

Unknown said...

மாப்ள நானும் கள் வேண்டுவோர் கழகத்தில் சேந்துக்கிறேன்..

பாண்டிச்சேரி போயி ரொம்ப நாளாச்சு.. ஒரு டிரிப்ப போட்ருவோமா..?

Unknown said...

@விந்தைமனிதன்,
//ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!//
இப்பிடி ஏங்கித் தவிக்க விட்டுட்டாய்ங்களே? :)

@குமரன்,
நலமா, குமரன்?
//இந்த வருடம் மதுரை சென்ற போது தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.//
அரசு ஆதரவு இல்லாம, பதநீர் இறக்குறவங்க கூட இப்போ இல்லாம போயிட்டங்க :(

Unknown said...

@ஜோதிஜி,

//கள் குறித்து பார்க்க வந்தால் போதையே வந்து விடும் போலிருக்கு.//

இது நல்லவிதமான போதை, ஜோதிஜி! உடம்புக்குக் கெடுதல் இல்லாத போதை! இல்லன்னா, அவ்வைப் பாட்டி சாப்பிட்டிருப்பாங்களா?

Unknown said...

@indian,

நன்றி, இந்தியன்.
//நுட்ப முன்னேற்றமாக பூச்சிகளை வடிகட்டும் பொருட்டு பானையின் வாயில் ஒரு பில்டரை மாட்டக்கூடாது? //

மாட்டலாம், கண்டிப்பா. இதிலயும் புது நுட்பங்களைப் பயன்படுத்தினால்தான் போட்டிகளைச் சமாளிக்க முடியும்!

Unknown said...

@கேயார்பி,

//பாண்டிச்சேரி போயி ரொம்ப நாளாச்சு.. ஒரு டிரிப்ப போட்ருவோமா..?//

தேதியச் சொல்லு மாப்ளே... தேமதுரக் கள்ளைத் தேடி ஒரு நீண்ட பயணம் போயிருவோம். ரொம்ப நாளாச்சு!

r.v.saravanan said...

happy deepavali

Santhosh said...

நமக்கு நல்லதுன்னா செய்துடகிய்துட போறானுங்க....புலிகேசி படத்துல சொல்றமாதிரி அந்த 30% கமிஷன் தான் முக்கியம் அமைச்சரே..

Ahamed irshad said...

umm Good Post..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_21.html

Unknown said...

@சரவணன்,
நன்றி. நல்லவேளை, அடுத்த தீபாவளிக்குள்ளே சொல்லிட்டேன்!!

@சந்தோஷ்,
அவ்வளவு சீக்கிரம் செஞ்சுட மாட்டாங்க. ஏன்னா, அவங்களுக்கு பெரிய லாபம் இதுல இல்ல.

@அஹமது இர்ஷாத்,
நன்றி!

Anonymous said...

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
http://ta.indli.com/user/vaduvursomu

Anonymous said...

இன்னொரு விஷயம். வெய்ய காலத்துல கள் குடிச்சா, உடம்புக்கு குளிர்ச்சி-ன்னு எங்க அய்யன் சொல்லி இருக்காரு.

Unknown said...

//Anonymous Anonymous said...

இன்னொரு விஷயம். வெய்ய காலத்துல கள் குடிச்சா, உடம்புக்கு குளிர்ச்சி-ன்னு எங்க அய்யன் சொல்லி இருக்காரு.//

சரியாத்தான் சொல்லியிருக்காரு உங்க அய்யன்!