Tuesday, December 27, 2011

What a rubbish world?

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சின்ன வயதில் ஆட்டம் போட்ட ஆறு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதி நிரம்பி இருந்தது. ஆற்றில் நீர் வரும் காலத்தில் இப்போதெல்லாம் யாரும் இறங்குவது இல்லையாம். பொங்கலுக்கு பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டுவதும், பக்கத்தில் இருக்கும் காட்டாற்றில் வண்டிகளைக் கழுவுவதும் இப்போது மறைந்து விட்டது. தெரிந்தும் தெரியாமலும், பிளாஸ்டிக் அரக்கன் பிடியில் நாமும் விழுந்து விட்டோம்.

பிள்ளைகளோடு ஃப்ளோரிடா டிஸ்னி உலகம் சென்றிருந்தபோது, பார்க்கும் ஒவ்வொருவர் கையிலும், ஒரு பெரிய கடின ப்ளாஸ்டிக் கப், அதற்கு மேல் மூடி, ஒரு ஸ்ட்ரா. இது சும்மா ஒரு பானத்துக்கு மட்டும்தான். சராசரியாக ஒரு 10 வயது பிள்ளை ஒரு நாளைக்கு 4 பானங்கள் குடித்தால், குடித்து விட்டு குப்பைகளை எறிந்தால், எவ்ளோ ப்ளாஸ்டிக் குப்பை? பணியாட்களும் அசராமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்தபடியே இருக்கின்றனர். ஒரு கணக்குப்படி, அந்த பூங்காக்களில் மட்டும் ஒரு நாளைக்கு 1,20,000 பவுண்ட்ஸ் (கிட்டத்தட்ட 56 டன்) குப்பை சேர்கிறதாம். அதில் கண்டிப்பாக ஒரு பெரும்பங்கு ப்ளாஸ்டிக் ஆக இருக்கும். இவ்வளவையும் என்ன செய்கிறார்கள்? Land Fill எனப்படும் குப்பை மேடுகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள். பள்ளமாக இருக்கும் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, மேடு படுத்துவதுதான் இது. அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் கண்ணுக்குக் குப்பை தெரியவில்லையென்பதால், அந்த நாடுகள் சுத்தமான நாடுகள் என்று ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுமே Land Fill செய்து Land Reclaim தான் செய்கிறார்கள். ஆக, குப்பைகள் அழிக்கப்படவில்லை, மறைக்கப்படுகிறது.சமீபத்தில், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சாப்பிடும் இடத்தில் (Food Court) இருந்த ஒரு கடையில் பிள்ளைகளுக்கு பழக்கூழ் (Smoothie) வாங்கினோம். அங்கு அமர்ந்து சாப்பிடத்தான் வாங்கினோம். அதற்கு அந்தக் கடையில், ஒரு ப்ளாஸ்டிக் கடின கப், ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், கடின மூடி, ஒரு ஸ்ட்ரா எனக் கொடுத்தார்கள். நான், கடையில் இருப்பவரிடம், நாங்கள் இங்குதான் சாப்பிடப்போகிறோம், மூடி வேண்டாம் என்று கூறிவிட்டேன். அப்படியே, அவரிடம் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கும், பவுல்களுக்கும் பதில் பீங்கானில் குடுக்கலாமே. வெளியில் எடுத்துச் செல்வதானால், ப்ளாஸ்டிக்கில் கொடுங்கள் என்று கூறினேன். அவர் என்னை ஒரு விநோத பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ஒரு சிரிப்போடு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பிரபல உணவகங்களில், எடுப்புச் சாப்பாடு (Parcel) வாங்கினால் அதற்குக் கொடுக்கபடும் கடின ப்ளாஸ்டிக் கப்புகளைப் பார்த்தால் மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒரு வாழை இலை, ஒரு செய்தித்தாள், கொஞ்சம் நூலோடு முடித்து விடுவார்கள். அதேபோல் தேநீர்க் கடைகள், மதுக்கடைகள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கப்புகள். ஒரு மணி நேரத்தில் குடித்துத் தீர்க்கக்கூடிய தண்ணீருக்கு ஓராயிரம் ஆண்டுகள் அழிய எடுத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் பாட்டில். வயிற்றைக் கெடுக்கும் பூச்சிமருந்துகளுக்கு, உலகைக் கெடுக்கும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில், ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் அழிவுகளைப் பார்த்துவிட்டு, அதன் உபயோகத்தைக் குறைக்க பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நாம், இப்போதுதான் ப்ளாஸ்டிக்கை முழுவீச்சில் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆறுதலாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களில் ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்து இருக்கிறார்கள். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு கீழே இருக்கும் நாயர், காகிதக் கப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

நாகரீக வளர்ச்சி, ஆரோக்கியம் காரணமாக நம் வாழ்க்கை முறை நிறைய மாறி விட்டது. நிறைய விஷயங்களை நாம் ஒரு சமரசத்தோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால், வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்தால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வளர்க்கும் பிள்ளைகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ கொஞ்சம் அதிக நாட்கள் குறைந்த நச்சோடு வாழ்வார்கள்.

1. பார்க்கும், பொருள் வாங்கும் கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளை மறுப்பது.
2. உணவகங்களில் சென்று சாப்பிடுவது
3. தெரிந்த கடைகளில் சொல்லி ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்தைக் குறைக்கச் செய்வது
4. குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டும் போடுவது என முயற்சி செய்யலாம்.

இன்று காலை என் மகள் ரொட்டி வாங்கிக்கொண்டு வரும்போது சொன்னாள். 'இந்த ஒரு ரொட்டிக்கும் ப்ளாஸ்டிக் பை எடுத்து திணிக்கிறாங்கப்பா, நான் வேணாம்னுட்டேன்' என்று. பெருமையாக இருக்கிறது, என் பேச்சை குறைந்த பட்சம் இரண்டு பேர் (மனைவி உள்பட) கேட்டு, ப்ளாஸ்டிக்கை முடிந்தவரை மறுக்கிறார்கள் என்பதை அறியும்போது!

மாற்றம் என்பது நமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. மாறுவோம், வருங்கால நமது சந்ததியினருக்குப் பொருள் மட்டுமல்லாது, சுத்தமான காற்று மற்றும் பூமியைச் சேர்த்து வைப்போம். பிளாஸ்டிக்கை முடிந்தவரை மறுப்போம்!

***

7 comments:

Azhagesan Jayaseelan said...

unga pecha kekkura 3vathu aal naan

O.R.B Raja said...

@அழகேசன் ஜெயசீலன் - மிக்க நன்றி, சகோ.

ரவிச்சந்திரன் said...

ந‌ல்ல‌ ப‌திவு...

பெங்க‌ளூரில் எல்லா க‌டைக‌ளிலும் பிளாஸ்டிக் பைக‌ளை காசு ( Rs 1 to 5) கொடுத்துதான் வாங்க‌ வேண்டும் என்ப‌து ச‌ட்ட‌ம். வார‌ இறுதி ஷாப்பிங் போகும்போது நாங்க‌ள் பெரிய‌ பைக‌ளை கொண்டு சென்று பொருட்க‌ளை வாங்கி வ‌ருகிறோம்.

அலுவ‌ல‌க‌ ப‌க்க‌த்திலிருக்கும் டீ க‌டையில் ஒரு ரூபாய் அதிக‌ம் கொடுத்து பேப்ப‌ர் க‌ப்பில்தான் டீ வாங்கி குடிக்கிறேன்.

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

naanum.

O.R.B Raja said...

@ரவி - நன்றிங்க தலைவரே! நம்ம நாயரும் முதல்ல 50 காசு அதிகமாத்தான் சொன்னாரு. அப்புறம் எல்லாரும் பேப்பர் கப் கேக்கவே, மாறிட்டாரு. அதே விலைதான் ;))

@கேபிள் - நன்றிங்க!

யுவகிருஷ்ணா said...

very good post

O.R.B Raja said...

மிக்க நன்றி, யுவா!