Tuesday, December 27, 2011

தண்ணியடிச்சுட்டு கார் ஓட்டுறது தப்பா?

எச்சரிக்கை - நான் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆதரவானவன் இல்லை.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு நாள் சாயந்தரம் வழக்கம்போல, செந்தில் மாப்ள ஆஃபிசில் சந்திப்பு. லைட்டா கொஞ்சம் டைட்டாவலாம்னு
ஆளுக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டோம். நான் பொதுவாக பியர் சாப்பிடுவதில்லை. 8 மணிக்கு சாப்பிட்டு விட்டு, 12:30 மணி வாக்கில் பெருங்குடியில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்ல காரில் கிளம்பினேன். கொஞ்சமாக மழை. மத்திய கைலாசத்திலிருந்து வலது பக்கம் திரும்புவதற்காக பச்சை விளக்குக்குக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு மினி லாரி, பக்கத்தில் ஒரு பைக். அவர்கள் முன் சில வண்டிகள். வலது பக்க சிக்னல் கிடைத்ததும் நகர ஆரம்பித்தோம். திரும்பும் வேளையில், பச்சை பார்த்துதான் திரும்பினேன். ஒரு நொடி நேரத்தில், பச்சை அம்பைக் காணோம்! திரும்பியவுடன் அங்கிருந்த இரு காவலர்கள் எங்கள் மூவரையும் நிறுத்தச் சொன்னார்கள்.

நான் காரை ஓரம் கட்டிவிட்டு காத்திருக்க, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெயர்கொண்ட காவலர் என்னிடம் வந்தார். லைசன்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன்
கேட்டார், கொடுத்தேன். சிவப்பு சிக்னல்ல திரும்புனது தப்புன்னு சொன்னார். நான், திரும்பும்போது பச்சைதான் இருந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில்,
எந்த அறிகுறியும் (ப்ளிங்க்) இல்லாம சிவப்பு மாறுனா நான் என்ன சார் செய்யட்டும்னு கேட்டேன். அவர் அதெல்லாம் முடியாது, நாளைக்கு கோர்ட்டில் வந்து ஃபைன் கட்டுங்கன்னு சொன்னவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 'நீங்க குடிச்சுருக்கீங்களா சார்'ன்னு கேட்டார். நானும், திடீர்
அரிச்சந்திரன் அவதாரம் எடுத்து, ஆமா, எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன்ன்னு சொன்னேன். அவர், சரி இன்னிக்கு வசமா சிக்கிட்டான் ஒருத்தன்னு நெனச்சுகிட்டு, சார் கொஞ்சம் இறங்கி வாங்க, இன்ஸ்பெக்டர்கிட்ட பேசணும்னு சொன்னார். நானும் இறங்கி இன்ஸ்பெக்டரிடம் போனேன்.

புகழ்பெற்ற குதிரையின் ஓனரான மாவீரன் பெயர் கொண்ட அவர், சார் குடிச்சுட்டு கார் ஓட்டக்கூடாது. நீங்க ஓட்டிகிட்டு வந்துருக்கீங்க. என்ன
செய்யலாம்னு கேட்டார். நான், அய்யா நான் எட்டு மணிக்குதான் பியர் சாப்பிட்டேன், அது அப்போவே பாத்ரூமுக்குப் போயிடுச்சு. காவலர் கேட்டாரு, நான் ஆமான்னு சொன்னேன்னு அவர்கிட்டே சொன்னேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்னு சொன்னேன். அவர் விடுவதாயில்லை. பைக் தம்பியையும், மினி லாரி தம்பியையும், சரிப்பா இப்ப என்ன சொல்றீங்க, 2000 ரூப தண்டம் கட்டவேண்டி வரும் பரவாயில்லையான்னு கேட்டார்.
அவங்க ரெண்டு பேரும் கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க.

என்னை தனியே கூப்பிட்ட பாகிஸ்தான் அதிபர், சார் பாத்தா(?) படிச்சவர் மாதிரி இருக்கீங்க. எதுனா பாத்து செய்ங்க. நீங்க பிரச்சினை இல்லாம
போயிடலாம்னு பேரத்தை ஆரம்பிச்சார். நான் அப்போதான் அமெரிக்க ரிட்டர்ன்ங்குறதால, லஞ்சம் குடுக்கக்கூடாது எனும் என் கொள்கையை உடும்பா புடிச்சுகிட்டு, சார் நான் லஞ்சமெல்லாம் குடுக்கமாட்டேன்னு சொன்னேன். உடனே அவர் மாவீரன்கிட்டே போய் ஏதோ சொன்னார். அவர், மத்த ரெண்டு பேரையும் பாத்து, சரி நீங்க சரிவர மாட்டீங்கன்னு சொல்லிட்டு, கேஸ் குறிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு, என்ன கோபம்ன்னா, நான் திரும்பும்போது பச்சை இருந்தது. ஒரு செகண்ட்குள்ளே, அது காணாமப் போச்சு. ரெண்டு செகண்ட்குள்ளே எப்படி அந்த சந்திப்பில் வண்டியத் திருப்புறது. அதனாலே, நான் திரும்பும்போது பச்சைதான் இருந்தது, சிக்னலில் கோளாறுன்னு வாதம் பண்ண ஆரம்பிச்சேன். அவங்க அதெல்லாம் காதுலயே போட்டுக்கல.

நானும், சரி இவங்ககிட்டே பேசி பிரயோசனம் இல்லன்னுட்டு, மாவீரன் கிட்டே, சட்டப்படி என்ன பண்ணனுமோ அதப் பண்ணிடுங்க, லஞ்சம்
குடுக்கமாட்டேன்னு சொன்னேன். அவரும் (கிண்டலா) சரி அப்படியே பண்ணிடுவோம்னு சொல்லி அதிபரையும் எங்க மூனு பேரையும் ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். நானும், சரி என்னதான் ப்ரோசிஜர்ன்னு பாத்துடலாம்னு ஆர்வத்தில் கெளம்பிட்டேன். இவ்வளவுக்கும், ஒரு 500 ரூபாய் (அதான் அவங்க கேட்டது) இல்லேன்னா, அப்போ இருந்த ஒரு சக்தி வாய்ந்த அமைச்சர், அல்லது முதலமைச்சர் செல்லில் இருந்த ஒரு காவல் அதிகாரி இவங்க யாராவது ஒருத்தர் பேரச் சொல்லிட்டு போயிருக்க முடியும். ஆனால், எனக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தவிரவும், நம்மூர் சட்டங்கள் எப்படி இருக்கின்றனன்னு நேரடியா பார்க்க ஒரு வாய்ப்பை விட மனசில்லை. குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை, அதனால் இன்னும் தைரியம்!!

ஒரு ஷேர் ஆட்டோவில் எங்களை ஏத்திகிட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போனார் அதிபர். வரும் வழியெங்கும், மத்த ரெடு பேரும் கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போயிட்டாங்க. அங்கு போனதும், பணியில் இருந்த சின்னக்குயில் பேர் கொண்ட (பயிற்சி) டாக்டரிடம் அழைத்துப்போனார். அந்தம்மாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

சின்னக்குயில் - உங்க பேரு
நான் - ராஜா
சி.கு - அப்பா பேரு
நான் - சொன்னேன்
சி.கு - அட்ரஸ்
நான் - சொன்னேன்
சி.கு - குடிச்சிருக்கீங்களா
நான் - எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன் (அப்போ மணி 1:30am)

அதுக்கு அப்புறம் ஒரு சீட்டில் ஏதோ எழுதியது சி.கு. சரி நீங்க போகலாம்னு சொன்னிச்சு. எனக்கு ஒன்னும் புரியல. அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, நீங்க driving under the influence of alcohol க்கு மருத்துவர் சான்று குடுத்திருக்கேன்னாங்க. எனக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எத வச்சு கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டேன். நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்ன்னு சொன்னாங்க. 8 மணிக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டுட்டு 12:30 மணிக்கு காரை மறைக்கும்போது என் ரத்தத்துல எவ்வளவு பர்சென்ட் ஆல்கஹால்
இருக்கும்னு கேட்டேன். எனக்கு என்ன டெஸ்ட் எடுத்து கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டா, சி.கு நாங்க டெஸ்டெல்லாம் எடுக்குறது இல்ல, உங்க கண்ணு
சிவப்பா இருக்கு, தவிர நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்னு சொன்னுச்சு. நான் சரி, இப்போ நான் குடிக்கலன்னு சொல்றேன், அதையும் நம்புவீங்களான்னு கேட்டேன். அதுக்கு சி.கு சார் அதெல்லாம் எனக்குத் தெரியாது, போலிஸ்காரங்க கூட்டிட்டு வருவாங்க, நாங்க டாக்டர் செர்டிஃபிகேட் குடுப்போம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்னு சொல்லிச்சு. எனக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியல. சரி தொலைங்கன்னுட்டு வெளில வந்துட்டேன். மறுபடியும் மாவீரன்கிட்டே அழைத்து வரப்பட்டோம். சார், சட்டப்படி நான் என்ன செய்யனுமோ செஞ்சுட்டேன். படிச்சவரா இருக்கீங்க, சட்டப்படி நான் கார் குடுக்கக்கூடாது, நீங்க எடுத்துகிட்டுப் போங்க 2200 ரூபாய் தண்டம் கட்ட வேண்டி வரும்.குடுத்துட்டுப் போங்க, உங்க லைசென்சையும் குடுத்துட்டு நாளைக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன்ல வந்து லைசன்ஸ வாங்கிகோங்கன்னு சொன்னார்.

இதுக்கு இடையில், அங்கு வந்த என் மச்சான் (அவன் தாய்மாமன்தான் போலிஸ் அதிகாரி), அங்கிள், ஒரு போன் மாமாவுக்கு போட்டிருக்கலாம்ல,
இல்லன்னா 500 ரூபா வீசி எறிஞ்சு இருக்கலாமே, ஏன் இப்படி இந்த மழையில அலையிறீங்கன்னு கேட்டான். நான் சும்மாதான், நம்ம சிஸ்டமும்
சட்டமும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கதான்னு சொல்லிட்டு காரை எடுத்துகிட்டு வீடு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள், செந்தில் மாப்ளைய கூட்டிகிட்டு ஸ்டேஷன் போனேன். அவன் போகும் வரை ஒரே திட்டு. எனக்கு போன் பண்ணியிருக்கலாம்ல.
இந்தியாவுக்கு வந்துட்டா இந்தியன் மாதிரி இருக்கக் கத்துக்கோடான்னு ஒரே அட்வைஸ்! மாவீரன், எங்களுக்கு முதுகைக் காட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார். திரும்பி என்னைப் பார்த்து டக்குன்னு என்ன நெனைச்சாரோ ஒரு சல்யூட் வச்சார், எனக்கு ஒரே சிரிப்பு. சரி வாங்க சார்ன்னு மேலே ரூமுக்கு கூட்டிகிட்டுப் போனார். உக்காரச் சொல்லிவிட்டு, செந்திலிடம் பேச ஆரம்பித்தார். செந்தில், சார் இவன் நெனச்சுருந்தா, நேத்தே ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு போயிருக்க முடியும். கொஞ்சம் நேர்மையான ஆளுன்னு என்னைப் பத்தி சொல்ல ஆரம்பித்தான். உடனே அவர், அடடா சார் நேத்தே என்கிட்ட சொல்லியிருக்கலாமே, ஏன் சார் இப்படிப் பன்னிட்டீங்க, சாரி சார்ன்னு ஆரம்பிச்சுட்டார். நான் பரவாயில்ல, சும்மா சட்டம் தெரிஞ்சுக்கதான் அப்படிப் பண்ணேன்னு சொன்னேன். அவருக்கு அப்ப ஒரு போன் வந்தது.

கொஞ்சம் நேரம் பேசிட்டு, ஸ்பீக்கரில் போட்டுவிட்டார். மறுமுனையில் பேசியது அவருக்கு மூத்த அதிகாரி, என்னய்யா எத்தன Drunken Driving கேசு
புடிச்சீங்க, 30 டார்கெட் வச்சுருக்கானுங்க. முடியுமில்லன்னு கேட்டார்.
பேசி முடிச்சதும் மாவீரன், பாருங்க சார் மேலேயிருந்து எங்க உயிர எடுக்குறாங்க. நாங்க யாரையும் புடிக்கிறது இல்ல. கணக்கு காட்ட சில சமயம்
கடுமையா நடந்துக்கவேண்டியிருக்கு. ஒரு ரகசியம் சொல்லவா, நாங்க பெரும்பாலும் புடிக்கிறது சென்னை பதிவு எண் கொண்ட வண்டிகளை
அல்லன்னு சொன்னார்!! (என்னோட கார் நம்பர் TN 48). சார் தப்பா நெனச்சுக்கதீங்க, கேஸ் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். அதனாலே கேன்சல்
பண்ணமுடியாது. ஃபைனை நானே கட்டிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்னு சொன்னார். அடக்கொடுமையேன்னுட்டு, நாங்களும் கெளம்பி
வந்துட்டோம்!

அமெரிக்காவில் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் தண்டனை கடுமையாக இருக்கும். ஆனால், ஒரு ட்ரைவரை அந்தக் கேசுக்காக பிடிக்கும் முன்
ஏகப்பட்ட நடைமுறைகள். முதலில், வேறு ஏதாவது காரணுத்துக்காக வண்டி மறிக்கப்பட்டிருக்கவேண்டும். உதாரணத்துக்கு, காரை தாறுமாறாக
ஓட்டுதல், அதிக வேகத்தில் போதல், இந்த மாதிரி. காரை விட்டு கீழிறக்கி (இதுக்கு மட்டும்தான் கீழே இறங்கவேண்டும், மத்த சமயங்களில் ட்ரைவர்
சீட்டிலேயே இருக்கவேண்டும், கீழே இறங்கினால், அதிகாரியைத் தாக்கத்தான் வருகிறோம்ன்னு ஒரு தவறான புரிதல் அதிகாரிக்கு வந்திடும்)
ட்ரைவரிடம் Breathalyzer சோதனை செய்யப்பட்டு, அவர் ரத்தத்தில் 0.8% க்கு அதிகமாக ஆல்கஹால் இருந்தால் மட்டுமே (இது மாநிலத்துக்கு
மாநிலம் மாறும்) அவரை புக் செய்யவேண்டும். அதுக்கு அப்புறம் அவரை வண்டியோட்ட அனுமதிக்கக்கூடாது. உடனே அருகில் இருக்கும்
மருத்துவமனையில் ஆல்கஹால் அளவு ரத்த சோதனை செய்து உறுதி செய்யப்படவேண்டும். இவை எல்லாம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டால்தான் தண்டனை கிடைக்கும். அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடிப்பவர்கள். வேலை முடிந்தவுடன் நிறைய தடவைகள் நேரே பார் போயிருக்கிறோம். பெரும்பாலும் பியர் அல்லது ரெட் வைன் சாப்பிட்டுவிட்டு நன்றாக சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, நிறைய பேசிவிட்டு நிதானமாகத்தான் வீடு திரும்புவோம். இது வரை நான் ஸ்பீடிங் தவிர வேறு எதற்காகவும் தண்டிக்கப்பட்டதில்லை!

நம்மூரில், முதலில் சிக்னல்கள் ஒரு ஒழுங்கில் அமைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு சந்திப்புக்கும் ஒரு மாதிரி சிக்னல்கள். அதுவும் இடது, வலது
புறம் திரும்புவதற்கு சில ப்ளிங்க் ஆகி நிற்கும், சில இடங்களில் எப்போது போகும் என்பது தெரியாது. அதே மாதிரி, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு
என்பது கட்டாயமாக பரிசோதிக்கப்படவேண்டும். சும்மா, சென்னை தவிர்த்த ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்களைப் பிடித்தோ, சிபாரிசுக்கு ஆளில்லாதவர்களைப் பிடித்தோ வெறும் கணக்கு காட்டக் கூடாது. சிக்னலை மீறுபவர்கள், (இரவில்) தாறுமாறாக வண்டி ஓட்டுவோர் மட்டும் பிடிக்கப்பட்டு ரத்தசோதனையோ அல்லது மூச்சு சோதனையோ செய்யவேண்டும். இதெல்லாம் இல்லாமல், இருக்கும் சிஸ்டத்தை தொடர்ந்து ஃபாலோ செய்தால், சட்டத்தை மதித்து நடக்க விரும்பும் என்னைப் போல் பலரும், 500 ரூபாயையோ அல்லது சிபாரிசுக்கு நம்பரையோ தயாராக வைத்துக்கொண்டுதான் இனி ரோட்டில் செல்லவேண்டும்!

***

8 comments:

அக்கப்போரு said...

அந்தக் கருமத்த எதுக்குக் குடிக்கணும்? எதுக்கு இப்டிப் பொலம்பனும்?
அண்ணே போலிச்ட்ட மட்டும் தான் நேர்மையா இருப்பிங்களா? இல்ல நீங்க கடேசியா யு டான்ஸ் வந்தப்ப கூட ஒன்னு சொன்னீங்க அதச் செய்யவே இல்லையே ...

கே.ஆர்.பி.செந்தில் said...

அது சரி நம்ம ஆளுங்க எல்லாம் எங்க சொல்பேச்சு கேக்குறீங்க,,,

இந்தியாவுக்கு வந்துட்டு அமெரிக்கா பெருமை பேசாதேன்னு உன்கிட்ட எத்தன தடவைதான் சொல்றது :)))

O.R.B Raja said...

@அக்கப்போரு - //நீங்க கடேசியா யு டான்ஸ் வந்தப்ப கூட ஒன்னு சொன்னீங்க அதச் செய்யவே இல்லையே ...//

எனக்கு நேர்மை அளவுக்கு ஞாபகமறதியும் அதிகம். அடுத்த முறை பரிசீலிப்போம் ;)))

@கேயார்பி - மாப்ள, பெரும பேசல. புடிக்கிறதுக்கும் ஒரு ஞாயம் வேணும்ல, அதுக்குதான்.

//அது சரி நம்ம ஆளுங்க எல்லாம் எங்க சொல்பேச்சு கேக்குறீங்க//

இப்பல்லாம் 500 ரூபா எக்ஸ்ட்ரா இல்லாம போறதில்லன்னுதான் உனக்கும் தெரியுமே ;))

ஜோசப் பால்ராஜ் said...

You must have insisted for a blood test in hospital.

மோகன் குமார் said...

Interesting to read this Raja !

O.R.B Raja said...

@ஜோ - எவ்ளவோ கேட்டுப்பாத்தேன் அந்த டாக்டர்கிட்ட. அது, சாரிங்க இதான் நடைமுறை, ரத்தமெல்லாம் டெஸ்ட் பண்றதில்லன்னு சொல்லிடிச்சு ;((

@மோகன் - நன்றி, சகோ!

ரவிச்சந்திரன் said...

:)))

சுரேகா.. said...

கேள்வி கேட்டுப் பழகினாத்தான் நாடு உருப்புடும்.! நீங்க கேட்டது சரிதான்..!!

ஆனா..பீர் குடிச்சது ..தப்பு! :))