ரொம்ப நாளைக்கு அப்புறம், படம் பாக்கலாம்னு வூட்டுக்காரம்மா நச்சரித்ததாலே திருச்சி போயிருந்தபோது படம் பாக்கலாம்னு முடிவெடுத்தோம். இருந்த ரெண்டு நாளும் காசி சென்று திரும்பியிருந்த மாமனார், மாமியாரிடம் ஆசி, பரவாக்கோட்டையில் வீட்டு விசேஷத்தில் பங்குன்னு செம டைட்டு. நமக்குதான் ரெண்டு டீ குடுத்தா இன்னிக்கெல்லாம் கார் ஓட்டிகிட்டே இருப்போம்ல, கிளம்பியாச்சு! ஒரே மூச்சில் (சிறு சிறு பிரேக் எடுத்து) கிட்டத்தட்ட 1200 மைல் தனியா அமெரிக்காவில் கார் ஓட்டுன அனுபவம் இருந்தாலும், நம்மூர்ல 360 டிகிரியும் அலர்ட்டா கார் ஓட்டும்போது கிடைக்கிற த்ரில்லே அலாதிதான். சென்னை - திருச்சி சாலை மிக அருமை! திருச்சி - தஞ்சாவூர் படு மோசம், இன்னும் வேலை நடந்துகிட்டு இருக்கு. தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை, அழகு :) இன்னும் கொஞ்சம் பசுமை வந்துவிட்டால் ரொம்ப நல்லா இருக்கும்!
படம்னு சொன்னதுமே, நம்ம வீட்டு டீன் டிக்கெட் ஒண்ணு நானும் வரேன்னு கிளம்பிடுச்சு. பார்க்க முடிவு செய்திருந்த படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு'. வித்தியாசமான கதைப்போக்கு இருந்தாலும், சில காரணங்களுக்காக பிள்ளைங்கள அழச்சுகிட்டு போக வேணாம்னு நாங்க மூணு பேரும் கிளம்பினோம். கிளம்பும்போதே, டீன் டிக்கெட் அச்சப் படம் போர்னு சொல்லிடுச்சு. சரி, கொஞ்சம் பொழுது போக்கா இருக்குமேன்னு கந்தசாமி போகலாம்னு முடிவு செஞ்சோம். இந்தப் படத்துக்கும் நான் பிள்ளைகளைக் கூட்டிகிட்டு போகக்கூடாதுன்னு இருந்தேன். ஏன்னா, தினமும்தான் F.M ல மியாவ் மியாவ் பூனையும், மீனாகுமாரியும் கேட்டுத் தொலைக்கிறோமே. ரெண்டு பாட்டும் ஒரு கேக்கவே ஒரு மார்க்கமா இருந்ததாலே, பிள்ளைகளுக்குத் தடா!
நேரா தியேட்டர் போய் தயாரா இருந்த டிக்கெட்டுகளைப் பத்தி (50 ரூவா டிக்கெட் 100 ரூவாயாம்!) உள்ளே போய் உக்காந்தோம். படம் ஆரம்பிச்சவுடனே, பொடிப்பசங்க அட்டகாசம், பேப்பர் வீசுறது, சத்தம் போடுறது, டயலாக் விடுறதுன்னா பரவாயில்ல. இப்போல்லாம், செல்பேசில உள்ளே உக்காந்து மெசேஜ்தான் அனுப்புறானுங்க முழு நேரமும் (ஒரு வேளை இந்தப் படத்துக்குதான் அப்பிடியோ?) பின்னாடி இருந்து படம் பாக்க கண்ணு கூசுனதாலே அம்மணியோட ஒரே எச்சரிக்கையோட செல்லை மூடிட்டான் எதுத்த சீட்டு பொடியன். பொடிசுகள் கொஞ்சம் இடம் பொருள் ஏவல் கத்துகிட்டா நல்லது.
படம் ஆரம்பிச்சவுடனேயே எனக்குத் தெரிஞ்சுடிச்சு, இதுல விக்ரம் ஹீரோ பீஸ் இல்ல காமடி பீஸ்னு. இந்த மாதிரி ஒரு குப்பை படத்தை சமீபத்துல நான் பாத்தது இல்ல, சிவாஜிக்குப் பிறகு :)
இந்தியன், அன்னியன், ஜென்டில்மேன், சிவப்பதிகாரம், ரமணா எல்லாத்துலருந்தும் தலா ஒரு சிட்டிகை எடுத்து, இஷ்டத்துக்கு உப்பு, காரம் சேர்த்து, சகிக்க முடியாமப் பண்ண சமையல் இந்தப் படம். எனக்கு விக்ரம் நடிப்பு பிடிக்கும் (அந்தக் கோணவாய் அசைப்புகள் தவிர). இந்தப் படத்தில், அவர் நடிப்பு, ஸ்டைல் அருமை. ஸ்ரேயாவை எப்பிடித்தான் ரசிக்கிறாய்ங்களோ தெரியல.
வடிவேலு காமடி - இர்ரிடேட்டிங் பீஸ். ஒரு சில சீன் தவிர மற்றவை டூ மச், எரிச்சல்தான் வருது. பாடல்கள் எல்லாம் 'A' ரகம். சத்தியமாக குழந்தைகளுடன் பூனைக்குட்டியையும், மீனாகுமாரியையும் பார்க்கமுடியாது. எனக்கு அண்ணா நகரில் உள்ள ஒரு 'கறிக் கடைதான்' ஞாபகத்துக்கு வந்தது. அசிங்கமான அசைவுகள், பாடல் அர்த்தங்களுக்காகவே 'வயது வந்தோர்' சான்றிதழ் கொடுக்கவேண்டிய படம். நல்லவேளை, குழந்தைகளை கூட்டிக்கொண்டு வரவில்லையென்ற நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
இந்தப் படத்தை படம் சம்பந்தப்பட்ட ஒருத்தர் குழந்தைகளுக்கான படம்னு சொன்னதா கேள்விப்பட்டேன். அவரை, எதால் அடித்தாலும் தகும். நம் குழந்தைகளை எந்த அளவுக்கு மனநோய் கொண்டவர்களாக நினைத்திருப்பார்கள்? வில்லு படத்துக்கும் ஒருத்தர் இதே மாதிரி சொன்னதாகக் கேள்வி.
ஒரு ஆறுதலான விஷயம், தமிழ்த் திரைபட வரலாற்றில் முதன்முறையாகன்னு நினைக்கிறேன், மெக்சிகோவில் படப்பிடிப்பு. மெக்சிகோ ஒரு அருமையான நாடு. கிட்டத்தட்ட இந்தியர்கள் மாதிரியானவர்கள் அவர்கள். இன்னும் பல இடங்களைக் காண்பித்து இருக்கலாம். ஏனோ, ஒரு பாடலுடன் முடிந்துவிட்டது.
மொத்தத்தில், எள்ளளவும் லாஜிக்கே இல்லாத ஒரு கதை. அணு அளவும் நடைமுறை சாத்தியம் இல்லாத தீர்வுகள். இதுக்கு முன்னே இதேமாதிரி வந்தக் குப்பைகள் கொஞ்சம் ரசிக்கிறமாதிரியாவது இருந்தன (உ.ம்: காமெடி). ஒரு வரி நீள நல்லவிஷயத்துக்கு 3+ மணி நேரம் நோகடிக்கிறார்கள். நான் அதிகமாகப் படம் பார்ப்பவன் அல்லன். குறைந்தது 5 பேராவது எனக்கு பரிந்துரை செய்யணும். ப்ளாக்கர்ஸ் விமர்சனம் பார்த்துட்டுதான் படமே போகாலாமான்னு யோசிப்பேன். எனக்கு சினிமா பத்தி அவ்வளவு ஞானமும் கிடையாது. எனக்கு இருக்குற உக்கிரச் சனி, இந்தப் படம் விஷயத்துலயும் விளையாடிடுச்சு.
ப்ராக்டிகல் திங்கிங் இல்லாத இன்றைய தமிழர் தலைமுறை, சினிமாவில் நிம்மதியையும், பிரச்சினைகளுக்குத் தீர்வையும் தேடுவதைப் பார்க்கும்போது, மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஏதோ, இந்தக் குப்பையைப் பார்த்தவுடன், கண்டிப்பா ரெண்டு வரி எழுதனும்னு தோண்றியது. எழுதியாச்சு. எவர் மனமும் புண்பட்டிருந்தால் மன்னித்தருள்க.
கந்தசாமி பாத்துட்டு நொந்தசாமியின் கதை
Posted by தஞ்சாவூரான் at 12 comments
நாதியத்துப் போனோமோ??
சில வாரங்களாக நடக்கும் நிகழ்வுகளால் மனது மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். ஈழத்தில் நடக்கும் படுகொலைகளும், மிகவும் நேசித்தவர்கள் பற்றி வரும் சரிபார்க்க இயலா செய்திகளும், தமிழக, இந்திய, உலக துரோகங்களும் மனதை என்னவோ செய்கின்றன. தமிழனாகப் பிறந்தது எவ்வளவு கேவலமான நிகழ்வு என்பது, ஈழச் சகோதரர்களின் அவலத்தைப் பார்த்தும் பாராததுபோல் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் சக தமிழர்களின் செயல்களையும், இந்திய, தமிழக, உலக அரசுகளின் பாராமுகத்தையும் பார்க்கும் போது தெரிகிறது.
என் பதினைந்தாவது வயதில், சிங்களச் சிறைகளில் கொடூரமாகக் கொல்லப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரது படங்களை நோட்டுப் புத்தகத்தில் பிறர் காண ஒட்டிவைத்தது, ஊர் வீதிகளில் தொண்டை கிழிய 'ஜெயவர்த்தனே ஒழிக' கோசம் போட்டு, போராளிகளுக்கும், அகதிகளாக வாழ வழியின்றி தொப்புள் கொடி உறவு தேடி வந்தோர்க்கு உணவு, உடை சேகரித்துக் கொடுத்தது, உண்மையான தமிழினத் தலைவன் வந்து விட்டான் ஈழத் தமிழர்க்கு சீக்கிரம் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை மனதில் வைத்தது, ஊர் முழுக்கப் போராளிகளின் வீடியோ காட்சிகளைத் திரையிட வைத்தது, தமிழக/இந்தியத் தலைமை மீது நம்பிக்கை வைத்தது, உலக சமுதாயத்தை முட்டாள்போல் நம்பியது அனைத்தும் வீணாய் போனதுபோல் ஒரு உணர்வு.
நமது இனம் ஒரு பக்கம் அழிந்துகொண்டிருக்கும்போது, அதைப்பற்றிய கவலை கடுகளவேனும் இன்றி 20/20 பார்க்கும் ஒரு கூட்டம். பணத்துக்கும், பதவிக்கும் ஆளாய்ப் பறக்கும் அரசியல் வியாதிகள் ஒரு பக்கம். இதான் சாக்கு, அழிப்போம் தமிழினத்தை என்று தன் போக்குபோல் எழுதும்/எழுதிய ஊடகங்கள் ஒரு பக்கம். கடைசி நேர எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு தேர்தலில் வாலை ஆட்டிய கூட்டம் ஒருபக்கம்.
கூவம் சாக்கடை மேல் குடியிருக்கும் நமக்கு, நம் வீட்டுக்குள் கூவம் வரும் வரை கவலை இல்லை.
குப்பைகளின் நடுவில் குடியிருக்கும் நமக்கு, வெளியில் குப்பை போட இடமின்றி நம் வீடு குப்பை மேடாகும் வரை கவலை இல்லை.
நிலத்தடி நீர் சாக்கடையாலும், கடல் நீராலும் அசுத்தமடைந்தாலும் bottled water கிடைக்கும் வரை தண்ணீர் பற்றிய கவலை இல்லை.
புகையாலும், தூசியாலும் காற்று அசுத்தமடைந்தாலும், நம் நுரையீரல் காற்றுக்கு ஏங்கி நிலம் மேல் மீன் போல் மூச்சுத் திணறி சாகும் வரை கவலையில்லை.
இவைகள் போல் ...
என் வீட்டுப் படியேறி சிங்களவனோ, வேற்று மொழி/நாட்டுக்காரனோ என் உரிமையைப் பறித்து, என்னை வெளியில் தள்ளும்வரை .... எனக்குக் கவலையில்லை என்று ஒரு பெருங்கூட்டம்.
ஒரு இத்'தாலி' காரணத்தோடு அறுந்ததற்கு, பல்லாயிரம் தமிழ்த்தாலிகள் அறுவது கண்டு, ஒரு கட்சித் தலைவியாக வேண்டாம் ஒரு பெண்ணாகக் கூட வருத்தப் படாத ஒரு எந்தத் தகுதியும் இல்லாத ஒரு பெண்மணிக்குத் தலைமை மகுடம் சூட்டி மகிழும் ஒரு கூட்டம்.
ஒரு குருமார் ஏதோ ஒரு நாட்டில் கொல்லப்பட்டதற்கு வெகுண்டெழுந்த, வாயைத் திறந்த, தமிழன் சாவதைக் கண்டு எதுவும் நடக்காததுபோல் வாய்மூடி மவுனியாக இருந்த 'தலப்பாகட்டு'க்குப் பிரதமர் பதவி கொடுக்க ஓயாது வேலை பார்த்த ஒரு கூட்டம்.
குடும்பத்து உறுப்பினர்க்கு ஒருவர் விடாது பதவிகளைப் பெற்று, மன்னராட்சியை மறுபடி கொண்டுவர அயராது பாடுபடும் தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு கூட்டம்.
instant coffee போல், உடனடித் தமிழர் ஆதரவு நிலையெடுத்துத் தமிழர் தலைவர் போல் தமிழர் தலைவியென பட்டம் சூடிக்கொள்ள துடிக்கும் தங்கத் தலைவியின் சேனைக் கூட்டம் ஒரு புறம்.
இக்கூட்டங்களுக்கு நடுவில்,
உணர்வுள்ள தமிழர் நாம் நாதியத்துப் போனோமோ??
Posted by தஞ்சாவூரான் at 10 comments
Labels: தமிழினம்
'சூப்பர் ஸ்டார்' பட்டத்தைத் துறக்க ரஜினி முடிவு. தனக்கு அந்தத் தகுதி இல்லையென அறிவிப்பு!
'சூப்பர் ஸ்டார்' என்று தன் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென தான் அந்தப் பட்டத்துக்குத் தகுதியானவர் இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். தன்னை விட முதல்வர் கருணாநிதி இப்பட்டத்துத் தகுதியானவர் என மேலும் தெரிவித்துள்ளார் எனத் தெரிகிறது.
தான் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பொது வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் நடித்திருப்பதாகவும் ஆனால், தற்போதைய முதல்வரைப் போல் தம்மால் நடிக்க இயலாது எனவும் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என நம்பப்படுகிறது.
ரஜினியைத் தொடர்ந்து, 'உலகநாயகன்','சூப்பர் ஆக்டர்','அல்டிமேட் ஆக்டர்','ஆக்சன் ஆக்டர்', 'அதிரடி ஆக்டர்' போன்ற பட்டங்களின் நாயகர்களும் தங்கள் பட்டங்களைத் துறப்பார்கள் எனத் தெரிகிறது. தன் தள்ளாத வயதிலும், இத்தனைத் திறமையாக நடிக்கும் முதல்வருக்கு தங்கள் பட்டங்களை சமர்ப்பிக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர் என்று செய்தி தெரிவிக்கிறது.
உச்சகட்டமாக, 'நடிகர் திலகம்' என்ற பட்டத்தை தம் குடும்பத்தினர் முதல்வருக்கு விட்டுக் கொடுப்பதாக, மறைந்த மாபெரும் நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தார் அறிவித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாராவது மேற்கண்ட தகவல்களைச் சரிபார்த்துச் சொல்லுங்களேன்....
Posted by தஞ்சாவூரான் at 24 comments
Labels: தமிழினம்
கை சின்னத்தைக் கை கழுவுவோம் ...
இலங்கையில் சிங்கள வெறி அரசின் தமிழின ஒழிப்புக்குத் துணை போகும் தமிழர் விரோத காங்கிரஸை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம். அன்னியரை விரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் இப்போது ஒரு அன்னியர் தலைமையின் கீழ் 'இயங்கும்' ஒரு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டது வேதனையாகும்.
இந்திராவைக் கொன்றவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குப் பிரதமர் பதவி (அவர் இயங்க இயலாதவராக இருந்தாலும்). ராஜீவின் மரணத்தில் ஆயிரம் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப் படாத நிலையில், அந்த சம்பவத்தைக் காரணம் காட்டி, ஒட்டு மொத்த இலங்கைத் தமிழ் சமுதாயத்தை இன வெறி ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுவதை ரசிக்கும் மானக்கெட்ட காங்கிரஸ்காரர்களுக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்டுவோம்.
கை சின்னத்தை ....
கை கழுவுவோம் ...
Posted by தஞ்சாவூரான் at 11 comments
Labels: இந்தியா
ஈழத்தமிழர்களே, வேறு வேலையில்லையா உங்களுக்கு?
ஈழத்தில் சிங்களவன் தமிழனைக் கொல்றானாம். அதை நிறுத்த இந்திய, தமிழகத் தமிழர்கள் மற்றும் தலைவர்கள் ஆதரவு வேணுமாம். என்ன கோளாறு உங்க புத்தியில?
பக்கத்து நாட்டுக்காரன் எங்க வீட்ல வந்து எங்க குடும்பத்தக் கொத்தா சுட்டு போட்டுட்டு போனாலும், பெரியண்ணன் கிட்டதான் நாங்க போய் புலம்புறது வழக்கம். அவரு என்ன சொல்றாரோ அதான் எங்க கருத்தும். அவரு பொத்திகிட்டு இருன்னு சொல்வாரு, நாங்க அப்படியே இருப்போம். அப்பப்போ சவுண்ட் விடுவோம், அடங்கிடுவோம். ரொம்ப வருஷ பழக்கம் இல்லையா? அதான் சீக்கிரம் மாத்திக்க முடியல. அதுக்காக எங்கள அடிமையின்னெல்லாம் சொல்லப் பிடாது.
ஈழத்துல தமிழன் தலைகள் பந்தாடப்படுதாம். கிரிக்கெட் பந்து மேல வச்ச கண்ணையே எங்களால மாத்தமுடியல. உங்கள நோக்கி நீட்டப்படுற 'Gun' ஐ எப்படி அய்யா பாக்க முடியும். எங்களுக்கு முக்கியம், தோனி எவ்வளவு அடிச்சான், சேவாக் எத்தனை புடிச்சாங்கிறதுதான். நீங்க ஒரு பக்கம் அவுட்டாயிகிட்டு இருங்க. தெண்டுல்கர் அவுட் ஆக கூடாதுங்குறதுதான் எங்களுக்கு வேண்டுகோள். எல்லா எஃப் எம் லயும், ரண்ணிங் கமெண்ட்ரி குடுக்குறான் இலங்கையில நடக்குற கிரிக்கெட் பத்தி. உயிருக்குப் பயந்து எம் தமிழரின் ரண்ணிங் பத்தி, நோ வொர்ரி.
அன்னியர்களுக்கு அடிமைப் பல்லக்கு தூக்குறத நாங்க இன்னும் நிறுத்தல. தோள் வலியும் இன்னும் போகல. இந்த வலியில, உன் சகோதரனின் பிணத்தைத் தூக்குற உன் வலி எனக்கு எப்பிடி அய்யா தெரியும்?
எங்க தமிழ்நாட்ல, தளபதி, கேப்டன், புரட்சி, புயல், சூப்பர், தானைக்குத் தலைவன், போர்வாள், செங்கோல் எல்லாம் இருக்கும். மேடைக்கு மேடை வாள் கொடுப்போம் தங்கத்தில. அதப் பாத்துட்டு, எங்களுக்கு வீரம் இருக்குன்னு நீங்க நம்புனா, எங்கள என்னப் பண்ணச் சொல்றீங்க? நாங்க வாய்ச்சொல்லில் மட்டும் வீரர்கள்னு எப்படி எங்க வாயால சொல்லச் சொல்றீங்க?
எங்கத் தங்கத் தலைவர்களும் தலைவிகளும், தப்பு செஞ்சுட்டு ஒரு நாள் உள்ளே இருந்தாலும், எங்க உயிரக் கொடுப்போம். நீங்க குண்டடிப் பட்டு சாவுறதுக்கு நாங்க சாக முடியுமா? சரி செத்தாலும், செத்தவன் பொண்டாட்டிக்கு அடுத்த எலக்சன்ல சீட்டுக் குடுப்பீங்களா? இல்ல ஒரு கட்சி போஸ்ட்டு குடுப்பீங்களா?
எங்க பட ஹீரோக்கள் படத்துல பண்ற சண்டையக் காசு குடுத்துப் பாத்துட்டு, வீரம் நிஜத்துல இருக்கும்னு நீங்க நம்பினா, நாங்க என்ன பண்றது? எங்க ஹீரோக்களுக்கு அவங்க நிஜ முதலிரவுல கூட டைரக்டர் வந்து ஸ்டார்ட் ஆக்சன் சொன்னாத்தான் வீரமே வரும். நீங்க ரொம்பத் தொல்லை பண்ணா, படத்துல வர ஒரு ஹீரோ போற்றி பாட்டுல ஒரு லைன் வர வைப்போம். இதெயெல்லாம் நீங்க உண்மைன்னு நம்பினா எப்பிடி தம்பி?
எங்க தலைவருங்களும், தலைவிங்களும் ஒரு 100 தலைமுறைக்காவது சொத்து சேக்கனும்ங்குற வெறியில பிசியா இருக்காங்க. உங்க பசியா அவங்க கண்ணுக்குத் தெரியும்?
தினமும் உங்க சகோதரர்களின் ரத்தம் பாக்குறீங்களா? அதெல்லாம் சும்மா. நாங்க எங்க சினிமாக்கள்ல பாத்து பாத்து மனசு மரத்துப் போச்சு. உங்கள் சகோதரிகள் தினமும் கற்பழிக்கப்படுறாங்களா? அடப் போங்கப்பா, தினமும் டிவிய தொறந்தா, எங்க சினிமா சகோதரிகள் எதிர்ப்பு இல்லாமலே கற்பழிக்கிறாங்க எங்க ஹீரோக்கள.
இப்படி ஆயிரம் வேலைகள்ல நாங்களும் எங்க தலைவர்களும் பிசியா இருக்கும்போது, உங்களுக்கு எப்பிடியப்பா நாங்க உதவ முடியும்? போங்கப்பா, போய் வேற வேலை இருந்தா பாருங்க. நாங்க மனம் மரத்துப் போன மரத்தமிழர்களா ஆயிட்டோம், ரொம்ப வருஷமா... இவ்வளவு நேரம் உங்ககிட்டே பேசிகிட்டு இருக்குறது தெரிஞ்சுதுன்னா, மெய்னோக்களும், நாயர்களும், சிங்குகளும், மேனன்களும் கோச்சுக்கப் போறாங்க. எஜமானர்களப் பகைச்சுக்க முடியுமா?
Posted by தஞ்சாவூரான் at 30 comments
Labels: தமிழினம்
கோயம்பேட்டில் (CMBT) பல்லிளிக்கும் நமது ஜனநாயகம்
கடந்த ஒரு மாசமா இது பத்தி எழுதனும்னு நெனச்சுட்டுருந்தேன். அதுக்குள்ள சரி பண்ணிடுவாங்கன்னு ஒரு நப்பாசை! ஆனா, அவ்வளவு சீக்கிரம் சரி பண்ணிடுவோமான்னு இன்னும் 'அது' அப்பிடியேதான் இருக்கு.
சரி, ரொம்ப 'பொடி' யெல்லாம் வேணாம். விஷயம் இதுதான். 'இது' பத்தி நிறைய பத்திரிகைகள்ல வந்திருக்கலாம். இருந்தாலும், 'இதனால்' தினமும் ஒரு வகையில் பாதிக்கப்படுபவன் என்கிற வகையில், என்னோட புலம்பல்!
ஆசியாவின் பிரம்மாண்ட பேருந்து நிலையத்தின் முகப்பில் இருக்கும் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களின் 'விளம்பரங்கள்' அந்த சாலையைப் பயன்படுத்துவோரின் கண்களில் இருந்து தப்பித்தால், அவர்கள் கண்டிப்பாக கண் மருத்துவரிடம் சென்று தயவு செய்து கண்களை பரிசோதித்துக் கொள்ளவும்.
இது அம்மாவோட விளம்பரம்:
இது அய்யாவோட விளம்பரம்:
இந்த ரெண்டு விளம்பரங்களுக்கும் கொஞ்சம் எதிரே (ஒரு 50 - 100 அடிகள் இருக்கும்) ஒரு போக்குவரத்து சந்திப்பு இருக்கு. இது ஒரு முக்கியமான சந்திப்பு. கோயம்பேடு நிலையத்துக்கு வரும் பேருந்துகள் இது வழியாகத்தான் புயலெனப் பாயும். வட பழனியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த இடத்துக்கு வந்தவுடன், ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகிடுவாங்க! ஏன்னா, அவங்களுக்கு சிக்னல் குடுக்க கம்பம் இருக்கு ஆனா விளக்குதான் இல்ல!
அந்தக் கம்பம் பரிதாபமா இப்பிடித்தான் நிக்குது:
ஒவ்வொரு நாளும் உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில், இங்கு நடக்கும் போக்குவரத்துக் கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சிக்னல் இருக்கா இல்லையான்னு தெரியாம, பேருந்து வராத நேரத்துல, சடாருன்னு போறாங்க. திடீர்ன்னு பேருந்துகள் உள்ளே போகும், வெளியே வரும். அன்னைகளுக்கு வார்த்தை அபிஷேகம்தான்.
லட்சக்கணக்குல கொட்டி சுய விளம்பரம் செய்து கொள்ளும் அரசர்களுக்கும், அரசிகளுக்கும் அந்த செலவில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாத மூன்று விளக்குகள் போட நேரமில்லை அல்லது அக்கறையில்லை. ஆள்பவர்களுக்கு விளம்பரம் கொடுத்து காவடி தூக்கும் அதிகாரிகளுக்கும் இதப் பத்திக் கவலையுமில்லை.
ஆக, நமது ஜனநாயகம் பல்லிளிக்கும் பல இடங்களில் இதுவும் ஒன்று.
Posted by தஞ்சாவூரான் at 8 comments
Labels: சென்னை
ச்சும்மா...ஒரு வெளம்பரம்தான்! ASTS opens its doors for business in Chennai!
ஹை... நானும் தொழிலதிபர் ஆயிட்டேன்!!
இதோ, ஆரம்பிச்சாச்சு சென்னை மாநகரில் முதல்முறையாக Data Warehousing - Training, Staffing and Consulting Company! (இரண்டாவது, மூன்றாவதுன்னா சொல்லிடுங்கப்பா!) என்னுடைய மற்றும் இந்தியா, அமெரிக்காவிலிருந்து train பண்ணப்போகும் நண்பர்களின் 13+ வருட அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு இதை ஆரம்பிச்சு இருக்கோம். எல்லா பேருக்கும் 10+ வருட Data Warehousing experience இருக்கு.
நாங்க பயன்படுத்துற எல்லா மென்பொருளும் licensed. ரொம்ப பளபளன்னு அலுவலகத்தை மட்டும் வச்சுகிட்டு சரக்கெதுவும் இல்லாம பண்ணாம, கல்வியின் தரம் மட்டுமே நமது குறிக்கோள். மத்த இடங்கள்ல வாங்குறத விட கட்டணம் குறைவு, எந்த நிறுவனத்தை விடவும் quality training எந்த விதத்திலேயும் குறையாது!
என்னென்ன சொல்லித் தருகிறோம்?
- Diploma in Data Warehousing
- Certificate in Informatica 8
- Certificate in Microstrategy 8
- DW&BI Project Management
அமெரிக்காவிலிருந்து சொல்லித் தரதுக்கு, நாங்க GoTo Meeting Software use பண்றோம். Live audio will be broadcasted and you can ask questions to your live instructor. We also save the training sessions if you want to refer in the later times. We use overhead Projector so that all students will see the same screen while class in progress.
படிச்சு முடிச்சதும், நாங்களே வேலைக்கும் ஏற்பாடு செய்றோம். இது ஒரு value added service only! எங்களோட பார்ட்னர்ஸ் கிட்ட job openings இருந்தா அல்லது எங்க projects க்கு தேவைப் பட்டா உடனடி வேலை வாய்ப்பு. இந்தியா தவிர சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் எங்களுக்கு partners இருக்காங்க. அங்கே வேலைக்கும் நாங்க ஏற்பாடு செஞ்சு தருவோம்.
முழுக்க முழுக்க தரம் மட்டுமே குறிக்கோளா வச்சு ஆரம்பிச்சு இருக்கோம். No fake promises :)
உங்களோட ஆதரவுக்கு நன்றி! பதிவர்கள் மற்றும் பதிவர்களால் பரிந்துரைக்கப் படும் மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் (ஒரு நாளைக்கு 5 பின்னூட்டங்கள்) உண்டு (போலிகள் மன்னிக்கவும்) :)
மேலதிக தகவல்களுக்கு:
Axiom Semantics Technology Services (ASTS)
551/17 P.H Road (Opp. Indian Hospital)
Arumbakkam, Chennai 106
Tel: 044-43556686
Email: info@axiomsemantics.com
Web: www.axiomsemantics.com
Posted by தஞ்சாவூரான் at 19 comments
Labels: சொந்தக் கதை









