Monday, April 7, 2008

இவரல்லவோ வாத்தியார்?

அஞ்சும் அஞ்சும் எத்தனைன்னு கண்டுபுடிக்க கால்குலேட்டரத் தேடும் இந்தக் காலத்துல, மனக்கணக்கு மூலமே மாணவர்களை, குறிப்பா கிராமத்து மாணவர்களைச் சிக்கலான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்கச் செய்து அசத்தி வருகிறார் ஒரு ஆசிரியர்!

அந்த ஆசிரியர் பெயர் : திரு.எம்.காளிமுத்தன். இராமனாதபுரம் அரசினர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 2006 ம் ஆண்டுக்கான 'டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது' பெற்றவர்! கிராமத்து மாணவர்கள் தங்கள் ஞாபக சக்தியைப்் பயன்படுத்தி கணக்கிலும், ஆங்கிலத்திலும் வெற்றியடைய உதவி செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அவர்களின் புதைந்து கிடக்கும் சக்தியை வெளிக்கொணருவது இவரின் ஆசை. அதே சமயம், அவரின் இந்த பயிற்றுவிக்கும் முறைக்கு காப்புரிமை (patent) பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்!

திரு.காளிமுத்தன் அவர்களின் முயற்சி வெற்றி பெறவும், அவரின் தொண்டு தொடரவும் நம் வாழ்த்துக்கள்!

அவரையும் அவருடைய அசத்தும் மாணவர்களையும் நீங்கள் youtube-ல் சந்திக்கலாம்!

நன்றி: அருனா சேதுபதி அக்கா, ரவி வெங்கடேஷ் மற்றும் aimsindia.net

Thursday, March 13, 2008

லஞ்சம் இல்லாம காரியம் சாதிக்கனுமா? இவரைப் போய் பாருங்க!

இவர் பேரு Mr. RTI. இவருக்கு வயசு 3 தான். ஆனா பவர் ரொம்ப அதிகம்! இவர் எப்பிடி உங்களுக்கு உதவி பண்ணுவாரு?

உதாரணத்துக்கு, நீங்க உங்க புது வீட்டுக்கு மின்சார இணைப்பு வாங்கனும். பொறுப்பான குடிமகனா, விண்ணப்பம் எல்லாம் நிரப்பி, வட்டார மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிச்சிட்டீங்க. சாதாரணமா, 10 நாள் எடுக்கவேண்டிய இந்த சேவை 20 நாளாச்சு, 40 நாளாச்சு ஒண்ணுத்தையும் காணோம். போன் பண்ணி பாக்கிறீங்க, நேரா போயி பாக்கிறீங்க ம்ம்ம்ஹூம்ம் ஒண்ணும் ஆகலே. வெறுத்துப் போய் இருக்குற நேரத்துல, பக்கத்து தெரு பரமசிவம் வறாரு.

'என்னங்க, இதுக்குப் போய் வருத்தப் படுறீங்களே. ஜேயீயை பாத்து ஒரு ஆயிரம் ரூவா குடுத்தா டாண்ன்னு வரும் கரண்டு' ன்னு சொல்றாரு. நீங்க இந்த சமயத்துல தாராளமா நம்ம RTI யை அணுகலாம்!

நீங்க செய்யவேண்டியது எல்லாம், நேரா வட்டார மின்வாரிய அலுவலகத்துக்கு போங்க. அங்கே போய், 'Public Information Officer - PIO' ஐப் பாக்கனும்னு சொல்லுங்க. அவர்கிட்டே போய், ஒரு பத்து ரூவா கட்டுனா ஒரு படிவம் குடுப்பாரு. அத வாங்கி, உங்க முகவரி, நீங்க விண்ணப்பம் அனுப்புன நாள், அதற்கான கட்டணம் கட்டப்பட்ட ரசீது (நகல்) எல்லாம் சேத்து, சுருக்கமா, தெளிவா உங்கப் பிரச்சினையைப் பத்தி எழுதுங்க. 40 நாள் ஆச்சு, என் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்குன்னு கேள்வி கேட்டு படிவத்த முடிச்சு அத அவருகிட்டே குடுத்துட்டு வாங்க. வேற யாருக்கும் எதுவும் குடுக்கவேண்டாம்.

நேரா போக முடியலேன்னா பரவாயில்ல. ஒரு வெள்ளைத்தாளில் மேற்கண்டவற்றை எழுதி, 10 ரூபாய்க்கு போஸ்டல் ஆர்டரோ இல்ல டிமாண்ட் டிராப்டோ எடுத்து (Payable to PIO - Department Name) சாதாரண தபால் அல்லது பதிவுத் தபாலில் கூட அனுப்பலாம். சில தபால் நிலையங்களுக்கு போயி கூட படிவத்தைக் குடுக்கலாம். அவங்க, பணத்த வாங்கிகிட்டு படிவத்த ஏத்துகிட்டதுக்க்கான ஒரு ரசீது குடுப்பாங்க. எந்தெந்த தபால் நிலையங்களில் இதச் செய்யலாம்? இங்கே போய் பாருங்க.

உங்க படிவம் ஏத்துக்கலைன்னா? கவலையே வேண்டாம். அதுக்கும் நம்ம RTI ஒரு வழி பண்ணியிருக்காரு. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தல இருக்கும். இந்தத் தலைங்களுக்கு, இந்த மாதிரி படிவத்த ஏத்துக்காத PIO - க்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் போட அதிகாரமிருக்கு. எண்ணி 30 நாட்கள்ல (35 நாட்கள் நீங்க Assistant PIO கிட்டே படிவத்த குடுத்துருந்தா. உயிர் போற அவசரம்னா, 48 மணி நேரத்துல உங்களுக்கு தகவல் குடுத்தாகனும்்!) உங்களுக்கு தகவல் எதுவும் வரலன்னா, நீங்க அப்பீல் பண்ணலாம். பொதுவா, PIO-க்களுக்கு மேலே உள்ளவர் அப்பீல பாக்குறவரா இருப்பாரு.

இது சும்மா ஒரு மாதிரிதான். நெறய விசயங்களுக்கு நீங்க இவர் உதவிய நாடலாம்!
இவரப் பத்தி மேலும் தெரிஞ்சிக்கனுமா? கீழே உள்ள சுட்டிகள்ல போய் பாக்கலாம்:

http://www.rti.gov.in/
http://rti.aidindia.org/
http://www.righttoinformation.org/

அமெரிக்காவுல இருக்கீங்களா? கவலையே வேண்டாம். இவர நீங்க வாஷிங்டனில் சந்திக்கலாம்!

இவர் கூட பழகிப் பாருங்க. உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிடும் :) மத்தவங்களுக்கும் இவரப் பழகிப் பாக்கச்சொல்லுங்க. வாழ்த்துக்கள்!

நன்றி: http://www.indiatogether.org மற்றும் http://aidindia.org

Thursday, February 14, 2008

பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்!

என்னங்க, ஆச்சரியமா இருக்கா? இப்ப இருக்குற அமெரிக்க நுகர்வுக் கலாச்சார வாலன்டைன்ஸ் டே இல்ல அது. ஒரு ஜாலியான (அர்த்தமே புரியலேன்னாலும்!) கொண்டாட்டம்.
எனக்கு 7-8 வயது இருக்கும்போதே அந்த விழா அழிந்து விட்டது. நினைவில் இருப்பவை மட்டும் இங்கே..


அந்த விழாவுக்கு பேரு, காமன் பண்டிகை (காமாண்டி - எங்க ஊரு மொழியில!). ஒவ்வொரு தெரு முனையிலேயும் அல்லது நால்ரோடு கூடும் இடங்களிலேயும் சின்னதா ஒரு இடத்தைத் தேர்வு பண்ணி கீழே சாணம் போட்டு மொழுகி விட்ருவாங்க. நாலு மூலையிலேயும் சின்ன சின்னக் கம்பு நட்டு, சின்ன பந்தல் மாதிரி போட்டுடுவாங்க. நடுநாயகமா, ஒரு கம்பு நட்டு அதுமேலே வக்க பிரிய (வைக்கோல் கயிறு) சுத்தி உச்சியில ஒரு வரட்டிய வச்சு கட்டிவிட்ருவாங்க. அந்தக் கம்பு ஒரு கரண்டிய நட்டு வச்ச மாதிரி இருக்கும் (உத்தேசமா!). அதுக்கு, மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு எல்லாம் வச்சு அலங்காரம் பண்ணியிருக்கும். 'வசதியான' தெருவா இருந்தா அதுக்குள்ள ஒரு விளக்கு ஒன்னு வச்சு சாயந்திரம் ஆனா எரியவிடுவாங்க. இதுல பாருங்க, பொம்பளைக யாரும் இந்த 'விசேசத்துல' கலந்துக்க மாட்டாங்க. ஏன்னு எனக்குத் தெரியல!

இது ஒரு 15 நாளைக்கு அப்படியே இருக்கும். யாரும் கண்டுக்க மாட்டாங்க!! தெருப் பெருசுங்க 15ஆம் நாள் முடிவுல ஒன்னு கூடி, இன்னிக்கு ராத்திரிக்கு 'காமாண்டி கொளுத்துறது' அப்பிடின்னு 'அதிகாரப்பூர்வமா' அறிவிப்பாங்க! அன்னிக்கு ராத்திரிதான் விசேசம். சாயந்திரம் ஆனா, வீட்டுல வெளையாடப் போறதா பொய் சொல்லிட்டு, தெருமொனைக்கு ஜூட் விடுவோம். வீட்டுப் பெருசுங்களுக்குத் தெரியும், காமாண்டி கொளுத்துறதப் பாக்க போறான்னு!

சாயந்திரமே, தெருவுல இருக்குற 'தொழிலதிபர்கள்' (பெட்டிக் கடைக்காரர்கள் என்று பொருள் கொள்க!) மற்றும், 'பெருந்தனக்காரர்கள்' அளிக்கும் அஞ்சு பத்த வச்சுகிட்டு, பொட்டுக்கடலையும், நாட்டுச் சக்கரையும் வாங்கி வச்சுருப்பாங்க. ஒரு ஏழு எட்டு மணி ஆனவுடனேதான்யா, மெயின் கூத்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு 'பாட்டுக்காரர்' இருப்பார். அவருக்கு 'ஆனத' பாத்துகிட்டா (செல பேரு வெத்தலை பாக்கு - low maintenance, செல பேரு 'தண்ணி மிண்ணி' கேப்பாங்க!), அவரு ஸ்பாட்டுக்கு வந்துடுவாரு கொரல தட்டி சட்டி சரி பண்ணிகிட்டு!

பாட்டுக்காரர் சிக்னல் குடுத்தவுடனே, ஒரு ரெண்டு விடலப் பசங்கள செலெக்ட் பண்ணி, திருநீறு பூசி சாமி கும்பிடச் சொல்லுவாங்க. ஒருத்தன் ரதி, இன்னொருத்தன் 'மம்முதன்' (மன்மதன்). ரெண்டு பேரும் ரெண்டு குழுவுக்குப் பிரதிநிதி! ரெண்டு குழுவும் எதிரும் புதிருமா நிக்கும். பாட்டுக்காரர் நடுவாந்திரமா நிப்பார் (செல தெருவுல குழுவுக்கு ஒரு பாட்டுக்காரர் இருப்பார்). ரெண்டு குழுவுலேயிருந்தும் ஒரு 'பலசாலி' கையில் நீள துண்டோட இருப்பாரு. துண்ட அந்தந்த எளவட்டத்தோட இடுப்புல சுத்தி ரெண்டு மொனையையும் பலசாலி கையில வச்சுருப்பாரு. ரதி, மம்முதன் ரெடி. பாட்டுக்காரரு நல்லா கொரலெடுத்துப் பாடுவாரய்யா... அப்பிடி பாடுவாரு. நமக்கு இப்போ ஒண்ணும் ஞாபகம் இல்ல! அப்பிடி, பாடும் போது, ரதி பக்கம் பாடும்போது, மம்முதன் அப்பிடியே ரதி பக்கம் வருவாரு. ஒடனே பலசாலி, துண்ட ஒரு இழு இழுத்து மம்முதனக் 'கட்டுப் படுத்துவாரு'!! அதே மாதிரி, ரதி் பக்கமும் நடக்கும்.

பாட்டெல்லாம் முடிஞ்ச பெறகு (இல்ல, பாட்டுக்காரருக்கு 'சரக்கு' தீந்தபெறகு!), போட்டு வச்ச பந்தலப் பிரிச்சுப் போடுவாங்க. எல்லாத்தையும் கூட்டிக் குமிச்சுத் தீ வச்சுருவாங்க!!!! அப்படியே சைடுல, பொட்டுக்கடல வினியோகம் நடக்கும். தீ அணைஞ்சவுடனே எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவாங்க.

அடுத்த நாள், இன்னும் சரி கூத்து நடக்கும். அன்னிக்குத்தான் 'புலிவேடம்'!! வேடம் போடுறதுக்கு ஒருத்தர் ரெடியா இருப்பாரு. இத யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஒரு வீட்டில் ரகசியமா 'பெயிண்டிங்' நடக்கும். உடம்பு முழுதும் - ஆமா, உடம்பு முழுதும் (லங்கோடு ஏரியா தவுத்து!) பெயிண்ட பூசிகிட்டு, 'புலி' ரெடியாய்டும். செல படங்கள்ல காட்டுற மாதிரி துணிப்புலி இல்ல. வெளியூர்லருந்து 'டமுர்செட்டு' (drums set with clarinet) வந்து எறங்கி (அவங்களுக்கும் 'எறங்கி' இருக்கும்!) கூட்டம் கள கட்ட ஆரம்பிக்கும்! நாங்க வீட்டுல அதே பொய்ய சொல்லிட்டு 'புலி' ஆட்டம் பாக்க கெளம்பிடுவோம்.

எல்லாரும் ரெடியானவுடனே, டமுரு செட்டு அடி தூள் கெளப்பும். புலி ஆட ஆரம்பிக்க, வசூல் ராஜா மஞ்சள் பையோட பின்வர, ஊர்வலம் ஆரம்பிக்கும். ஒவ்வொரு வீடா போயி, ஒரு ஆட்டத்த போட்டுட்டு வசூல பண்ணிட்டு தொடருவாங்க. செல பேரு நெல்லு குடுப்பாங்க. செல பேரு வீட்டுகுள்ள போய் ஒளிஞ்சுகிட்டு, இல்லேன்னு பொய் சொல்ல சொல்லுவாங்க. இதுல, மாமன் மச்சான் புலி வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான்னா போச்சு. கணிசமா ஒரு 'துகை' (தொகை) போய்டும். அங்கங்கே புலிக்கு வாய் புளிக்க எலுமிச்சம்பழம் குடுப்பாங்க. அத வாயில கடிச்சுகிட்டு புலி வேக வேகமா போக ஆரம்பிக்கும். ஒரு ரெண்டு மூனு தெரு போனதுக்கு அப்புறம், புலிக்கு கொஞ்சம் கொஞ்சமா 'கிலி' புடிக்க ஆரம்பிக்கும். ஏன்னா, பெயிண்டெல்லாம் நல்லா காஞ்சு ஒடம்பு வறவறன்னு ஆக ஆரம்பிக்கும். வேர்வை சொரக்கும் ஆனா, வெளியில போக வழியில்லாமே 'புலி' படற அவஸ்தை பாவமா இருக்கும்!

ஒரு கட்டத்துல புலி வேற வழியில்லாம, போதுண்டா சாமின்னு ஊர்க்கொளம் பாத்து வேக வேகமா 'ஓட' ஆரம்பிச்சுறும். 'புலிப்படை' பின்னாலேயே மண்ணெண்ணை, சோப்பு சகிதம் ஓடும். ஒரு வழியா கொளத்தடியில போயி ஒக்காந்து, நண்டு சுண்டெல்லாம் பெயிண்ட சொரண்டி எடுக்கும். அப்ப 'புலி' படுற வேதன நமக்கெல்லாம் சிரிப்பா இருக்கும். ஒரு வழியா சொரண்டல் முடிஞ்சு ஒரு குளியலப் போட்டுட்டு, அப்பிடியே மத்ததயும் உள்ளே போட்டுட்டு புலி ரெஸ்ட் எடுக்க குகைக்குள்ள (வீடுதாங்க!) போயிடும். புலிப்படை, டமுரு செட்டுக்கு செட்டில் பண்ணி அனுப்பிட்டு, வசூல எடுத்துகிட்டு 'வேட்டை' தேடி கடைக்குப் போயிடுவாங்க!! நாங்களும் திட்டு வாங்க காதுகள ரெடி பண்ணிகிட்டு மெதுவா வீட்டுப் பக்கம் ஒதுங்குவோம்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் ஏதாவது புராண கதைய ஒட்டி நடந்ததா, அந்தப் பாட்டுகளுக்கு என்ன பொருள், ரதி, மன்மதன் உண்மை மனிதர்களா, ஏன் 'காமாண்டியை' எரிக்கிறாங்க - இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா இங்கே சொல்லுங்களேன்! இப்போ எங்க ஊர்ல இதெல்லாம் நடக்குறது இல்ல. எல்லாரும், 'நாகரீகமாயிட்டதாலே' இனிமே வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவங்கன்னு நெனைக்கிறேன். ஆனா, நான் பாத்தது கிட்டதட்ட வாலன்டைன்ஸ் தின கொண்ட்டட்டம்னுதான் சொல்லனும்.

கொசுறு: சிங்கப்பூரில் மட்டும்தான் இந்த நாளுக்கு ஒழுங்கான தமிழ்ப்படுத்தல் இருக்குன்னு நெனைக்கிறேன். அங்கே 'அன்பர்கள் தினம்' அப்பிடின்னுதான் சொல்றாங்க. அன்பு வைத்திருக்கும் யாருக்கும் வாழ்த்துக்கள், பரிசுகள் பரிமாறிக்கொள்ளலாம். ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???