Friday, October 29, 2010

கள் வேண்டுவோர் கழகம்

80களில் தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி அளித்திருந்த காலம். என் அப்பாவும் இன்னொரு உறவினரும் சேர்ந்து கள்ளுக்கடை வைத்திருந்தார்கள். அப்போது டாஸ்மாக் இல்லாத காலம், நகரங்களில் மட்டுமே 'சாராயக் கடை'கள் இருந்த காலம். உள்ளூர் குடிமக்களின் நலன் கருதி இந்தக் கடை திறக்கப்பட்டது!

கள் இறக்கவென்று 'தெக்கேருந்து' (தென் தமிழ்நாட்டிலிருந்து) கலியமூர்த்தி என்ற 'நாடாவி' (மரமேறுபவர்) வரவழைக்கப்பட்டு, எங்கள் இடத்தில் ஒரு குடிசை வீடும் அமைக்கப்பட்டு, தினமும் கள் விற்பனை ஜோராக நடந்தது. எங்கள் வீட்டில் இருந்த சில தென்னை மரங்களில் இருந்து 'தனிக்கள்' இறக்கி வீட்டுக்குப் போகும். சில மரங்களில் இருந்து 'பயனி' (பதநீர்) எடுக்கப்பட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பரிமாறப்படும்.

எனக்கு முதன் முதலில் கள் குடிக்கக் கற்றுக்கொடுத்தது என் அப்பாதான் (நல்ல அப்பாடான்னு முனுமுனுக்காதீங்க!). அரை லிட்டர் காணும்படி ஒரு சொம்பில் ஊற்றிக் கொடுப்பார். 'ஒடம்புக்கு நல்லதுடா. கண்ண மூடிகிட்டு இழுத்தெறி'ன்னு சொல்லுவார். ஒருமாதிரியான இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவை அது. கொஞ்ச நேரத்துக்கு சுள்ளென்று இருக்கும், அப்புறம் சரியாகிடும். தென்னை மரக்கள், பனைமரக்கள்ளை விட கொஞ்சம் இனிப்பு அதிகம். மயக்கம் குறைவு!நாடாவி, மரங்களைத் தேர்வு பண்ணி 'பாளை' சீவி விட்டுக் கட்டி விடுவார். சில நாட்கள் கழித்துதான் பாளை நுனி சீவி அதில் பானையைக் கட்டுவார். அடுத்த நாள் ஒரு சுரை குடுவையுடன் மேலேறி, ஒவ்வொரு பானையிலும் வடிந்திருக்கும் கள்ளை குடுவையில் சேகரித்துக்கொண்டு இறங்குவார். குடுவையில் பார்த்தால், ஊர்பட்ட பூச்சிகள் இறந்துகிடக்கும் (ஒரு வேளை போதைக்கு இதுதான் காரணமோ?) . பூச்சி, தும்பட்டைகள் வடிகட்டப்பட்டு இன்னொரு பெரிய பானையில் கள் சேகரிக்கப்படும். இப்படியே ஒரு 40-50 மரங்கள் ஏறி கள் இறக்குவார். நமக்கு ஒரு மாமரம் கூட ஒழுங்கா ஏறத் தெரியாது!!! பானையின் உள்புறத்தில் சுண்ணாம்பு தடவினால் அதில் கிடைப்பது பதநீர். அவ்வளவு சுவையாக இருக்கும். நோ மயக்கம்... :)கடையில் ஒரு பெரிய பானை இருக்கும். அதில் சேகரம் செய்யப்பட்ட கள் ஊற்றப்படும். நமக்கு கடைக்கு செல்ல அனுமதியில்லை!! கடை பக்கத்தில் ஒரு 'சாக்கனா கடை' இருக்கும். சுண்டல், ஊறுகாய், மாங்காய் வத்தல், முறுக்கு போன்ற சைடுகளுடன், அவித்த முட்டையும் ஆம்லெட்டும் கிடைக்கும். ரொம்ப நாளாக, போதைக்காக பானைக்கு கீழே ஊமத்தங்காய்களையும், பானைக்குள் பழங்கஞ்சியும் சேர்ப்பதாக ஒரு வதந்தியும் உலவியது. உண்மை தெரியவில்லை. அங்கு போய் நமக்கு சாப்பிடவும் அனுமதியில்லை.

கள்ளுகடை வைப்பதற்கு முன்பே என் அப்பா மன்னார்குடி பகுதி 'கள் வேண்டுவோர் கழகத்தில்' இருந்தார். கள் விற்க அனுமதி தர அரசை தொடர்ந்து வற்புறுத்துவதுதான் இதன் நோக்கம். இந்தக் கழகத்தின் வழி அப்பா மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். மன்னை நாராயணசாமி அவர்கள் வென்று அமைச்சரான தேர்தல் அது. வெளியூரில் ரொம்பப் பிரபலம் ஆகாததாலும், உள்ளூரில் அடிதடியான 'போக்கிலி' (போக்கிரி) என்று பெயர் எடுத்திருந்ததாலும், அப்பாவால் 5000 க்குமேல் ஓட்டு வாங்க முடியவில்லையாம் :)

இப்போது கள்ளுக்கு மீண்டும் வருவோம்!! கள் குடித்தால் கேடு என்று சொல்லித்தான் அரசாங்கம் 'மேல்நாட்டு' வகை சரக்குகளை விற்கிறது. இந்த மேல்நாட்டு மதுவகைகளின் லட்சணம் நிறைய நண்பர்களுக்கும் தெரியும். என்னத்ததான் போட்டு செய்றாய்ங்களோன்னு நிறைய பேர் புலம்புவதையும், ஒரு குவாட்டர்தான் சாப்பிட்டேன் ஒரே தூக்கா தூக்கிடுச்சு போன்ற அலறல்களையும் கேட்டுகிட்டுதான் இருக்கோம். ஆனால், கள்ளில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவது இல்லை. முழுக்க முழுக்க இயற்கை அளிக்கும் ஒரு பானம்தான் இது. எனக்குத் தெரிந்து எந்த உடல் உபாதையும் இதனால் வந்தது இல்லை.

இந்தப் பதிவு, கள் குடிப்பதற்கு மட்டும் ஆதரவானது இல்லை. பனைமரத்தை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதியும்தான். பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களின் பயன்கள் எண்ணிலடங்காதவை. சில பயன்கள்:

- ஓலை (வீட்டுக் கூரை வேய, விசிறி, பெட்டிகள் செய்ய)
- பனை மரம் (வீடு கட்ட உதவும்)
- பனைமட்டைக் கழி (நார் உறிக்க)
- பனங்காய் (நுங்கு)
- பனங்கிழங்கு (உணவுப்பொருள்)
- கள் (சிறந்த இயற்கை பானம்)
- பதநீர் (சுவை மிகுந்த இயற்கை பானம்)
- பதநீரிலிருந்து பனைவெல்லம் (சிறந்த இயற்கை இனிப்பு)
- பனங்கல்கண்டு (இருமலுக்கு நல்லது. சிறந்த இயற்கை இனிப்பு)
- கருப்பட்டி (இரும்புச்சத்து மிகுந்த இயற்கை இனிப்பு)

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் திருச்செந்தூர் போகும் வழியில், காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினரைக் கொஞ்ச நேரம் காக்கவைத்து விட்டு, 3 லிட்டர் பதநீர் குடித்துவிட்டுதான் போனேன்!! வரும்போது நிறைய்ய்ய்ய்ய்ய பனங்கல்கண்டு வாங்கி வந்தோம். பால், டீயில் போட்டுக் குடித்தால் அமிர்தமாக இருக்கும்!!

இப்படி ஏகப்பட்ட பயன்தரும் பனைபொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்ய அரசு உதவலாம். பதநீரையும், பனம்பழக் கூழையும் பதப்படுத்தி இனிப்புகள் செய்ய பயன்படுத்தலாம். கண்ணில் தெரியா பொருட்கள் கொண்ட 'ஈக்குவல்' இனிப்பான் பயன்படுத்துவதைவிட, பனங்கல்கண்டைப் பயன்படுத்தச் சொல்லலாம். எல்லாவற்றையும் விட, கள்ளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி, அதை விற்பவர் மட்டுமல்ல, குடிப்பவர் வயிற்றையும் பாதுகாக்கலாம்.

கள் வேண்டுவோர் கழகத்தில் சேந்துகுறீங்களா?? :)

Friday, October 15, 2010

விற்பனைக்கு: மரபணு மாற்றம் செய்யப்பட்ட 'உணவுப்பொருட்கள்'

ஆராய்ச்சியில் உள்ள, மரபணு மாற்றம் செய்யப்பட்ட டிசைனர் உணவுப்பொருட்கள் விற்பனைக்கு:

1. பீன் ஆரஞ்சு


2. பீஃப் ஆப்பிள்

3. பியர் காய்க்கும் மரம்

4. பெல்ஜியன் கிரீன் ஆப்பிள்

5. கார்னானா!

6. எக் பிளாண்ட்

7. லவ் தக்காளி

8. மெலங்ரேப்ஸ்

9. பன்றிபில்லர் (புதிய சைனீஸ் உணவுக்கு!)

10. பன்றேவல் (அசைவ பிரியர்களுக்கு- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்)

 11. ஸ்ட்ராப்பிள்இவைகள் கடைகளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. நாம் வாங்காமலும் இருக்கப் போவதில்லை. Please avoid buying Genetically Modified Food and save our future generation!


படங்கள் நன்றி - www.freakingnews.com

Friday, October 8, 2010

அவந்தியாகிட்ட உஷாரா இருங்க!

டிஸ்கி: இது ஏதோ புனைவோ, பதிவர் சம்பந்தப்பட்ட பதிவோ இல்லை! ஒரு விழிப்புணர்வு முயற்சி மட்டுமே. கதையில் வரும் நபர்களோ சம்பவங்...... சரி சரி விஷயத்துக்குப் போவோம்!


புதுசு புதுசா நோய்கள், அதுக்குப் புதுசு புதுசா மருந்துகள், அப்புறம் புதுசு புதுசா மருந்துகளுக்குத் தடைகள். இப்போ சமீப தடை - அவன்டியா (Avandia) என்ற சர்க்கரை வியாதிக்கான மருந்துக்கு! இதில் ஆச்சரியம் என்னன்னா, அமெரிக்காவுல இதை தடை பண்றதுக்கு பெரிய விவாதமே நடந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்தியாவில் இந்த மருந்துக்குத் தடை. இதயம் சம்பந்தப்பட்ட சைட் எஃபெக்ட் வியாதிகள் வருவதால் இந்த மருந்து ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

வழக்கமா புருண்டி, சியர்ரா லியோன் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட பிறகுதான் நம்ம நாட்டுல தடை போடுவாங்க. அவ்வளவு வேகம்!! ஆனா, இந்த முறை உண்மையிலேயே வேகமா செயல்பட்டு(!) தடை பண்ணியிருக்காங்க. பாராட்டப் படவேண்டிய விசயம்தான்.

உண்மை நிலவரம் என்னன்னா, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள், உணவுப்பொருட்கள் நம் நாட்டில் தாராளமா புழக்கத்தில் இருக்கு. நம்மிடையே உள்ள அறியாமை, வெளிநாட்டில் இருந்து வந்தாலே அது தரமா, பாதுகாப்பா இருக்குங்குற மோகம்தான் இதுக்குக் காரணம்.

சர்க்கரை நோயின் தாயகம் என்கிற அசைக்கமுடியா இடத்தில் இருக்கும் நம் நாட்டுக்கு, இந்த மாதிரி தடைகள் அவசியம். உங்க உறவினர், நண்பர்கள் யாராவது 'அவந்தியா'கிட்டே சிநேகமா இருந்தா, உடனே அதை கட் பண்ண சொல்லுங்க.

வாணலியில் இருந்து அடுப்பிற்குள் பாயவேண்டாமே...

மேலதிக தகவல்களுக்கு:

நன்றி: www.pharmainfo.net, டைம்ஸ் ஆஃப் இந்தியா
டிஸ்கி1: இந்த இணையங்களில் இருக்கும் தகவல்களுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.  

Monday, October 4, 2010

இந்தப் பயங்கரம் இந்தியாவிலும் நடக்கும்!

செய்தி: 1940 களில் அமெரிக்க மருத்துவர் குழு - மருத்துவ பரிசோதனைங்குற பேர்ல க்வாதமாலா (லத்தின் அமெரிக்க நாடு) நாட்டுல லட்சக்கணக்கான பேருக்கு பால்வினை நோய் பரப்பும் கிருமிகளை செலுத்தி சோதனை பண்ணியிருக்காங்க.

இந்தப் பயங்கரச் செய்தி எப்படியோ வெளில வந்ததும், தானைத்தலைவி ஹிலாரியும், கறுப்புத்தலைவன் ஒபாமாவும் ஒரு போன் போட்டு அந்த நாட்டுத் தலைவரிடம், 'சாரிங்க தெரியாம(?)  இந்தத் தவறு நடந்து போச்சு. 40களில் நடந்ததாலே, இதை அப்படியே விட்டுடுவோம். என்னதான் இருந்தாலும் இந்தமாதிரி அயோக்கியத்தனம் செய்றதல்லாம், எங்களுக்குப் பழக்கமில்ல' ன்னு சொல்லியிருக்காங்க.

விசயம் வெளில வந்ததுனாலே சாரி கேட்டாங்க. இல்லன்னா???

இதே மாதிரி பல சோதனைகள் நம்ம இந்திய 'எலிகள்'மீது இன்னும் நடந்துகிட்டுதான் இருக்கு. என்ன ஒண்ணு, இப்போதைய சோதனைகள் எல்லாம் ஓப்பனாவே வருது.

பி.டி பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய்ன்னு ஒவ்வொன்னா வருது. சோளக்களி சாப்பிடறது நமக்கு அருவருப்பா இருக்கு. அதே சோளத்த செக்சியா பாக் பண்ணி, கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னு குடுத்தா பல்ல இளிச்சிட்டு சாப்பிடுறோம்.

நம்மள்ல எத்தன பேரு கேழ்வரகு கூழ் குடிக்கிறோம்? நம்ம மேட்டுகுடி மக்களுக்கு, ஏன் பெரும்பாலான மக்களுக்கு அது ஜெயில்லயும், நாகாத்தம்மன் திருவிழாலயும் மட்டும் கிடைக்கிற பொருளா தெரியிது. ஆனா, நெஞ்சுக்கொழுப்பு குறைய 'ஓட்ஸ்' குடிக்கிறோம்.

அமெரிக்காகாரன் எலியத் தேடி ஓடவேண்டியதில்ல. நாமளே போய் பெருமையா எலிவரிசையில போய் நிக்கிறோம்.

தக்காளி, வெண்டை, வெள்ளரி, கத்தரிக்காய், வெங்காயம் (பெருசு) இதுலல்லாம் என்ன சுவை இருக்கு இப்போ? பாக்க நல்லா பளபளன்னு இருக்கு. கோழி கூட கொழு கொழுன்னு இருக்கு, ஆனா நாட்டுக் கோழியின் சுவை இருக்கா? முன்னே இருந்த பாலின் சுவை இப்போ இருக்கா? முட்டை, நீர் (நிலத்தடி நீர் கெட்டுப்போயி வருஷமாச்சு, கெமிக்கல்களால்).......?????

இன்னும் சில வருடங்கள் கழிச்சு, இதே அமெரிக்காவுலருந்து நமது இந்திய பிரதமருக்கு இதே மாதிரி ஒரு போன்கால் வரும். அமெரிக்க அதிபர் 'சாரிங்க. இது 2007 ல நடந்ததாலே, எங்களால ஒன்னும் பண்ண முடியல. பெயர் தெரியா, குணப்படுத்த முடியா நிறைய கிருமிகள எங்க மன்சான்டோவும், மத்த கம்பெனிகளும் உங்க நாட்டுப் பயிர்களில் கோத்து வுட்டுட்டாங்க. பரவால்ல. அத அழிக்க 'சூப்பர் அழிப்பான் 2050' அதே கம்பெனிதான் தயாரிச்சு இருக்கு. நைசா அதையும் அனுமதிச்சுடுங்க'ன்னு சொல்லத்தான் போறார். நம்ம பிரதமரும் (யாரு அப்போ இருப்பா? ராகுலோட பேரன் ரோஷன் வாந்திதான்), இளிச்சுகிட்டே தலையாட்டத்தான் போறாரு.

இப்போதைக்கு, இலவச மருந்து, புயல் நிவாரணம், இலவச மருத்துவ முகாம், உங்க மருத்துவர், 'இந்த மருந்து இப்பத்தான் அமெரிக்காவுலருந்து வந்துருக்கு. ஒரு வாரம் ட்ரை பண்ணலாம்' -- இதுலல்லாம் கொஞ்சம் உசாரா இருங்க!!!

விரிவான செய்திக்கு:
http://timesofindia.indiatimes.com/world/us/Barack-Obama-apologizes-to-Guatemala-for-US-sex-disease-study/articleshow/6670605.cms