Wednesday, December 28, 2011

Autism - ஒரு நோயல்ல!

இப்போது பரவலாக கேள்விப்படும் ஒரு வார்த்தை - ஆட்டிசம் (Autism). இது ஒரு நோயல்ல, குழந்தையின் வளர்ச்சியில் ஒரு நிலை அல்லது ஒரு குறைபாடு எனச் சொல்லலாம். இந்த நிலை பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு டாக்டர்களால் சொல்லப்பட்டாலும், இதுதான் இந்தக் குறைபாட்டுக்குக்  காரணம் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.

இந்த  குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றக் குழந்தைகளை விட கீழ்கண்டவைகளில் வித்தியாசமாக இருப்பார்கள்;


1. படித்தல், பாடங்களைக் கவனித்தல்

2. வலியறிதல் (வலியே தெரியாது அல்லது சிறு வலிக்கும் பெரிதாக கத்துவார்கள்)

3. பயமின்மை

4. சொல்வதையே திருப்பிச் சொல்லுதல்

5. பார்த்த படங்களையே (அ) விளம்பரங்களை மறுபடி மறுபடி பார்த்தல்

6. அபார ஞாபகசக்தி

7. பிடிவாதம் பிடித்தல்

8. குறிப்பிட்ட சாப்பாடு மட்டும் சாப்பிடுதல் (அ) தவிர்த்தல்

9. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளுதல்

10. கேள்வி கேட்டால் பதில் கூறாமல் இருத்தல்

பொதுவாக, இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை 2 வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். அதீத தெரபி மூலமும் சில மருந்துகள் மூலமும் இந்தக் குறைபாட்டைச் சரி செய்ய வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய கணக்கின்படி, அமெரிக்காவில் சராசரியாக 100 ல் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆண்குழந்தைக்கு 1 பெண்குழந்தை என்ற அளவில் இது பாதிக்கிறது. என் நண்பர்களில் 3 பேரின் ஆண் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. அந்த மூன்று குழந்தைகளும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அவர்களின் அன்றாட போராட்டத்தை நான் அறிவேன். ஒரு பையன் ஷாப்பிங் செய்துகொண்டிருக்கும்போது, கடையிலிருந்து வெளியே ஓடிவிட்டான், கண் இமைக்கும் நேரத்தில். நண்பன் சுதாரித்துக்கொண்டு தேடினால் பையனைக் காணவில்லை. போலீசுக்கு போன் செய்து, கடையில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து தேடி கடைசியில் 2.5 மைல் தூரத்தில் ரயில் போகும் தண்டவாளத்தில் நின்றவனைக் கண்டுபிடித்தார்கள். இன்னொரு நண்பனின் பையன், கொதித்துக்கொண்டிருந்த வென்னீரை அப்படியே இழுத்து வயிற்றில் கொட்டிக் கொண்டான்.

பெற்றோர்களின் பொறுமையை இந்தக் குழந்தைகள் ரொம்பவே சோதிப்பார்கள். ஷாப்பிங் சென்றால், கார் பார்க்கை விட்டு நகரமாட்டார்கள். ஒரு இடத்தில் நிற்கமாட்டார்கள், யாராவது சொன்னால் கேட்கமாட்டார்கள், அடித்தால் வலிக்காது, மேலும் ஆக்ரோஷமாக ஆகிவிடுவார்கள். பெருங்குரலெடுத்துக் கத்துவார்கள்.

இது மாதிரி அந்தப் பெற்றோர்களுக்கு கிடைக்கும் தினப்படியான அதிர்ச்சிகள், அனுபவங்கள் வேதனை தரக்கூடியவை. இதன் காரணமாகவே, அவர்கள் பெரும்பாலும் யாரோடும் ஒட்டுவதில்லை. எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. நாங்கள் ஒரு குறிப்பிட்ட சில நண்பர்கள் வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே வீட்டுக்கு வருவார்கள். இந்த மாதிரிக் குழந்தைகளுக்குத் தேவை நமது பரிதாபமோ அல்லது அறிவுரையோ அல்ல. சிறிய புன்னகை மற்றும் நிறைய பொறுமையும் அன்பும்.

இந்தக் குறைபாடு உள்ள பெரும்பாலான குழந்தைகள், ஏதாவது ஒரு தனித்திறமையைக் கொண்டிருப்பார்கள். என் நண்பனின் பையன் அபார ஞாபக சக்தி கொண்டவன். அமெரிக்காவில் உள்ள எல்லா மாநிலங்களையும் அதன் தலைநகரோடு சொல்லுவான். மாநிலத்தின் பேரைச் சொன்னால் அந்த மாநிலத்தின் பேஸ்பால் அணியின் பெயரைச் சொல்லுவான். இன்னொரு நண்பரின் பையன் மிக அருமையாக ஓவியம் வரைவான்.


அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில், இந்தக் குழந்தைகளுக்கென சிறப்பு பள்ளிகள் உள்ளன. அங்கு, இவர்களுக்கு தனித்த கவனம், தனித்தன்மையோடு தயாரிக்கப்பட்ட பாட திட்டங்கள், பெற்றோருக்கென்று கலந்துரையாட குழுமங்கள் இருக்கின்றன. இந்தியாவில், இது பற்றி சரியான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.

இந்தக் குறைபாட்டுக்குக் காரணமாக இதுவரை இரண்டு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று சிறு வயதில் போடப்படும் நோய்த்தடுப்பூசிகள். மற்றொன்று, ஜீன் குறைபாடு. இதில், நோய்த்தடுப்பூசிகளால்தான் இந்தக் குறைபாடு என்பது சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஜீன் மாற்றங்கள்தான் என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஒரு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நமது குடும்ப சமூக அமைப்புதான் இதற்குக் காரணம் என்று கூறினார். பொதுவாக, குழந்தைகளை மற்றக் குழந்தைகளோடு விளையாட விடுவதில்லை, கற்றுக்கொடுத்தல் குறைவாக இருக்கிறது என்பது போல் சொன்னார். என்னால் முழுமையாக இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால், என் 3 நண்பர்களில், இருவர் நண்பர்கள், உறவினர்களிடம் நன்றாகக் கலப்பவர்கள். இன்னொரு நண்பர் பெரும்பாலான நேரங்களில் எதையாவது குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

என்னைப் பொறுத்தவரை நான் காரணமாக நினைப்பது, மாறி வரும் நமது உணவுப்பழக்கங்கள்தான். இப்போது நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலும், மரபணு மாற்றப்பட்டவையாக இருக்கின்றன. இதனால்தான் இந்தக் குறைபாடு என்று நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும், சமீப காலங்களில் அதீத மாற்றம் கண்டது, சுற்றுப்புறமும் உண்ணும் உணவுப்பொருட்களும்தான். 20 வருடங்களுக்கு முன், யாருக்காவது புற்றுநோய் என்றால் அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். இப்போதெல்லாம், அது எந்தவகை புற்றுநோய் என்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் அளவிற்கு போய்விட்டது. உணவு முறைகளும், சுற்றுப்புறச் சூழலும் காப்பாற்றப்படாவிட்டால், இந்த மாதிரி புதுசு புதுசாக நோய்களும் வந்துகொண்டுதான் இருக்கும்.

Autism பற்றிய மேலதிக தகவல்களுக்கு ;

  •     http://www.autism-india.org/index.html
  •     www.autismspeaks.org
  •     www.cdc.gov
  •     http://www.ucdmc.ucdavis.edu/mindinstitute/
  •     http://archpsyc.ama-assn.org/cgi/content/full/archgenpsychiatry.2011.76

***

5 comments:

குசும்பன் said...

அருமையான பதிவு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அவசியமான பகிர்வு தல!

O.R.B Raja said...

@குசும்பன் - நன்றி!

@பபாஷா - நன்றிங்க!

சுரேகா.. said...

அருமையான.. அவசியமான பதிவு.!

http://thanjavuraan.blogspot.com/2007/08/blog-post.html
இதை மீள்பதிவா போடுங்களேன்

O.R.B Raja said...

@சுரேகா - நன்றி.
அந்தப் பதிவையும் போட்றலாம் :))