Tuesday, December 27, 2011

What a rubbish world?

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சின்ன வயதில் ஆட்டம் போட்ட ஆறு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதி நிரம்பி இருந்தது. ஆற்றில் நீர் வரும் காலத்தில் இப்போதெல்லாம் யாரும் இறங்குவது இல்லையாம். பொங்கலுக்கு பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டுவதும், பக்கத்தில் இருக்கும் காட்டாற்றில் வண்டிகளைக் கழுவுவதும் இப்போது மறைந்து விட்டது. தெரிந்தும் தெரியாமலும், பிளாஸ்டிக் அரக்கன் பிடியில் நாமும் விழுந்து விட்டோம்.

பிள்ளைகளோடு ஃப்ளோரிடா டிஸ்னி உலகம் சென்றிருந்தபோது, பார்க்கும் ஒவ்வொருவர் கையிலும், ஒரு பெரிய கடின ப்ளாஸ்டிக் கப், அதற்கு மேல் மூடி, ஒரு ஸ்ட்ரா. இது சும்மா ஒரு பானத்துக்கு மட்டும்தான். சராசரியாக ஒரு 10 வயது பிள்ளை ஒரு நாளைக்கு 4 பானங்கள் குடித்தால், குடித்து விட்டு குப்பைகளை எறிந்தால், எவ்ளோ ப்ளாஸ்டிக் குப்பை? பணியாட்களும் அசராமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்தபடியே இருக்கின்றனர். ஒரு கணக்குப்படி, அந்த பூங்காக்களில் மட்டும் ஒரு நாளைக்கு 1,20,000 பவுண்ட்ஸ் (கிட்டத்தட்ட 56 டன்) குப்பை சேர்கிறதாம். அதில் கண்டிப்பாக ஒரு பெரும்பங்கு ப்ளாஸ்டிக் ஆக இருக்கும். இவ்வளவையும் என்ன செய்கிறார்கள்? Land Fill எனப்படும் குப்பை மேடுகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள். பள்ளமாக இருக்கும் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, மேடு படுத்துவதுதான் இது. அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் கண்ணுக்குக் குப்பை தெரியவில்லையென்பதால், அந்த நாடுகள் சுத்தமான நாடுகள் என்று ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுமே Land Fill செய்து Land Reclaim தான் செய்கிறார்கள். ஆக, குப்பைகள் அழிக்கப்படவில்லை, மறைக்கப்படுகிறது.



சமீபத்தில், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சாப்பிடும் இடத்தில் (Food Court) இருந்த ஒரு கடையில் பிள்ளைகளுக்கு பழக்கூழ் (Smoothie) வாங்கினோம். அங்கு அமர்ந்து சாப்பிடத்தான் வாங்கினோம். அதற்கு அந்தக் கடையில், ஒரு ப்ளாஸ்டிக் கடின கப், ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், கடின மூடி, ஒரு ஸ்ட்ரா எனக் கொடுத்தார்கள். நான், கடையில் இருப்பவரிடம், நாங்கள் இங்குதான் சாப்பிடப்போகிறோம், மூடி வேண்டாம் என்று கூறிவிட்டேன். அப்படியே, அவரிடம் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கும், பவுல்களுக்கும் பதில் பீங்கானில் குடுக்கலாமே. வெளியில் எடுத்துச் செல்வதானால், ப்ளாஸ்டிக்கில் கொடுங்கள் என்று கூறினேன். அவர் என்னை ஒரு விநோத பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ஒரு சிரிப்போடு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பிரபல உணவகங்களில், எடுப்புச் சாப்பாடு (Parcel) வாங்கினால் அதற்குக் கொடுக்கபடும் கடின ப்ளாஸ்டிக் கப்புகளைப் பார்த்தால் மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒரு வாழை இலை, ஒரு செய்தித்தாள், கொஞ்சம் நூலோடு முடித்து விடுவார்கள். அதேபோல் தேநீர்க் கடைகள், மதுக்கடைகள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கப்புகள். ஒரு மணி நேரத்தில் குடித்துத் தீர்க்கக்கூடிய தண்ணீருக்கு ஓராயிரம் ஆண்டுகள் அழிய எடுத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் பாட்டில். வயிற்றைக் கெடுக்கும் பூச்சிமருந்துகளுக்கு, உலகைக் கெடுக்கும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில், ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் அழிவுகளைப் பார்த்துவிட்டு, அதன் உபயோகத்தைக் குறைக்க பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நாம், இப்போதுதான் ப்ளாஸ்டிக்கை முழுவீச்சில் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆறுதலாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களில் ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்து இருக்கிறார்கள். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு கீழே இருக்கும் நாயர், காகிதக் கப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

நாகரீக வளர்ச்சி, ஆரோக்கியம் காரணமாக நம் வாழ்க்கை முறை நிறைய மாறி விட்டது. நிறைய விஷயங்களை நாம் ஒரு சமரசத்தோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால், வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்தால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வளர்க்கும் பிள்ளைகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ கொஞ்சம் அதிக நாட்கள் குறைந்த நச்சோடு வாழ்வார்கள்.

1. பார்க்கும், பொருள் வாங்கும் கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளை மறுப்பது.
2. உணவகங்களில் சென்று சாப்பிடுவது
3. தெரிந்த கடைகளில் சொல்லி ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்தைக் குறைக்கச் செய்வது
4. குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டும் போடுவது என முயற்சி செய்யலாம்.

இன்று காலை என் மகள் ரொட்டி வாங்கிக்கொண்டு வரும்போது சொன்னாள். 'இந்த ஒரு ரொட்டிக்கும் ப்ளாஸ்டிக் பை எடுத்து திணிக்கிறாங்கப்பா, நான் வேணாம்னுட்டேன்' என்று. பெருமையாக இருக்கிறது, என் பேச்சை குறைந்த பட்சம் இரண்டு பேர் (மனைவி உள்பட) கேட்டு, ப்ளாஸ்டிக்கை முடிந்தவரை மறுக்கிறார்கள் என்பதை அறியும்போது!

மாற்றம் என்பது நமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. மாறுவோம், வருங்கால நமது சந்ததியினருக்குப் பொருள் மட்டுமல்லாது, சுத்தமான காற்று மற்றும் பூமியைச் சேர்த்து வைப்போம். பிளாஸ்டிக்கை முடிந்தவரை மறுப்போம்!

***

தண்ணியடிச்சுட்டு கார் ஓட்டுறது தப்பா?

எச்சரிக்கை - நான் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆதரவானவன் இல்லை.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு நாள் சாயந்தரம் வழக்கம்போல, செந்தில் மாப்ள ஆஃபிசில் சந்திப்பு. லைட்டா கொஞ்சம் டைட்டாவலாம்னு
ஆளுக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டோம். நான் பொதுவாக பியர் சாப்பிடுவதில்லை. 8 மணிக்கு சாப்பிட்டு விட்டு, 12:30 மணி வாக்கில் பெருங்குடியில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்ல காரில் கிளம்பினேன். கொஞ்சமாக மழை. மத்திய கைலாசத்திலிருந்து வலது பக்கம் திரும்புவதற்காக பச்சை விளக்குக்குக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு மினி லாரி, பக்கத்தில் ஒரு பைக். அவர்கள் முன் சில வண்டிகள். வலது பக்க சிக்னல் கிடைத்ததும் நகர ஆரம்பித்தோம். திரும்பும் வேளையில், பச்சை பார்த்துதான் திரும்பினேன். ஒரு நொடி நேரத்தில், பச்சை அம்பைக் காணோம்! திரும்பியவுடன் அங்கிருந்த இரு காவலர்கள் எங்கள் மூவரையும் நிறுத்தச் சொன்னார்கள்.

நான் காரை ஓரம் கட்டிவிட்டு காத்திருக்க, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெயர்கொண்ட காவலர் என்னிடம் வந்தார். லைசன்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன்
கேட்டார், கொடுத்தேன். சிவப்பு சிக்னல்ல திரும்புனது தப்புன்னு சொன்னார். நான், திரும்பும்போது பச்சைதான் இருந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில்,
எந்த அறிகுறியும் (ப்ளிங்க்) இல்லாம சிவப்பு மாறுனா நான் என்ன சார் செய்யட்டும்னு கேட்டேன். அவர் அதெல்லாம் முடியாது, நாளைக்கு கோர்ட்டில் வந்து ஃபைன் கட்டுங்கன்னு சொன்னவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 'நீங்க குடிச்சுருக்கீங்களா சார்'ன்னு கேட்டார். நானும், திடீர்
அரிச்சந்திரன் அவதாரம் எடுத்து, ஆமா, எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன்ன்னு சொன்னேன். அவர், சரி இன்னிக்கு வசமா சிக்கிட்டான் ஒருத்தன்னு நெனச்சுகிட்டு, சார் கொஞ்சம் இறங்கி வாங்க, இன்ஸ்பெக்டர்கிட்ட பேசணும்னு சொன்னார். நானும் இறங்கி இன்ஸ்பெக்டரிடம் போனேன்.

புகழ்பெற்ற குதிரையின் ஓனரான மாவீரன் பெயர் கொண்ட அவர், சார் குடிச்சுட்டு கார் ஓட்டக்கூடாது. நீங்க ஓட்டிகிட்டு வந்துருக்கீங்க. என்ன
செய்யலாம்னு கேட்டார். நான், அய்யா நான் எட்டு மணிக்குதான் பியர் சாப்பிட்டேன், அது அப்போவே பாத்ரூமுக்குப் போயிடுச்சு. காவலர் கேட்டாரு, நான் ஆமான்னு சொன்னேன்னு அவர்கிட்டே சொன்னேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்னு சொன்னேன். அவர் விடுவதாயில்லை. பைக் தம்பியையும், மினி லாரி தம்பியையும், சரிப்பா இப்ப என்ன சொல்றீங்க, 2000 ரூப தண்டம் கட்டவேண்டி வரும் பரவாயில்லையான்னு கேட்டார்.
அவங்க ரெண்டு பேரும் கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க.

என்னை தனியே கூப்பிட்ட பாகிஸ்தான் அதிபர், சார் பாத்தா(?) படிச்சவர் மாதிரி இருக்கீங்க. எதுனா பாத்து செய்ங்க. நீங்க பிரச்சினை இல்லாம
போயிடலாம்னு பேரத்தை ஆரம்பிச்சார். நான் அப்போதான் அமெரிக்க ரிட்டர்ன்ங்குறதால, லஞ்சம் குடுக்கக்கூடாது எனும் என் கொள்கையை உடும்பா புடிச்சுகிட்டு, சார் நான் லஞ்சமெல்லாம் குடுக்கமாட்டேன்னு சொன்னேன். உடனே அவர் மாவீரன்கிட்டே போய் ஏதோ சொன்னார். அவர், மத்த ரெண்டு பேரையும் பாத்து, சரி நீங்க சரிவர மாட்டீங்கன்னு சொல்லிட்டு, கேஸ் குறிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு, என்ன கோபம்ன்னா, நான் திரும்பும்போது பச்சை இருந்தது. ஒரு செகண்ட்குள்ளே, அது காணாமப் போச்சு. ரெண்டு செகண்ட்குள்ளே எப்படி அந்த சந்திப்பில் வண்டியத் திருப்புறது. அதனாலே, நான் திரும்பும்போது பச்சைதான் இருந்தது, சிக்னலில் கோளாறுன்னு வாதம் பண்ண ஆரம்பிச்சேன். அவங்க அதெல்லாம் காதுலயே போட்டுக்கல.

நானும், சரி இவங்ககிட்டே பேசி பிரயோசனம் இல்லன்னுட்டு, மாவீரன் கிட்டே, சட்டப்படி என்ன பண்ணனுமோ அதப் பண்ணிடுங்க, லஞ்சம்
குடுக்கமாட்டேன்னு சொன்னேன். அவரும் (கிண்டலா) சரி அப்படியே பண்ணிடுவோம்னு சொல்லி அதிபரையும் எங்க மூனு பேரையும் ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். நானும், சரி என்னதான் ப்ரோசிஜர்ன்னு பாத்துடலாம்னு ஆர்வத்தில் கெளம்பிட்டேன். இவ்வளவுக்கும், ஒரு 500 ரூபாய் (அதான் அவங்க கேட்டது) இல்லேன்னா, அப்போ இருந்த ஒரு சக்தி வாய்ந்த அமைச்சர், அல்லது முதலமைச்சர் செல்லில் இருந்த ஒரு காவல் அதிகாரி இவங்க யாராவது ஒருத்தர் பேரச் சொல்லிட்டு போயிருக்க முடியும். ஆனால், எனக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தவிரவும், நம்மூர் சட்டங்கள் எப்படி இருக்கின்றனன்னு நேரடியா பார்க்க ஒரு வாய்ப்பை விட மனசில்லை. குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை, அதனால் இன்னும் தைரியம்!!

ஒரு ஷேர் ஆட்டோவில் எங்களை ஏத்திகிட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போனார் அதிபர். வரும் வழியெங்கும், மத்த ரெடு பேரும் கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போயிட்டாங்க. அங்கு போனதும், பணியில் இருந்த சின்னக்குயில் பேர் கொண்ட (பயிற்சி) டாக்டரிடம் அழைத்துப்போனார். அந்தம்மாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

சின்னக்குயில் - உங்க பேரு
நான் - ராஜா
சி.கு - அப்பா பேரு
நான் - சொன்னேன்
சி.கு - அட்ரஸ்
நான் - சொன்னேன்
சி.கு - குடிச்சிருக்கீங்களா
நான் - எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன் (அப்போ மணி 1:30am)

அதுக்கு அப்புறம் ஒரு சீட்டில் ஏதோ எழுதியது சி.கு. சரி நீங்க போகலாம்னு சொன்னிச்சு. எனக்கு ஒன்னும் புரியல. அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, நீங்க driving under the influence of alcohol க்கு மருத்துவர் சான்று குடுத்திருக்கேன்னாங்க. எனக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எத வச்சு கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டேன். நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்ன்னு சொன்னாங்க. 8 மணிக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டுட்டு 12:30 மணிக்கு காரை மறைக்கும்போது என் ரத்தத்துல எவ்வளவு பர்சென்ட் ஆல்கஹால்
இருக்கும்னு கேட்டேன். எனக்கு என்ன டெஸ்ட் எடுத்து கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டா, சி.கு நாங்க டெஸ்டெல்லாம் எடுக்குறது இல்ல, உங்க கண்ணு
சிவப்பா இருக்கு, தவிர நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்னு சொன்னுச்சு. நான் சரி, இப்போ நான் குடிக்கலன்னு சொல்றேன், அதையும் நம்புவீங்களான்னு கேட்டேன். அதுக்கு சி.கு சார் அதெல்லாம் எனக்குத் தெரியாது, போலிஸ்காரங்க கூட்டிட்டு வருவாங்க, நாங்க டாக்டர் செர்டிஃபிகேட் குடுப்போம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்னு சொல்லிச்சு. எனக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியல. சரி தொலைங்கன்னுட்டு வெளில வந்துட்டேன். மறுபடியும் மாவீரன்கிட்டே அழைத்து வரப்பட்டோம். சார், சட்டப்படி நான் என்ன செய்யனுமோ செஞ்சுட்டேன். படிச்சவரா இருக்கீங்க, சட்டப்படி நான் கார் குடுக்கக்கூடாது, நீங்க எடுத்துகிட்டுப் போங்க 2200 ரூபாய் தண்டம் கட்ட வேண்டி வரும்.குடுத்துட்டுப் போங்க, உங்க லைசென்சையும் குடுத்துட்டு நாளைக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன்ல வந்து லைசன்ஸ வாங்கிகோங்கன்னு சொன்னார்.

இதுக்கு இடையில், அங்கு வந்த என் மச்சான் (அவன் தாய்மாமன்தான் போலிஸ் அதிகாரி), அங்கிள், ஒரு போன் மாமாவுக்கு போட்டிருக்கலாம்ல,
இல்லன்னா 500 ரூபா வீசி எறிஞ்சு இருக்கலாமே, ஏன் இப்படி இந்த மழையில அலையிறீங்கன்னு கேட்டான். நான் சும்மாதான், நம்ம சிஸ்டமும்
சட்டமும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கதான்னு சொல்லிட்டு காரை எடுத்துகிட்டு வீடு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள், செந்தில் மாப்ளைய கூட்டிகிட்டு ஸ்டேஷன் போனேன். அவன் போகும் வரை ஒரே திட்டு. எனக்கு போன் பண்ணியிருக்கலாம்ல.
இந்தியாவுக்கு வந்துட்டா இந்தியன் மாதிரி இருக்கக் கத்துக்கோடான்னு ஒரே அட்வைஸ்! மாவீரன், எங்களுக்கு முதுகைக் காட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார். திரும்பி என்னைப் பார்த்து டக்குன்னு என்ன நெனைச்சாரோ ஒரு சல்யூட் வச்சார், எனக்கு ஒரே சிரிப்பு. சரி வாங்க சார்ன்னு மேலே ரூமுக்கு கூட்டிகிட்டுப் போனார். உக்காரச் சொல்லிவிட்டு, செந்திலிடம் பேச ஆரம்பித்தார். செந்தில், சார் இவன் நெனச்சுருந்தா, நேத்தே ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு போயிருக்க முடியும். கொஞ்சம் நேர்மையான ஆளுன்னு என்னைப் பத்தி சொல்ல ஆரம்பித்தான். உடனே அவர், அடடா சார் நேத்தே என்கிட்ட சொல்லியிருக்கலாமே, ஏன் சார் இப்படிப் பன்னிட்டீங்க, சாரி சார்ன்னு ஆரம்பிச்சுட்டார். நான் பரவாயில்ல, சும்மா சட்டம் தெரிஞ்சுக்கதான் அப்படிப் பண்ணேன்னு சொன்னேன். அவருக்கு அப்ப ஒரு போன் வந்தது.

கொஞ்சம் நேரம் பேசிட்டு, ஸ்பீக்கரில் போட்டுவிட்டார். மறுமுனையில் பேசியது அவருக்கு மூத்த அதிகாரி, என்னய்யா எத்தன Drunken Driving கேசு
புடிச்சீங்க, 30 டார்கெட் வச்சுருக்கானுங்க. முடியுமில்லன்னு கேட்டார்.
பேசி முடிச்சதும் மாவீரன், பாருங்க சார் மேலேயிருந்து எங்க உயிர எடுக்குறாங்க. நாங்க யாரையும் புடிக்கிறது இல்ல. கணக்கு காட்ட சில சமயம்
கடுமையா நடந்துக்கவேண்டியிருக்கு. ஒரு ரகசியம் சொல்லவா, நாங்க பெரும்பாலும் புடிக்கிறது சென்னை பதிவு எண் கொண்ட வண்டிகளை
அல்லன்னு சொன்னார்!! (என்னோட கார் நம்பர் TN 48). சார் தப்பா நெனச்சுக்கதீங்க, கேஸ் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். அதனாலே கேன்சல்
பண்ணமுடியாது. ஃபைனை நானே கட்டிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்னு சொன்னார். அடக்கொடுமையேன்னுட்டு, நாங்களும் கெளம்பி
வந்துட்டோம்!

அமெரிக்காவில் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் தண்டனை கடுமையாக இருக்கும். ஆனால், ஒரு ட்ரைவரை அந்தக் கேசுக்காக பிடிக்கும் முன்
ஏகப்பட்ட நடைமுறைகள். முதலில், வேறு ஏதாவது காரணுத்துக்காக வண்டி மறிக்கப்பட்டிருக்கவேண்டும். உதாரணத்துக்கு, காரை தாறுமாறாக
ஓட்டுதல், அதிக வேகத்தில் போதல், இந்த மாதிரி. காரை விட்டு கீழிறக்கி (இதுக்கு மட்டும்தான் கீழே இறங்கவேண்டும், மத்த சமயங்களில் ட்ரைவர்
சீட்டிலேயே இருக்கவேண்டும், கீழே இறங்கினால், அதிகாரியைத் தாக்கத்தான் வருகிறோம்ன்னு ஒரு தவறான புரிதல் அதிகாரிக்கு வந்திடும்)
ட்ரைவரிடம் Breathalyzer சோதனை செய்யப்பட்டு, அவர் ரத்தத்தில் 0.8% க்கு அதிகமாக ஆல்கஹால் இருந்தால் மட்டுமே (இது மாநிலத்துக்கு
மாநிலம் மாறும்) அவரை புக் செய்யவேண்டும். அதுக்கு அப்புறம் அவரை வண்டியோட்ட அனுமதிக்கக்கூடாது. உடனே அருகில் இருக்கும்
மருத்துவமனையில் ஆல்கஹால் அளவு ரத்த சோதனை செய்து உறுதி செய்யப்படவேண்டும். இவை எல்லாம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டால்தான் தண்டனை கிடைக்கும். அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடிப்பவர்கள். வேலை முடிந்தவுடன் நிறைய தடவைகள் நேரே பார் போயிருக்கிறோம். பெரும்பாலும் பியர் அல்லது ரெட் வைன் சாப்பிட்டுவிட்டு நன்றாக சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, நிறைய பேசிவிட்டு நிதானமாகத்தான் வீடு திரும்புவோம். இது வரை நான் ஸ்பீடிங் தவிர வேறு எதற்காகவும் தண்டிக்கப்பட்டதில்லை!

நம்மூரில், முதலில் சிக்னல்கள் ஒரு ஒழுங்கில் அமைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு சந்திப்புக்கும் ஒரு மாதிரி சிக்னல்கள். அதுவும் இடது, வலது
புறம் திரும்புவதற்கு சில ப்ளிங்க் ஆகி நிற்கும், சில இடங்களில் எப்போது போகும் என்பது தெரியாது. அதே மாதிரி, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு
என்பது கட்டாயமாக பரிசோதிக்கப்படவேண்டும். சும்மா, சென்னை தவிர்த்த ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்களைப் பிடித்தோ, சிபாரிசுக்கு ஆளில்லாதவர்களைப் பிடித்தோ வெறும் கணக்கு காட்டக் கூடாது. சிக்னலை மீறுபவர்கள், (இரவில்) தாறுமாறாக வண்டி ஓட்டுவோர் மட்டும் பிடிக்கப்பட்டு ரத்தசோதனையோ அல்லது மூச்சு சோதனையோ செய்யவேண்டும். இதெல்லாம் இல்லாமல், இருக்கும் சிஸ்டத்தை தொடர்ந்து ஃபாலோ செய்தால், சட்டத்தை மதித்து நடக்க விரும்பும் என்னைப் போல் பலரும், 500 ரூபாயையோ அல்லது சிபாரிசுக்கு நம்பரையோ தயாராக வைத்துக்கொண்டுதான் இனி ரோட்டில் செல்லவேண்டும்!

***

Thursday, December 22, 2011

தூசி தட்டியாச்சு!

கடந்த ஒரு வருஷமா ஒன்னும் எழுதல (ம்க்கும்...அதுக்கு முன்னே, எழுதி கிழிச்ச மாதிரி). கடுமையான வேலை பளு, உக்காந்து எழுத நேரமில்லாதது (இப்படித்தான் சொல்லணுமாம்!), கிடைத்த நேரத்தில் சோம்பல், அதீத வெளியூர் பயணங்கள்னு ஒரு வருசம் ஓடிப்போச்சு!

நிறைய நண்பர்கள், 'நீ என்னதான் செய்றேப்பான்னு' கேக்குறாங்க. IT ல உள்ள சில நண்பர்களுக்கும் நான் இருக்குற Data Warehouse & Business Intelligence துறை கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. இது ஒரு புக முடியாத துறைன்னு சில பேர் நினைக்கிறாங்க. அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமா, துறை சார்ந்த வலைப்பூ ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதில், Data Warehouse & Business Intelligence பத்தின உபயோகமுள்ள (அத நீங்கதான் சொல்லணும்!!) பதிவுகள் எனக்குத் தெரிந்த எளிய ஆங்கிலத்தில் வரும்.

இந்தத் துறையில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை தெரிவிக்கவும் இந்த வலைப்பூ பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

நண்பர்கள் இதைப்பற்றி ஆலோசனை எதுவும் இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள், நன்றி!

எனது துறை சார்ந்த வலைப்பூ ...... விரைவில்......!

Friday, October 29, 2010

கள் வேண்டுவோர் கழகம்

80களில் தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி அளித்திருந்த காலம். என் அப்பாவும் இன்னொரு உறவினரும் சேர்ந்து கள்ளுக்கடை வைத்திருந்தார்கள். அப்போது டாஸ்மாக் இல்லாத காலம், நகரங்களில் மட்டுமே 'சாராயக் கடை'கள் இருந்த காலம். உள்ளூர் குடிமக்களின் நலன் கருதி இந்தக் கடை திறக்கப்பட்டது!

கள் இறக்கவென்று 'தெக்கேருந்து' (தென் தமிழ்நாட்டிலிருந்து) கலியமூர்த்தி என்ற 'நாடாவி' (மரமேறுபவர்) வரவழைக்கப்பட்டு, எங்கள் இடத்தில் ஒரு குடிசை வீடும் அமைக்கப்பட்டு, தினமும் கள் விற்பனை ஜோராக நடந்தது. எங்கள் வீட்டில் இருந்த சில தென்னை மரங்களில் இருந்து 'தனிக்கள்' இறக்கி வீட்டுக்குப் போகும். சில மரங்களில் இருந்து 'பயனி' (பதநீர்) எடுக்கப்பட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பரிமாறப்படும்.

எனக்கு முதன் முதலில் கள் குடிக்கக் கற்றுக்கொடுத்தது என் அப்பாதான் (நல்ல அப்பாடான்னு முனுமுனுக்காதீங்க!). அரை லிட்டர் காணும்படி ஒரு சொம்பில் ஊற்றிக் கொடுப்பார். 'ஒடம்புக்கு நல்லதுடா. கண்ண மூடிகிட்டு இழுத்தெறி'ன்னு சொல்லுவார். ஒருமாதிரியான இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவை அது. கொஞ்ச நேரத்துக்கு சுள்ளென்று இருக்கும், அப்புறம் சரியாகிடும். தென்னை மரக்கள், பனைமரக்கள்ளை விட கொஞ்சம் இனிப்பு அதிகம். மயக்கம் குறைவு!



நாடாவி, மரங்களைத் தேர்வு பண்ணி 'பாளை' சீவி விட்டுக் கட்டி விடுவார். சில நாட்கள் கழித்துதான் பாளை நுனி சீவி அதில் பானையைக் கட்டுவார். அடுத்த நாள் ஒரு சுரை குடுவையுடன் மேலேறி, ஒவ்வொரு பானையிலும் வடிந்திருக்கும் கள்ளை குடுவையில் சேகரித்துக்கொண்டு இறங்குவார். குடுவையில் பார்த்தால், ஊர்பட்ட பூச்சிகள் இறந்துகிடக்கும் (ஒரு வேளை போதைக்கு இதுதான் காரணமோ?) . பூச்சி, தும்பட்டைகள் வடிகட்டப்பட்டு இன்னொரு பெரிய பானையில் கள் சேகரிக்கப்படும். இப்படியே ஒரு 40-50 மரங்கள் ஏறி கள் இறக்குவார். நமக்கு ஒரு மாமரம் கூட ஒழுங்கா ஏறத் தெரியாது!!! பானையின் உள்புறத்தில் சுண்ணாம்பு தடவினால் அதில் கிடைப்பது பதநீர். அவ்வளவு சுவையாக இருக்கும். நோ மயக்கம்... :)



கடையில் ஒரு பெரிய பானை இருக்கும். அதில் சேகரம் செய்யப்பட்ட கள் ஊற்றப்படும். நமக்கு கடைக்கு செல்ல அனுமதியில்லை!! கடை பக்கத்தில் ஒரு 'சாக்கனா கடை' இருக்கும். சுண்டல், ஊறுகாய், மாங்காய் வத்தல், முறுக்கு போன்ற சைடுகளுடன், அவித்த முட்டையும் ஆம்லெட்டும் கிடைக்கும். ரொம்ப நாளாக, போதைக்காக பானைக்கு கீழே ஊமத்தங்காய்களையும், பானைக்குள் பழங்கஞ்சியும் சேர்ப்பதாக ஒரு வதந்தியும் உலவியது. உண்மை தெரியவில்லை. அங்கு போய் நமக்கு சாப்பிடவும் அனுமதியில்லை.

கள்ளுகடை வைப்பதற்கு முன்பே என் அப்பா மன்னார்குடி பகுதி 'கள் வேண்டுவோர் கழகத்தில்' இருந்தார். கள் விற்க அனுமதி தர அரசை தொடர்ந்து வற்புறுத்துவதுதான் இதன் நோக்கம். இந்தக் கழகத்தின் வழி அப்பா மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். மன்னை நாராயணசாமி அவர்கள் வென்று அமைச்சரான தேர்தல் அது. வெளியூரில் ரொம்பப் பிரபலம் ஆகாததாலும், உள்ளூரில் அடிதடியான 'போக்கிலி' (போக்கிரி) என்று பெயர் எடுத்திருந்ததாலும், அப்பாவால் 5000 க்குமேல் ஓட்டு வாங்க முடியவில்லையாம் :)

இப்போது கள்ளுக்கு மீண்டும் வருவோம்!! கள் குடித்தால் கேடு என்று சொல்லித்தான் அரசாங்கம் 'மேல்நாட்டு' வகை சரக்குகளை விற்கிறது. இந்த மேல்நாட்டு மதுவகைகளின் லட்சணம் நிறைய நண்பர்களுக்கும் தெரியும். என்னத்ததான் போட்டு செய்றாய்ங்களோன்னு நிறைய பேர் புலம்புவதையும், ஒரு குவாட்டர்தான் சாப்பிட்டேன் ஒரே தூக்கா தூக்கிடுச்சு போன்ற அலறல்களையும் கேட்டுகிட்டுதான் இருக்கோம். ஆனால், கள்ளில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவது இல்லை. முழுக்க முழுக்க இயற்கை அளிக்கும் ஒரு பானம்தான் இது. எனக்குத் தெரிந்து எந்த உடல் உபாதையும் இதனால் வந்தது இல்லை.

இந்தப் பதிவு, கள் குடிப்பதற்கு மட்டும் ஆதரவானது இல்லை. பனைமரத்தை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதியும்தான். பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களின் பயன்கள் எண்ணிலடங்காதவை. சில பயன்கள்:

- ஓலை (வீட்டுக் கூரை வேய, விசிறி, பெட்டிகள் செய்ய)
- பனை மரம் (வீடு கட்ட உதவும்)
- பனைமட்டைக் கழி (நார் உறிக்க)
- பனங்காய் (நுங்கு)
- பனங்கிழங்கு (உணவுப்பொருள்)
- கள் (சிறந்த இயற்கை பானம்)
- பதநீர் (சுவை மிகுந்த இயற்கை பானம்)
- பதநீரிலிருந்து பனைவெல்லம் (சிறந்த இயற்கை இனிப்பு)
- பனங்கல்கண்டு (இருமலுக்கு நல்லது. சிறந்த இயற்கை இனிப்பு)
- கருப்பட்டி (இரும்புச்சத்து மிகுந்த இயற்கை இனிப்பு)

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் திருச்செந்தூர் போகும் வழியில், காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினரைக் கொஞ்ச நேரம் காக்கவைத்து விட்டு, 3 லிட்டர் பதநீர் குடித்துவிட்டுதான் போனேன்!! வரும்போது நிறைய்ய்ய்ய்ய்ய பனங்கல்கண்டு வாங்கி வந்தோம். பால், டீயில் போட்டுக் குடித்தால் அமிர்தமாக இருக்கும்!!

இப்படி ஏகப்பட்ட பயன்தரும் பனைபொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்ய அரசு உதவலாம். பதநீரையும், பனம்பழக் கூழையும் பதப்படுத்தி இனிப்புகள் செய்ய பயன்படுத்தலாம். கண்ணில் தெரியா பொருட்கள் கொண்ட 'ஈக்குவல்' இனிப்பான் பயன்படுத்துவதைவிட, பனங்கல்கண்டைப் பயன்படுத்தச் சொல்லலாம். எல்லாவற்றையும் விட, கள்ளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி, அதை விற்பவர் மட்டுமல்ல, குடிப்பவர் வயிற்றையும் பாதுகாக்கலாம்.

கள் வேண்டுவோர் கழகத்தில் சேந்துகுறீங்களா?? :)

Friday, October 15, 2010

விற்பனைக்கு: மரபணு மாற்றம் செய்யப்பட்ட 'உணவுப்பொருட்கள்'

ஆராய்ச்சியில் உள்ள, மரபணு மாற்றம் செய்யப்பட்ட டிசைனர் உணவுப்பொருட்கள் விற்பனைக்கு:

1. பீன் ஆரஞ்சு






2. பீஃப் ஆப்பிள்





3. பியர் காய்க்கும் மரம்





4. பெல்ஜியன் கிரீன் ஆப்பிள்





5. கார்னானா!





6. எக் பிளாண்ட்





7. லவ் தக்காளி





8. மெலங்ரேப்ஸ்





9. பன்றிபில்லர் (புதிய சைனீஸ் உணவுக்கு!)





10. பன்றேவல் (அசைவ பிரியர்களுக்கு- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்)

 11. ஸ்ட்ராப்பிள்



இவைகள் கடைகளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. நாம் வாங்காமலும் இருக்கப் போவதில்லை. Please avoid buying Genetically Modified Food and save our future generation!


படங்கள் நன்றி - www.freakingnews.com

Friday, October 8, 2010

அவந்தியாகிட்ட உஷாரா இருங்க!

டிஸ்கி: இது ஏதோ புனைவோ, பதிவர் சம்பந்தப்பட்ட பதிவோ இல்லை! ஒரு விழிப்புணர்வு முயற்சி மட்டுமே. கதையில் வரும் நபர்களோ சம்பவங்...... சரி சரி விஷயத்துக்குப் போவோம்!


புதுசு புதுசா நோய்கள், அதுக்குப் புதுசு புதுசா மருந்துகள், அப்புறம் புதுசு புதுசா மருந்துகளுக்குத் தடைகள். இப்போ சமீப தடை - அவன்டியா (Avandia) என்ற சர்க்கரை வியாதிக்கான மருந்துக்கு! இதில் ஆச்சரியம் என்னன்னா, அமெரிக்காவுல இதை தடை பண்றதுக்கு பெரிய விவாதமே நடந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்தியாவில் இந்த மருந்துக்குத் தடை. இதயம் சம்பந்தப்பட்ட சைட் எஃபெக்ட் வியாதிகள் வருவதால் இந்த மருந்து ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

வழக்கமா புருண்டி, சியர்ரா லியோன் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட பிறகுதான் நம்ம நாட்டுல தடை போடுவாங்க. அவ்வளவு வேகம்!! ஆனா, இந்த முறை உண்மையிலேயே வேகமா செயல்பட்டு(!) தடை பண்ணியிருக்காங்க. பாராட்டப் படவேண்டிய விசயம்தான்.

உண்மை நிலவரம் என்னன்னா, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள், உணவுப்பொருட்கள் நம் நாட்டில் தாராளமா புழக்கத்தில் இருக்கு. நம்மிடையே உள்ள அறியாமை, வெளிநாட்டில் இருந்து வந்தாலே அது தரமா, பாதுகாப்பா இருக்குங்குற மோகம்தான் இதுக்குக் காரணம்.

சர்க்கரை நோயின் தாயகம் என்கிற அசைக்கமுடியா இடத்தில் இருக்கும் நம் நாட்டுக்கு, இந்த மாதிரி தடைகள் அவசியம். உங்க உறவினர், நண்பர்கள் யாராவது 'அவந்தியா'கிட்டே சிநேகமா இருந்தா, உடனே அதை கட் பண்ண சொல்லுங்க.

வாணலியில் இருந்து அடுப்பிற்குள் பாயவேண்டாமே...

மேலதிக தகவல்களுக்கு:

நன்றி: www.pharmainfo.net, டைம்ஸ் ஆஃப் இந்தியா
டிஸ்கி1: இந்த இணையங்களில் இருக்கும் தகவல்களுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.  

Monday, October 4, 2010

இந்தப் பயங்கரம் இந்தியாவிலும் நடக்கும்!

செய்தி: 1940 களில் அமெரிக்க மருத்துவர் குழு - மருத்துவ பரிசோதனைங்குற பேர்ல க்வாதமாலா (லத்தின் அமெரிக்க நாடு) நாட்டுல லட்சக்கணக்கான பேருக்கு பால்வினை நோய் பரப்பும் கிருமிகளை செலுத்தி சோதனை பண்ணியிருக்காங்க.

இந்தப் பயங்கரச் செய்தி எப்படியோ வெளில வந்ததும், தானைத்தலைவி ஹிலாரியும், கறுப்புத்தலைவன் ஒபாமாவும் ஒரு போன் போட்டு அந்த நாட்டுத் தலைவரிடம், 'சாரிங்க தெரியாம(?)  இந்தத் தவறு நடந்து போச்சு. 40களில் நடந்ததாலே, இதை அப்படியே விட்டுடுவோம். என்னதான் இருந்தாலும் இந்தமாதிரி அயோக்கியத்தனம் செய்றதல்லாம், எங்களுக்குப் பழக்கமில்ல' ன்னு சொல்லியிருக்காங்க.

விசயம் வெளில வந்ததுனாலே சாரி கேட்டாங்க. இல்லன்னா???

இதே மாதிரி பல சோதனைகள் நம்ம இந்திய 'எலிகள்'மீது இன்னும் நடந்துகிட்டுதான் இருக்கு. என்ன ஒண்ணு, இப்போதைய சோதனைகள் எல்லாம் ஓப்பனாவே வருது.

பி.டி பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய்ன்னு ஒவ்வொன்னா வருது. சோளக்களி சாப்பிடறது நமக்கு அருவருப்பா இருக்கு. அதே சோளத்த செக்சியா பாக் பண்ணி, கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னு குடுத்தா பல்ல இளிச்சிட்டு சாப்பிடுறோம்.

நம்மள்ல எத்தன பேரு கேழ்வரகு கூழ் குடிக்கிறோம்? நம்ம மேட்டுகுடி மக்களுக்கு, ஏன் பெரும்பாலான மக்களுக்கு அது ஜெயில்லயும், நாகாத்தம்மன் திருவிழாலயும் மட்டும் கிடைக்கிற பொருளா தெரியிது. ஆனா, நெஞ்சுக்கொழுப்பு குறைய 'ஓட்ஸ்' குடிக்கிறோம்.

அமெரிக்காகாரன் எலியத் தேடி ஓடவேண்டியதில்ல. நாமளே போய் பெருமையா எலிவரிசையில போய் நிக்கிறோம்.

தக்காளி, வெண்டை, வெள்ளரி, கத்தரிக்காய், வெங்காயம் (பெருசு) இதுலல்லாம் என்ன சுவை இருக்கு இப்போ? பாக்க நல்லா பளபளன்னு இருக்கு. கோழி கூட கொழு கொழுன்னு இருக்கு, ஆனா நாட்டுக் கோழியின் சுவை இருக்கா? முன்னே இருந்த பாலின் சுவை இப்போ இருக்கா? முட்டை, நீர் (நிலத்தடி நீர் கெட்டுப்போயி வருஷமாச்சு, கெமிக்கல்களால்).......?????

இன்னும் சில வருடங்கள் கழிச்சு, இதே அமெரிக்காவுலருந்து நமது இந்திய பிரதமருக்கு இதே மாதிரி ஒரு போன்கால் வரும். அமெரிக்க அதிபர் 'சாரிங்க. இது 2007 ல நடந்ததாலே, எங்களால ஒன்னும் பண்ண முடியல. பெயர் தெரியா, குணப்படுத்த முடியா நிறைய கிருமிகள எங்க மன்சான்டோவும், மத்த கம்பெனிகளும் உங்க நாட்டுப் பயிர்களில் கோத்து வுட்டுட்டாங்க. பரவால்ல. அத அழிக்க 'சூப்பர் அழிப்பான் 2050' அதே கம்பெனிதான் தயாரிச்சு இருக்கு. நைசா அதையும் அனுமதிச்சுடுங்க'ன்னு சொல்லத்தான் போறார். நம்ம பிரதமரும் (யாரு அப்போ இருப்பா? ராகுலோட பேரன் ரோஷன் வாந்திதான்), இளிச்சுகிட்டே தலையாட்டத்தான் போறாரு.

இப்போதைக்கு, இலவச மருந்து, புயல் நிவாரணம், இலவச மருத்துவ முகாம், உங்க மருத்துவர், 'இந்த மருந்து இப்பத்தான் அமெரிக்காவுலருந்து வந்துருக்கு. ஒரு வாரம் ட்ரை பண்ணலாம்' -- இதுலல்லாம் கொஞ்சம் உசாரா இருங்க!!!

விரிவான செய்திக்கு:
http://timesofindia.indiatimes.com/world/us/Barack-Obama-apologizes-to-Guatemala-for-US-sex-disease-study/articleshow/6670605.cms