Saturday, February 15, 2014

அமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்

பிசினஸ் பார்ட்னர், அவரோட டொயோட்டா செக்கோயா வண்டிய ஊருக்குத் திரும்பி போறவரைக்கும் ஓட்டிக்கோப்பான்னு சொல்லி குடுத்துட்டாரு. ரொம்ப நாளா ஓட்டாம, பனியிலேயே இருந்ததாலே, பேட்டரி செத்துப்போச்சு. அவர் வீட்டுக்கு ஆல் ஹேண்டா இருக்குற பாப் ங்குற வெள்ளைக்காரரோட பேட்டரி மாத்தலாம்னு போயிட்டு திரும்பி வீட்டுக்கு வரப்போ, பின்னாடியே வந்த போலிஸ்கார் லைட்டைப் போட்டுட்டாரு (இங்கே, பின்னாடி போலிஸ்கார் லைட்டைப் போட்டா, வண்டிய ஓரங்கட்டிடணும்).

நாம ஒன்னும் தப்பு பண்ணலையேன்னு என்னான்னு கேட்டா, லைசன்ஸ் குடுன்னாரு. இந்தியன் லைசன்ஸக் குடுத்தேன். குழப்பத்தோட வாங்கிப் பாத்துட்டு, மின்னசோட்டா லைசன்ஸ் இல்லையான்னு கேட்டாரு. இல்லைன்னேன் (என்னோடது 2011ல் செத்துப்போச்சு). என்ன தப்பு பண்ணேன், எதுக்கு நிறுத்தினீங்கன்னு கேட்டேன். லைசன்சக் காட்டி இதுதான் பிராப்ளம்னு சொன்னாரு. நான், இந்தியன் லைசன்சோட ஒரு வருடம் வரை ஓட்டலாம்ங்குற மின்னசோட்டா சட்டத்தைச் சொன்னேன். எப்பிடித் தெரியும், அதுக்கு ஏதாவது டாக்குமென்ட் இருக்கான்னாரு. உங்க வெப்சைட் பாத்துதான் சொன்னேன்னேன், ஜெனிவா கன்வென்ஷன் படி அமெரிக்காவும், இந்தியாவும் பரஸ்பரம் சொந்த நாட்டு லைசன்ஸ் வச்சு 1 வருடம் வரை ஓட்டலாம். ஆனா, அது பிசினஸ் விசாவுக்கு மட்டும்தான் பொருந்தும்ங்குற சட்டத்தையும் சொன்னேன். பாஸ்போர்ட் இருக்கான்னாரு. பிசினஸ் பார்ட்னர் வீட்ல இருக்குன்னேன். இன்சுரன்ஸ் இருக்கான்னாரு, அதுவும் வீட்ல இருக்குன்னு சொன்னேன். ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு, அவர் வண்டிக்குப் போய் அவர் மேலதிகாரிக்குக் கால் பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன்.

5 நிமிடம் கழிச்சு திரும்பி வந்து, இனிமே வெளில போகும்போது பாஸ்பார்ட்டோட போங்க, இப்போ நீங்க போகலாம்னு சொன்னாரு. உடனே, கூட வந்த பாப் (இவர் ஒரு முன்னாள் ராணுவத்தினர் - வெட்டரன்), நீங்க அவர் கேட்ட கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லலய்யேன்னு போலிசப் பாத்து கேட்டாரு. போலிஸ்கார், வண்டி ஓனருக்கு லைசன்ஸ் இல்லன்னு சொன்னாரு. ஒரே குழப்பமா போச்சு, இருந்தாலும், நாங்க எதுவும் தப்பா வண்டி ஓட்டல, எதுக்கு வண்டிய நிறுத்துனீங்கன்னு பாப் போலிஸ்கார் கிட்ட பிரச்சினை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு, ஏதுடா வம்பா போச்சு, அவரே நாமள போகச் சொல்லிட்டாரு, பாப் எதுக்கு பிரச்சினை பண்றாருன்னு, பாப் ஐ சமாதானம் சொல்லி, போலிஸ்கார்கிட்டே நன்றி சொல்லி வீடு வந்து என் பிசினஸ் பார்ட்னர்கிட்ட கேட்டா, அவர், ஆமா நான் கொஞ்ச நாளா சைல்ட் அலிமோனி கட்டல (முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைக்கு சப்போர்ட்), சமீபத்துல இவரோட 22 வயசு பையன் மனநிலை பாதிக்கப்பட்டு துப்பாக்கியால சுட்டுகிட்ட்டு தற்கொலை செஞ்சுகிட்டான், அந்த சமயத்துல இவர் 2 மாசம் அந்த செக் அனுப்பாம விட்டுட்டாரு. அதனால, நிர்வாகம், அவரோட லைசன்ஸ தற்காலிகமா நிறுத்தி வச்சுருக்கு, இவருக்குத் தெரிவிக்காம (அல்லது, இவர் தெரிவித்தலை அறியவில்லை).

முதல்நாள், அதுவும் லாரி பெருசுக்கு இருக்குற செக்கோயா ஓட்டும்போது, கொஞ்சம் மெதுவா போனதால வந்த வினை, பின்னாடி வந்த போலிஸ்கார், தன் கணிணியில் வண்டி நம்பரை வச்சு, லைசன்ஸ் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டுருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, என் பிசினஸ் பார்ட்னர்தான் வண்டிய ஓட்டுறார்னு நெனச்சு நிறுத்தி இருக்காரு!

பார்ட்னர்கிட்ட சொன்னவுடன், அவரோட ஃபண்ட் மேனேஜர்கிட்ட போன் பண்ணி, உடனே பெண்டிங் கிளியர் பண்ணச் சொல்லிட்டாரு. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை, கிளியர் பண்ற வரைக்கும், நாந்தான் பார்ட்னருக்கு ட்ரைவர் வேலை பாக்கணும் :(

பாடங்கள்:

1. என்னோட டவுன்டவுன் வாலன்டைன் பார்ட்டிக்கு சங்கு.
2. பார்ட்னர் அவரோட கிறிஸ்டியன் பார்ட்டிக்குப் போக முடியாம பயந்துகிட்டு வண்டி ஓட்டல.
3. பிசினஸ் விசாவுல இருக்குறவங்க கையோட பாஸ்போர்ட் வச்சுகிட்டு திரிங்க.
4. போலிஸ்கார்கிட்ட ஆர்க்யூ பண்ணாதீங்க.
5. என்னதான் அமெரிக்கா வாங்க வாங்கன்னு அழைச்சாலும், சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை (பார்ட்னர் புலம்பியது, தனி விவாதத்துக்கு ஏற்றது)

Monday, December 30, 2013

சாரி 2013, உன்னை எனக்குப் பிடிக்கல!

இன்றிரவு, கொடைக்கானல் ஸ்டெர்லிங் ரிசார்ட்டுக்கு செல்கிறேன், குடும்பத்தோடு புத்தாண்டை வரவேற்க. கொண்டாடும் மனநிலையில் இல்லையென்றாலும், குடும்பத்திற்காக.

எத்தனையோ வருடங்கள் கடந்து வந்தாகிவிட்டது, லாபங்கள், நட்டங்கள், வரவு, செலவு எல்லாமும் பார்த்தாகிவிட்டது! ஆனால், எனக்கு 2008, 2013 மாதிரி சோதனை கொடுத்த வருடங்கள் என வேறு எதுவும் இல்லை!!

நான் மட்டும்தான் புலம்புகிறேன் என்று பார்த்தால், என் நெருங்கிய நண்பர்கள் சில பேருக்கும் இந்த வருடம் சோதனையான வருடம்.

எல்லா தடைகளும் நீங்கி, நானும், நண்பர்களும் வரும் வருடத்தில் ஏற்றம் பெற விருப்பம். பார்க்கலாம், 2014 என்ன வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்று!!

நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய 2014 புத்தாண்டு வாழ்த்துகள்!!




Thursday, March 8, 2012

கவர்ன்மெண்ட் கண்ணாஸ்பத்திரி!


நேற்று நள்ளிரவு 12:30 இருக்கும், தூங்கப் போகலாம்ணு பெட்டுக்குப் போயி கண்ணயரும் நேரம் திடீர்னு கண்ணில் ஏதோ தூசி விழுந்த மாதிரி ஒரு உணர்வு. சரி, நம்மூர்ல இருக்கும் பாசக்கார தூசிப் பயபுள்ள நம் கண்ணுக்குக் கண்ணா வந்துருச்சு போலன்னு அனிச்சையா கண்ணைக் கசக்கிட்டேன். சில வினாடிகள் ஆச்சு, ஒன்னும் சரியாகிற மாதிரி இல்ல. சரி ஏதோ, பூச்சிதான்
தஞ்சமடைய வந்திடுச்சு போலன்னு லைட்டை போட்டு (அட ஆமாங்க, கரண்ட் இருந்துச்சு!) கண்ணாடில பாத்தா இடது கண்ணு புசுபுசுன்னு வீங்கிடுச்சு. இதுமாதிரி முன்ன பின்ன ஆனது இல்லேங்கிறதாலயும், கண்ணானது நமக்கு கண் போன்றது(!?) எனும் காரணத்தாலயும் கொஞ்சம் முனைப்பா பாத்தா, கண்ணுக்குள்ளே கலவரம் ஆகி, வெள்ளை கறுப்பை மறைச்சு ஒரு layer கட்டிடுச்சு.

தங்ஸ் உடனே பரபரப்பாகி, கண்ணைக் கழுவுங்க, கண்ணைக் கழுவுங்கன்னு என்னவோ நான் சைட்டடிக்கும்போது சொல்றமாதிரி திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டே இருந்தாங்க. எனக்கு எதுவோ சரியில்லை மாதிரியான உணர்வு!

உடனே கிளம்பி, பக்கத்தில் இருக்கும் KM மருத்துவமனைக்குப் போகலாம்னு முடிவெடுத்தாச்சு. தங்ஸ் நான் ஸ்கூட்டில கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்னு சொன்னதும் புதுப்பயம் தொத்திகிச்சு! ஆத்தா, நீ இருக்குற டென்ஷன்ல எங்கியாவது ஆட்டோவா பாத்து மோதிடாதேன்னு கேட்டுகிட்டேன். நல்லவேளை, சாலையில் யாரும் இல்லைங்குறதாலே ஒத்தக்கண்ணன் உயிருக்குப் பங்கம் வரல. மருத்துவமனைக்குப் போயி கேட்டா, இங்கே பணி மருத்துவர் மட்டும்தான் இருக்காரு, பக்கத்துல இருக்கும் clinic போங்கன்னு சொன்னாங்க. அங்கே போனா, ரெண்டு பணி மருத்துவர்கள், இளைஞர்கள். கண்ணப் பாத்துட்டு, allergy மருந்து எழுதித் தரேன்ன்னாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு சின்ன discussion என்னவா இருக்கும்னு. எனக்கு, அங்கே பாக்கிறது சரின்னு படல. அவங்ககிட்டேயே கேட்டோம், இப்போதைக்கு கண் பாக்குற மருத்துவர் எங்கே இருப்பார்னு. அவரு, இப்போ எந்த சிறப்பு மருத்துவமனையும் இருக்காது, பேசாம எழும்பூர்ல உள்ள அரசு கண் மருத்துவமனைக்குப் போங்கன்னு சொன்னார்.

எனக்கு அந்த மருத்துவமனையைப் பத்தி தெரியாது. தவிரவும், அரசு மருத்துவமனைகள்மேல் பொதுவாக இருக்கும் தப்பான ஒரு பார்வை எனக்கும் இருந்தது. தயங்கிகிட்டே, சரி வாசன் மருத்துவமனையை எதுக்கும் ஒரு தடவை பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். அவ்வளவு தூரம் தங்ஸ் வண்டி ஓட்டவேணாம்னுட்டு (கடவுள் உசுருக்கு ஒரு தடவை மேல கருணை காட்டலேன்னா?) ஒரு ஆட்டோவைப் பிடிச்சோம். நான் நண்பர்களை யாராவது கூப்பிட்டுகிட்டுப் போறேன்னு சொன்னா, தங்ஸ் அவங்கல்லாம்
தூங்கிகிட்டு இருப்பாங்க, தொந்தரவு பண்ணவேணாம், நானே கூட வரேன்னுட்டாங்க (நண்பர்களே, இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது?). நல்லவேளை, வீட்டில் அக்கா பையன் இருந்ததால் குழந்தைகளைப் பாத்துக்கச் சொல்லிட்டு முதலில் வடபழனி வாசனுக்கு போகச் சொன்னேன். இடையில், இடது கண்ணை திறக்கவே முடியல, ஆனா வலி இல்ல. முதல்ல பார்த்த மருத்துவர், நீங்க நெனச்சமாதிரி விழிப்படலம் கிழியல்லாம்
இல்ல, கிழிஞ்சுருந்தா வலி தாங்க முடியாதுன்னு சொன்னார்.

வாசன் பூட்டி இருந்தது. பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோக்காரர், சூரியாவுக்குப் போங்க அங்க பாப்பாங்கன்னு சொன்னார். சரின்னுட்டுஅங்கே போனா, அங்கேயும் பணி மருத்துவர் மட்டும்தான் இருக்கார். சரி இது ஒத்துவராதுன்னு ஆட்டோவை நேரா எழும்பூருக்கே விடச்சொன்னேன். வண்டி வேகமெடுக்கவும், எனக்குள் பல சிந்தனைகள். இனிமே, நம்மள ஒத்தக்கண்ணன்னுதான் கூப்பிடப்போறதாக உறுதியா நம்பினேன். நினைவில், அந்தக்கால ஒத்தக்கண்ணன் வில்லன்கள் வரிசையா வந்து hai
சொல்லிட்டுப்போனாங்க. எனக்கு என்னவோ, water world villain தான் புடிச்சுருந்தாரு, சரி அதேமாதிரி கெட்டப்புலேயே ஆகிருவோம்னு முடிவெல்லாம் பண்ணியாச்சு!

தங்ஸ் வழி முழுக்க இருந்த பெரிய கோயில்களில் இருந்து, இன்னிக்கோ நாளைக்கோ இடிபடப்போகும் சாலையோர திடீர் தெய்வங்கள் வரை instant பிரார்த்தனை, நேர்த்திகடன் எல்லாம் வேண்டிகிட்டு வந்தாங்க. நல்லா ஆனதுக்கு அப்புறம், என்ன பாடோ? எந்தக் கோயில் நேர்த்திக்கடனோ? இவ்வளவு ரணகளத்திலும், தூங்கப்போறதுக்கு கொஞ்ச முன்னாடி ஒரு சாமியைப் பத்திக் கிண்டலடிச்சுகிட்டு இருந்தேனே, அதான் கண்ணக் குத்திருக்குமோன்னு நான் கேட்ட கேள்வியை தங்ஸ் ரசிக்கவில்லை! நீங்க அடங்கவே மாட்டீங்களான்னு ஒரு முறைப்பு கிடைத்தது.

ஒரு வழியா மருத்துவமனை வந்தோம். யாருமே இல்லை (ஈ, காக்கா உள்பட. ஆனா நிறைய நாய்கள் வெளியில் நின்றிருந்தன). ஆட்டோவை காக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனோம். ஒரு ஆண் செவிலி வந்து என்னவென்று கேட்டார். விபரத்தைச் சொன்னோம். உக்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனார். கொஞ்ச நேரம் கழித்து ரெண்டு பெண் மருத்துவர்கள் வந்தார்கள். ஒருவர் ரொம்பச் சின்ன வயது. இன்னொருவர் 30 - 35 இருக்கலாம், கர்ப்பமாக இருந்தார். அடடா, அவரை இந்த நேரத்தில் தொந்தரவு செஞ்சுட்டமேன்னு கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது. ரெண்டு பேரும் ரொம்ப பொறுமையாவும், அக்கறையாவும் கண்ணை சோதிச்சாங்க. vision test பண்ணிட்டு, ஏதோ chemical இல்லேன்னா பூச்சி விழுந்துருக்கும், கவலைப்படத் தேவையில்லைன்னு
சொன்னாங்க. செவிலியைக் கூப்பிட்டு, ஒரு wash பண்ணிட்டு மருந்து போட்டு அனுப்பிவிடச் சொன்னாங்க. அவரும், பொறுமையா ஒரு power wash பண்ணி மருந்து போட்டு விட்டார். திரும்பும்போது, மருந்துகள் மாத்திரைகள் கொடுத்து காலை வரை பார்த்துவிட்டு, சரியாகலன்னா வந்து காண்பிக்கச் சொன்னாங்க. சரியாகிவிட்டது!

அரசு மருத்துவமனைகள்மேல் எத்தனையோ குற்றச் சாட்டுகள் இருந்தாலும், எனக்குக் கிடைத்த கவணிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. மன்னார்குடியில் சின்ன வயதில் பார்த்த அந்த மிரட்டும் மருத்துவமனை இல்லை. சத்தம்போடும் செவிலிகள், ஏனோ தானோவென்ற மருத்துவர்களின் கவனிப்பும் இங்கில்லை. ஒரு வேளை கூட்டம் குறைவாக இருந்தால் உரிய கவனிப்பு கிடைக்குமோ என்னவோ? அவர்களும் உணர்ச்சியுள்ள மனிதர்கள்தானே?

செவிலிக்கு இந்தப் பதிவின் மூலம் நன்றி. இதே கவனிப்பை எல்லோருக்கும் அளிக்க வாழ்த்துகள்! அந்த இரண்டு பெண் மருத்துவர்களுக்கும், மகளிர் தினமான இன்று வாழ்த்துகளும் நன்றிகளும் கூறுவது மிகப் பொருத்தமானதாக இருக்கும். கர்ப்பமாய் இருக்கும் அந்த மருத்துவர் சுகப்பிரசவத்தின் மூலம் ஒரு நல்ல குடிமகனை/குடிமகளைப் பெற்றெடுக்கவும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

===

Friday, December 30, 2011

என்ன நடக்குது இதிலே?

இப்பத்தான் கொஞ்ச வருசங்களுக்கு முன்னே மார்க்கெட்டுக்கு வந்தது. இப்போ இதுக்கான மார்க்கெட் ரொம்ப பலமாவும், இன்னும் 10-15 வருஷங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் தொழில்நுட்பமாகவும் இருக்கிறது. வந்த புதிதில், பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே பயன் தரும் என்று நினைக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ஒரே பெயரில் இரண்டு மூன்று மளிகைக் கடைகள் இருந்தால்கூட பயன்படுத்த ஏற்றது என்பது இதன் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்!

இந்தத் தொழில்நுட்பம்தான் Data Warehouse and Business Intelligence (DW&BI). அடிப்படை தெரிந்துகொண்டால், இது ஒன்றும் பெரிய விஷமல்ல. எந்த விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்பதற்கு, நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு செயலை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

நாம் ஒரு ATM க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். என்ன மாதிரியான விஷயங்களுக்காக அங்கு செல்வோம்? பணம் எடுக்க, பணம் மாற்ற (transfer), Mini Account Statement எடுக்க, காசோலை deposit செய்ய மாதிரியான வேலைகளுக்குத்தான் அங்கு செல்வோம். இது சாதாரணமாக தொழில்நுட்ப மொழியில் சொன்னால் - Transactions. இந்த மாதிரி நடக்கும் transactions களை பதிவு செய்து வைத்துக் கொள்வது, OnLine Transaction Processing database (OLTP).

இப்போது நம் தேவைக்கு, கடந்த ஒரு வருடத்துக்கான account statement வேண்டும். நமக்கு 4-5 accounts இருப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் இதை ATM ல் பெற முடியாது. அதாவது OLTP database ல் அந்த விவரங்கள் இருக்காது. 

அல்லது, வங்கியின் தலைமையகத்தில் புதிதாக ஒரு loan offer or credit card offer கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு, வாடிக்கையாளர்களின் முழு விவரம் வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, வங்கியில் 2 க்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருக்கும், கடந்த 3 வருடங்களில் மாதத்துக்கு குறைந்தது 5 முறை பணம் deposit செய்யும், credit card இல்லாத, சென்னையில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் வேண்டும். இந்த விவரத்தை, வங்கியில் உள்ள OLTP database ல் எடுக்க முடியாது. ஏனென்றால், இந்த database-ல் 1 வார காலம் அல்லது 1 மாத கால விவரங்கள்தான் இருக்கும். மேலும், இவ்வளவு விரிவான விவரங்களை அந்த database சேமித்து வைக்காது. இது வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பயன்பாடு மாறும்.

இந்த மாதிரி விவரங்களை தேவையான முறையில் நீண்ட காலத்துக்குச் சேர்த்து வைத்து, தேவையானபோது அளிக்கும் system தான் OLAP (OnLine Analytical Processing) database. இதுதான் Data Warehouse database (DW). இதிலிருந்து என்ன மாதிரி விவரங்கள் எடுக்கலாம், எப்படி எடுக்கலாம், எப்படி இந்த விவரங்களைக் கொண்டு வருங்காலத்தில் இன்னும் சிறப்பாகத் திட்டமிடலாம் (Decision Making), நஷ்டங்களைக் குறைக்கலாம் என்பதுதான் Business Intelligence (BI). அதாவது Data வை எப்படி எந்த விதத்தில் சேமிக்கலாம் என்பது Data Warehouse (DW) அந்த data வை எப்படி பயன்படுத்தலாம் என்பது Business Intelligence (BI). இது இரண்டும் எப்போதுமே ஒன்றாகத்தான் பயன்படுத்தப்படும். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை!

இந்த இரண்டு ஏரியாக்களிலும் பயன்படுத்த நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. Informatica, IBM, SAP, MicroStrategy, Microsoft, Oracle போன்ற நிறுவனங்கள் இரண்டு ஏரியாக்களுக்குமான மென்பொருட்களைத் தயாரிக்கிறர்கள். வருங்காலத் தேவையைக் கவனத்தில் கொண்டு, மேலும் சில நிறுவனங்கள் இந்தத் துறையில் கால் வைக்கின்றன. இந்த மென்பொருட்களுக்கானத் தேவை, முன்பு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் என்றிருந்த நிலை, இப்போது சிறிய, நடுத்தர நிறுவனங்களும் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி நீண்டகாலப் பயன் பெறலாம் என்று மாறிவிட்டது. எனவே, இந்த மென்பொருட்கள் தெரிந்த software consultants/engineers க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. இது வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, data எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் பயன்படும். ஒவ்வொரு வர்த்தக முறைக்கும் (domain) ஒவ்வொரு மாதிரி இந்த DW database ஐ வடிவமைக்கவேண்டும்.


எந்தெந்த வகையான வேலைகள் DW&BI ல் கிடைக்கும்?

- DW&BI Architect
- Data Modeler
- ETL Developer
- BI Developer
- Tester
- DW&BI Manager
- Business Analyst
- ETL/BI DBA
- Operator
- Production Support Executive

இந்த மாதிரி வேலைகள் தற்போதைக்கு அமெரிக்காவில் அதிகமாக இருக்கின்றன. UK & other European நாடுகளிலும், தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரை, consulting companies நிறைய வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. Product based companies களில் கடந்த சில வருடங்களாக பிரகாசமான வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.


முக்கியமான மென்பொருட்கள் (DW):
- Informatica (Informatica Corporation)
- Data Stage (IBM)
- SSIS (Microsoft)
- Ab Initio
- ODI (Oracle)

முக்கியமான மென்பொருட்கள் (BI):
- MicroStrategy (MicroStrategy Corporation)
- Cognos BI (IBM)
- SSRS/SSAS (Microsoft)
- Business Objects (SAP)
- Hyperian (Oracle)

மேற்கண்ட மென்பொருட்களில் பயிற்சி பெற (அ) மேலும் விவரங்கள் தேவையெனில், கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

Axiom Semantics Technology Services (ASTS)
14 L.B Road, First Floor
Opp. Arihant E Park, Near Adyar signal
Adyar, Chennai - 20
Phone: 64558899, 9543322116, 9629529295
Email: info@axiomsemantics.com
Web: www.axiomsemantics.com

***

Wednesday, December 28, 2011

Autism - ஒரு நோயல்ல!

இப்போது பரவலாக கேள்விப்படும் ஒரு வார்த்தை - ஆட்டிசம் (Autism). இது ஒரு நோயல்ல, குழந்தையின் வளர்ச்சியில் ஒரு நிலை அல்லது ஒரு குறைபாடு எனச் சொல்லலாம். இந்த நிலை பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு டாக்டர்களால் சொல்லப்பட்டாலும், இதுதான் இந்தக் குறைபாட்டுக்குக்  காரணம் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.

இந்த  குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றக் குழந்தைகளை விட கீழ்கண்டவைகளில் வித்தியாசமாக இருப்பார்கள்;


1. படித்தல், பாடங்களைக் கவனித்தல்

2. வலியறிதல் (வலியே தெரியாது அல்லது சிறு வலிக்கும் பெரிதாக கத்துவார்கள்)

3. பயமின்மை

4. சொல்வதையே திருப்பிச் சொல்லுதல்

5. பார்த்த படங்களையே (அ) விளம்பரங்களை மறுபடி மறுபடி பார்த்தல்

6. அபார ஞாபகசக்தி

7. பிடிவாதம் பிடித்தல்

8. குறிப்பிட்ட சாப்பாடு மட்டும் சாப்பிடுதல் (அ) தவிர்த்தல்

9. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளுதல்

10. கேள்வி கேட்டால் பதில் கூறாமல் இருத்தல்

பொதுவாக, இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை 2 வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். அதீத தெரபி மூலமும் சில மருந்துகள் மூலமும் இந்தக் குறைபாட்டைச் சரி செய்ய வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய கணக்கின்படி, அமெரிக்காவில் சராசரியாக 100 ல் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆண்குழந்தைக்கு 1 பெண்குழந்தை என்ற அளவில் இது பாதிக்கிறது. என் நண்பர்களில் 3 பேரின் ஆண் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. அந்த மூன்று குழந்தைகளும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அவர்களின் அன்றாட போராட்டத்தை நான் அறிவேன். ஒரு பையன் ஷாப்பிங் செய்துகொண்டிருக்கும்போது, கடையிலிருந்து வெளியே ஓடிவிட்டான், கண் இமைக்கும் நேரத்தில். நண்பன் சுதாரித்துக்கொண்டு தேடினால் பையனைக் காணவில்லை. போலீசுக்கு போன் செய்து, கடையில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து தேடி கடைசியில் 2.5 மைல் தூரத்தில் ரயில் போகும் தண்டவாளத்தில் நின்றவனைக் கண்டுபிடித்தார்கள். இன்னொரு நண்பனின் பையன், கொதித்துக்கொண்டிருந்த வென்னீரை அப்படியே இழுத்து வயிற்றில் கொட்டிக் கொண்டான்.

பெற்றோர்களின் பொறுமையை இந்தக் குழந்தைகள் ரொம்பவே சோதிப்பார்கள். ஷாப்பிங் சென்றால், கார் பார்க்கை விட்டு நகரமாட்டார்கள். ஒரு இடத்தில் நிற்கமாட்டார்கள், யாராவது சொன்னால் கேட்கமாட்டார்கள், அடித்தால் வலிக்காது, மேலும் ஆக்ரோஷமாக ஆகிவிடுவார்கள். பெருங்குரலெடுத்துக் கத்துவார்கள்.

இது மாதிரி அந்தப் பெற்றோர்களுக்கு கிடைக்கும் தினப்படியான அதிர்ச்சிகள், அனுபவங்கள் வேதனை தரக்கூடியவை. இதன் காரணமாகவே, அவர்கள் பெரும்பாலும் யாரோடும் ஒட்டுவதில்லை. எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. நாங்கள் ஒரு குறிப்பிட்ட சில நண்பர்கள் வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே வீட்டுக்கு வருவார்கள். இந்த மாதிரிக் குழந்தைகளுக்குத் தேவை நமது பரிதாபமோ அல்லது அறிவுரையோ அல்ல. சிறிய புன்னகை மற்றும் நிறைய பொறுமையும் அன்பும்.

இந்தக் குறைபாடு உள்ள பெரும்பாலான குழந்தைகள், ஏதாவது ஒரு தனித்திறமையைக் கொண்டிருப்பார்கள். என் நண்பனின் பையன் அபார ஞாபக சக்தி கொண்டவன். அமெரிக்காவில் உள்ள எல்லா மாநிலங்களையும் அதன் தலைநகரோடு சொல்லுவான். மாநிலத்தின் பேரைச் சொன்னால் அந்த மாநிலத்தின் பேஸ்பால் அணியின் பெயரைச் சொல்லுவான். இன்னொரு நண்பரின் பையன் மிக அருமையாக ஓவியம் வரைவான்.


அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில், இந்தக் குழந்தைகளுக்கென சிறப்பு பள்ளிகள் உள்ளன. அங்கு, இவர்களுக்கு தனித்த கவனம், தனித்தன்மையோடு தயாரிக்கப்பட்ட பாட திட்டங்கள், பெற்றோருக்கென்று கலந்துரையாட குழுமங்கள் இருக்கின்றன. இந்தியாவில், இது பற்றி சரியான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.

இந்தக் குறைபாட்டுக்குக் காரணமாக இதுவரை இரண்டு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று சிறு வயதில் போடப்படும் நோய்த்தடுப்பூசிகள். மற்றொன்று, ஜீன் குறைபாடு. இதில், நோய்த்தடுப்பூசிகளால்தான் இந்தக் குறைபாடு என்பது சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஜீன் மாற்றங்கள்தான் என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஒரு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நமது குடும்ப சமூக அமைப்புதான் இதற்குக் காரணம் என்று கூறினார். பொதுவாக, குழந்தைகளை மற்றக் குழந்தைகளோடு விளையாட விடுவதில்லை, கற்றுக்கொடுத்தல் குறைவாக இருக்கிறது என்பது போல் சொன்னார். என்னால் முழுமையாக இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால், என் 3 நண்பர்களில், இருவர் நண்பர்கள், உறவினர்களிடம் நன்றாகக் கலப்பவர்கள். இன்னொரு நண்பர் பெரும்பாலான நேரங்களில் எதையாவது குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

என்னைப் பொறுத்தவரை நான் காரணமாக நினைப்பது, மாறி வரும் நமது உணவுப்பழக்கங்கள்தான். இப்போது நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலும், மரபணு மாற்றப்பட்டவையாக இருக்கின்றன. இதனால்தான் இந்தக் குறைபாடு என்று நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும், சமீப காலங்களில் அதீத மாற்றம் கண்டது, சுற்றுப்புறமும் உண்ணும் உணவுப்பொருட்களும்தான். 20 வருடங்களுக்கு முன், யாருக்காவது புற்றுநோய் என்றால் அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். இப்போதெல்லாம், அது எந்தவகை புற்றுநோய் என்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் அளவிற்கு போய்விட்டது. உணவு முறைகளும், சுற்றுப்புறச் சூழலும் காப்பாற்றப்படாவிட்டால், இந்த மாதிரி புதுசு புதுசாக நோய்களும் வந்துகொண்டுதான் இருக்கும்.

Autism பற்றிய மேலதிக தகவல்களுக்கு ;

  •     http://www.autism-india.org/index.html
  •     www.autismspeaks.org
  •     www.cdc.gov
  •     http://www.ucdmc.ucdavis.edu/mindinstitute/
  •     http://archpsyc.ama-assn.org/cgi/content/full/archgenpsychiatry.2011.76

***

Tuesday, December 27, 2011

What a rubbish world?

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சின்ன வயதில் ஆட்டம் போட்ட ஆறு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதி நிரம்பி இருந்தது. ஆற்றில் நீர் வரும் காலத்தில் இப்போதெல்லாம் யாரும் இறங்குவது இல்லையாம். பொங்கலுக்கு பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டுவதும், பக்கத்தில் இருக்கும் காட்டாற்றில் வண்டிகளைக் கழுவுவதும் இப்போது மறைந்து விட்டது. தெரிந்தும் தெரியாமலும், பிளாஸ்டிக் அரக்கன் பிடியில் நாமும் விழுந்து விட்டோம்.

பிள்ளைகளோடு ஃப்ளோரிடா டிஸ்னி உலகம் சென்றிருந்தபோது, பார்க்கும் ஒவ்வொருவர் கையிலும், ஒரு பெரிய கடின ப்ளாஸ்டிக் கப், அதற்கு மேல் மூடி, ஒரு ஸ்ட்ரா. இது சும்மா ஒரு பானத்துக்கு மட்டும்தான். சராசரியாக ஒரு 10 வயது பிள்ளை ஒரு நாளைக்கு 4 பானங்கள் குடித்தால், குடித்து விட்டு குப்பைகளை எறிந்தால், எவ்ளோ ப்ளாஸ்டிக் குப்பை? பணியாட்களும் அசராமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்தபடியே இருக்கின்றனர். ஒரு கணக்குப்படி, அந்த பூங்காக்களில் மட்டும் ஒரு நாளைக்கு 1,20,000 பவுண்ட்ஸ் (கிட்டத்தட்ட 56 டன்) குப்பை சேர்கிறதாம். அதில் கண்டிப்பாக ஒரு பெரும்பங்கு ப்ளாஸ்டிக் ஆக இருக்கும். இவ்வளவையும் என்ன செய்கிறார்கள்? Land Fill எனப்படும் குப்பை மேடுகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள். பள்ளமாக இருக்கும் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, மேடு படுத்துவதுதான் இது. அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் கண்ணுக்குக் குப்பை தெரியவில்லையென்பதால், அந்த நாடுகள் சுத்தமான நாடுகள் என்று ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுமே Land Fill செய்து Land Reclaim தான் செய்கிறார்கள். ஆக, குப்பைகள் அழிக்கப்படவில்லை, மறைக்கப்படுகிறது.



சமீபத்தில், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சாப்பிடும் இடத்தில் (Food Court) இருந்த ஒரு கடையில் பிள்ளைகளுக்கு பழக்கூழ் (Smoothie) வாங்கினோம். அங்கு அமர்ந்து சாப்பிடத்தான் வாங்கினோம். அதற்கு அந்தக் கடையில், ஒரு ப்ளாஸ்டிக் கடின கப், ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், கடின மூடி, ஒரு ஸ்ட்ரா எனக் கொடுத்தார்கள். நான், கடையில் இருப்பவரிடம், நாங்கள் இங்குதான் சாப்பிடப்போகிறோம், மூடி வேண்டாம் என்று கூறிவிட்டேன். அப்படியே, அவரிடம் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கும், பவுல்களுக்கும் பதில் பீங்கானில் குடுக்கலாமே. வெளியில் எடுத்துச் செல்வதானால், ப்ளாஸ்டிக்கில் கொடுங்கள் என்று கூறினேன். அவர் என்னை ஒரு விநோத பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ஒரு சிரிப்போடு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பிரபல உணவகங்களில், எடுப்புச் சாப்பாடு (Parcel) வாங்கினால் அதற்குக் கொடுக்கபடும் கடின ப்ளாஸ்டிக் கப்புகளைப் பார்த்தால் மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒரு வாழை இலை, ஒரு செய்தித்தாள், கொஞ்சம் நூலோடு முடித்து விடுவார்கள். அதேபோல் தேநீர்க் கடைகள், மதுக்கடைகள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கப்புகள். ஒரு மணி நேரத்தில் குடித்துத் தீர்க்கக்கூடிய தண்ணீருக்கு ஓராயிரம் ஆண்டுகள் அழிய எடுத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் பாட்டில். வயிற்றைக் கெடுக்கும் பூச்சிமருந்துகளுக்கு, உலகைக் கெடுக்கும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில், ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் அழிவுகளைப் பார்த்துவிட்டு, அதன் உபயோகத்தைக் குறைக்க பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நாம், இப்போதுதான் ப்ளாஸ்டிக்கை முழுவீச்சில் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆறுதலாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களில் ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்து இருக்கிறார்கள். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு கீழே இருக்கும் நாயர், காகிதக் கப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

நாகரீக வளர்ச்சி, ஆரோக்கியம் காரணமாக நம் வாழ்க்கை முறை நிறைய மாறி விட்டது. நிறைய விஷயங்களை நாம் ஒரு சமரசத்தோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால், வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்தால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வளர்க்கும் பிள்ளைகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ கொஞ்சம் அதிக நாட்கள் குறைந்த நச்சோடு வாழ்வார்கள்.

1. பார்க்கும், பொருள் வாங்கும் கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளை மறுப்பது.
2. உணவகங்களில் சென்று சாப்பிடுவது
3. தெரிந்த கடைகளில் சொல்லி ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்தைக் குறைக்கச் செய்வது
4. குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டும் போடுவது என முயற்சி செய்யலாம்.

இன்று காலை என் மகள் ரொட்டி வாங்கிக்கொண்டு வரும்போது சொன்னாள். 'இந்த ஒரு ரொட்டிக்கும் ப்ளாஸ்டிக் பை எடுத்து திணிக்கிறாங்கப்பா, நான் வேணாம்னுட்டேன்' என்று. பெருமையாக இருக்கிறது, என் பேச்சை குறைந்த பட்சம் இரண்டு பேர் (மனைவி உள்பட) கேட்டு, ப்ளாஸ்டிக்கை முடிந்தவரை மறுக்கிறார்கள் என்பதை அறியும்போது!

மாற்றம் என்பது நமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. மாறுவோம், வருங்கால நமது சந்ததியினருக்குப் பொருள் மட்டுமல்லாது, சுத்தமான காற்று மற்றும் பூமியைச் சேர்த்து வைப்போம். பிளாஸ்டிக்கை முடிந்தவரை மறுப்போம்!

***

தண்ணியடிச்சுட்டு கார் ஓட்டுறது தப்பா?

எச்சரிக்கை - நான் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆதரவானவன் இல்லை.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு நாள் சாயந்தரம் வழக்கம்போல, செந்தில் மாப்ள ஆஃபிசில் சந்திப்பு. லைட்டா கொஞ்சம் டைட்டாவலாம்னு
ஆளுக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டோம். நான் பொதுவாக பியர் சாப்பிடுவதில்லை. 8 மணிக்கு சாப்பிட்டு விட்டு, 12:30 மணி வாக்கில் பெருங்குடியில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்ல காரில் கிளம்பினேன். கொஞ்சமாக மழை. மத்திய கைலாசத்திலிருந்து வலது பக்கம் திரும்புவதற்காக பச்சை விளக்குக்குக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு மினி லாரி, பக்கத்தில் ஒரு பைக். அவர்கள் முன் சில வண்டிகள். வலது பக்க சிக்னல் கிடைத்ததும் நகர ஆரம்பித்தோம். திரும்பும் வேளையில், பச்சை பார்த்துதான் திரும்பினேன். ஒரு நொடி நேரத்தில், பச்சை அம்பைக் காணோம்! திரும்பியவுடன் அங்கிருந்த இரு காவலர்கள் எங்கள் மூவரையும் நிறுத்தச் சொன்னார்கள்.

நான் காரை ஓரம் கட்டிவிட்டு காத்திருக்க, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெயர்கொண்ட காவலர் என்னிடம் வந்தார். லைசன்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன்
கேட்டார், கொடுத்தேன். சிவப்பு சிக்னல்ல திரும்புனது தப்புன்னு சொன்னார். நான், திரும்பும்போது பச்சைதான் இருந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில்,
எந்த அறிகுறியும் (ப்ளிங்க்) இல்லாம சிவப்பு மாறுனா நான் என்ன சார் செய்யட்டும்னு கேட்டேன். அவர் அதெல்லாம் முடியாது, நாளைக்கு கோர்ட்டில் வந்து ஃபைன் கட்டுங்கன்னு சொன்னவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 'நீங்க குடிச்சுருக்கீங்களா சார்'ன்னு கேட்டார். நானும், திடீர்
அரிச்சந்திரன் அவதாரம் எடுத்து, ஆமா, எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன்ன்னு சொன்னேன். அவர், சரி இன்னிக்கு வசமா சிக்கிட்டான் ஒருத்தன்னு நெனச்சுகிட்டு, சார் கொஞ்சம் இறங்கி வாங்க, இன்ஸ்பெக்டர்கிட்ட பேசணும்னு சொன்னார். நானும் இறங்கி இன்ஸ்பெக்டரிடம் போனேன்.

புகழ்பெற்ற குதிரையின் ஓனரான மாவீரன் பெயர் கொண்ட அவர், சார் குடிச்சுட்டு கார் ஓட்டக்கூடாது. நீங்க ஓட்டிகிட்டு வந்துருக்கீங்க. என்ன
செய்யலாம்னு கேட்டார். நான், அய்யா நான் எட்டு மணிக்குதான் பியர் சாப்பிட்டேன், அது அப்போவே பாத்ரூமுக்குப் போயிடுச்சு. காவலர் கேட்டாரு, நான் ஆமான்னு சொன்னேன்னு அவர்கிட்டே சொன்னேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்னு சொன்னேன். அவர் விடுவதாயில்லை. பைக் தம்பியையும், மினி லாரி தம்பியையும், சரிப்பா இப்ப என்ன சொல்றீங்க, 2000 ரூப தண்டம் கட்டவேண்டி வரும் பரவாயில்லையான்னு கேட்டார்.
அவங்க ரெண்டு பேரும் கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க.

என்னை தனியே கூப்பிட்ட பாகிஸ்தான் அதிபர், சார் பாத்தா(?) படிச்சவர் மாதிரி இருக்கீங்க. எதுனா பாத்து செய்ங்க. நீங்க பிரச்சினை இல்லாம
போயிடலாம்னு பேரத்தை ஆரம்பிச்சார். நான் அப்போதான் அமெரிக்க ரிட்டர்ன்ங்குறதால, லஞ்சம் குடுக்கக்கூடாது எனும் என் கொள்கையை உடும்பா புடிச்சுகிட்டு, சார் நான் லஞ்சமெல்லாம் குடுக்கமாட்டேன்னு சொன்னேன். உடனே அவர் மாவீரன்கிட்டே போய் ஏதோ சொன்னார். அவர், மத்த ரெண்டு பேரையும் பாத்து, சரி நீங்க சரிவர மாட்டீங்கன்னு சொல்லிட்டு, கேஸ் குறிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு, என்ன கோபம்ன்னா, நான் திரும்பும்போது பச்சை இருந்தது. ஒரு செகண்ட்குள்ளே, அது காணாமப் போச்சு. ரெண்டு செகண்ட்குள்ளே எப்படி அந்த சந்திப்பில் வண்டியத் திருப்புறது. அதனாலே, நான் திரும்பும்போது பச்சைதான் இருந்தது, சிக்னலில் கோளாறுன்னு வாதம் பண்ண ஆரம்பிச்சேன். அவங்க அதெல்லாம் காதுலயே போட்டுக்கல.

நானும், சரி இவங்ககிட்டே பேசி பிரயோசனம் இல்லன்னுட்டு, மாவீரன் கிட்டே, சட்டப்படி என்ன பண்ணனுமோ அதப் பண்ணிடுங்க, லஞ்சம்
குடுக்கமாட்டேன்னு சொன்னேன். அவரும் (கிண்டலா) சரி அப்படியே பண்ணிடுவோம்னு சொல்லி அதிபரையும் எங்க மூனு பேரையும் ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். நானும், சரி என்னதான் ப்ரோசிஜர்ன்னு பாத்துடலாம்னு ஆர்வத்தில் கெளம்பிட்டேன். இவ்வளவுக்கும், ஒரு 500 ரூபாய் (அதான் அவங்க கேட்டது) இல்லேன்னா, அப்போ இருந்த ஒரு சக்தி வாய்ந்த அமைச்சர், அல்லது முதலமைச்சர் செல்லில் இருந்த ஒரு காவல் அதிகாரி இவங்க யாராவது ஒருத்தர் பேரச் சொல்லிட்டு போயிருக்க முடியும். ஆனால், எனக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தவிரவும், நம்மூர் சட்டங்கள் எப்படி இருக்கின்றனன்னு நேரடியா பார்க்க ஒரு வாய்ப்பை விட மனசில்லை. குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை, அதனால் இன்னும் தைரியம்!!

ஒரு ஷேர் ஆட்டோவில் எங்களை ஏத்திகிட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போனார் அதிபர். வரும் வழியெங்கும், மத்த ரெடு பேரும் கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போயிட்டாங்க. அங்கு போனதும், பணியில் இருந்த சின்னக்குயில் பேர் கொண்ட (பயிற்சி) டாக்டரிடம் அழைத்துப்போனார். அந்தம்மாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

சின்னக்குயில் - உங்க பேரு
நான் - ராஜா
சி.கு - அப்பா பேரு
நான் - சொன்னேன்
சி.கு - அட்ரஸ்
நான் - சொன்னேன்
சி.கு - குடிச்சிருக்கீங்களா
நான் - எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன் (அப்போ மணி 1:30am)

அதுக்கு அப்புறம் ஒரு சீட்டில் ஏதோ எழுதியது சி.கு. சரி நீங்க போகலாம்னு சொன்னிச்சு. எனக்கு ஒன்னும் புரியல. அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, நீங்க driving under the influence of alcohol க்கு மருத்துவர் சான்று குடுத்திருக்கேன்னாங்க. எனக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எத வச்சு கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டேன். நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்ன்னு சொன்னாங்க. 8 மணிக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டுட்டு 12:30 மணிக்கு காரை மறைக்கும்போது என் ரத்தத்துல எவ்வளவு பர்சென்ட் ஆல்கஹால்
இருக்கும்னு கேட்டேன். எனக்கு என்ன டெஸ்ட் எடுத்து கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டா, சி.கு நாங்க டெஸ்டெல்லாம் எடுக்குறது இல்ல, உங்க கண்ணு
சிவப்பா இருக்கு, தவிர நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்னு சொன்னுச்சு. நான் சரி, இப்போ நான் குடிக்கலன்னு சொல்றேன், அதையும் நம்புவீங்களான்னு கேட்டேன். அதுக்கு சி.கு சார் அதெல்லாம் எனக்குத் தெரியாது, போலிஸ்காரங்க கூட்டிட்டு வருவாங்க, நாங்க டாக்டர் செர்டிஃபிகேட் குடுப்போம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்னு சொல்லிச்சு. எனக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியல. சரி தொலைங்கன்னுட்டு வெளில வந்துட்டேன். மறுபடியும் மாவீரன்கிட்டே அழைத்து வரப்பட்டோம். சார், சட்டப்படி நான் என்ன செய்யனுமோ செஞ்சுட்டேன். படிச்சவரா இருக்கீங்க, சட்டப்படி நான் கார் குடுக்கக்கூடாது, நீங்க எடுத்துகிட்டுப் போங்க 2200 ரூபாய் தண்டம் கட்ட வேண்டி வரும்.குடுத்துட்டுப் போங்க, உங்க லைசென்சையும் குடுத்துட்டு நாளைக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன்ல வந்து லைசன்ஸ வாங்கிகோங்கன்னு சொன்னார்.

இதுக்கு இடையில், அங்கு வந்த என் மச்சான் (அவன் தாய்மாமன்தான் போலிஸ் அதிகாரி), அங்கிள், ஒரு போன் மாமாவுக்கு போட்டிருக்கலாம்ல,
இல்லன்னா 500 ரூபா வீசி எறிஞ்சு இருக்கலாமே, ஏன் இப்படி இந்த மழையில அலையிறீங்கன்னு கேட்டான். நான் சும்மாதான், நம்ம சிஸ்டமும்
சட்டமும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கதான்னு சொல்லிட்டு காரை எடுத்துகிட்டு வீடு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள், செந்தில் மாப்ளைய கூட்டிகிட்டு ஸ்டேஷன் போனேன். அவன் போகும் வரை ஒரே திட்டு. எனக்கு போன் பண்ணியிருக்கலாம்ல.
இந்தியாவுக்கு வந்துட்டா இந்தியன் மாதிரி இருக்கக் கத்துக்கோடான்னு ஒரே அட்வைஸ்! மாவீரன், எங்களுக்கு முதுகைக் காட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார். திரும்பி என்னைப் பார்த்து டக்குன்னு என்ன நெனைச்சாரோ ஒரு சல்யூட் வச்சார், எனக்கு ஒரே சிரிப்பு. சரி வாங்க சார்ன்னு மேலே ரூமுக்கு கூட்டிகிட்டுப் போனார். உக்காரச் சொல்லிவிட்டு, செந்திலிடம் பேச ஆரம்பித்தார். செந்தில், சார் இவன் நெனச்சுருந்தா, நேத்தே ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு போயிருக்க முடியும். கொஞ்சம் நேர்மையான ஆளுன்னு என்னைப் பத்தி சொல்ல ஆரம்பித்தான். உடனே அவர், அடடா சார் நேத்தே என்கிட்ட சொல்லியிருக்கலாமே, ஏன் சார் இப்படிப் பன்னிட்டீங்க, சாரி சார்ன்னு ஆரம்பிச்சுட்டார். நான் பரவாயில்ல, சும்மா சட்டம் தெரிஞ்சுக்கதான் அப்படிப் பண்ணேன்னு சொன்னேன். அவருக்கு அப்ப ஒரு போன் வந்தது.

கொஞ்சம் நேரம் பேசிட்டு, ஸ்பீக்கரில் போட்டுவிட்டார். மறுமுனையில் பேசியது அவருக்கு மூத்த அதிகாரி, என்னய்யா எத்தன Drunken Driving கேசு
புடிச்சீங்க, 30 டார்கெட் வச்சுருக்கானுங்க. முடியுமில்லன்னு கேட்டார்.
பேசி முடிச்சதும் மாவீரன், பாருங்க சார் மேலேயிருந்து எங்க உயிர எடுக்குறாங்க. நாங்க யாரையும் புடிக்கிறது இல்ல. கணக்கு காட்ட சில சமயம்
கடுமையா நடந்துக்கவேண்டியிருக்கு. ஒரு ரகசியம் சொல்லவா, நாங்க பெரும்பாலும் புடிக்கிறது சென்னை பதிவு எண் கொண்ட வண்டிகளை
அல்லன்னு சொன்னார்!! (என்னோட கார் நம்பர் TN 48). சார் தப்பா நெனச்சுக்கதீங்க, கேஸ் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். அதனாலே கேன்சல்
பண்ணமுடியாது. ஃபைனை நானே கட்டிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்னு சொன்னார். அடக்கொடுமையேன்னுட்டு, நாங்களும் கெளம்பி
வந்துட்டோம்!

அமெரிக்காவில் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் தண்டனை கடுமையாக இருக்கும். ஆனால், ஒரு ட்ரைவரை அந்தக் கேசுக்காக பிடிக்கும் முன்
ஏகப்பட்ட நடைமுறைகள். முதலில், வேறு ஏதாவது காரணுத்துக்காக வண்டி மறிக்கப்பட்டிருக்கவேண்டும். உதாரணத்துக்கு, காரை தாறுமாறாக
ஓட்டுதல், அதிக வேகத்தில் போதல், இந்த மாதிரி. காரை விட்டு கீழிறக்கி (இதுக்கு மட்டும்தான் கீழே இறங்கவேண்டும், மத்த சமயங்களில் ட்ரைவர்
சீட்டிலேயே இருக்கவேண்டும், கீழே இறங்கினால், அதிகாரியைத் தாக்கத்தான் வருகிறோம்ன்னு ஒரு தவறான புரிதல் அதிகாரிக்கு வந்திடும்)
ட்ரைவரிடம் Breathalyzer சோதனை செய்யப்பட்டு, அவர் ரத்தத்தில் 0.8% க்கு அதிகமாக ஆல்கஹால் இருந்தால் மட்டுமே (இது மாநிலத்துக்கு
மாநிலம் மாறும்) அவரை புக் செய்யவேண்டும். அதுக்கு அப்புறம் அவரை வண்டியோட்ட அனுமதிக்கக்கூடாது. உடனே அருகில் இருக்கும்
மருத்துவமனையில் ஆல்கஹால் அளவு ரத்த சோதனை செய்து உறுதி செய்யப்படவேண்டும். இவை எல்லாம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டால்தான் தண்டனை கிடைக்கும். அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடிப்பவர்கள். வேலை முடிந்தவுடன் நிறைய தடவைகள் நேரே பார் போயிருக்கிறோம். பெரும்பாலும் பியர் அல்லது ரெட் வைன் சாப்பிட்டுவிட்டு நன்றாக சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, நிறைய பேசிவிட்டு நிதானமாகத்தான் வீடு திரும்புவோம். இது வரை நான் ஸ்பீடிங் தவிர வேறு எதற்காகவும் தண்டிக்கப்பட்டதில்லை!

நம்மூரில், முதலில் சிக்னல்கள் ஒரு ஒழுங்கில் அமைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு சந்திப்புக்கும் ஒரு மாதிரி சிக்னல்கள். அதுவும் இடது, வலது
புறம் திரும்புவதற்கு சில ப்ளிங்க் ஆகி நிற்கும், சில இடங்களில் எப்போது போகும் என்பது தெரியாது. அதே மாதிரி, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு
என்பது கட்டாயமாக பரிசோதிக்கப்படவேண்டும். சும்மா, சென்னை தவிர்த்த ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்களைப் பிடித்தோ, சிபாரிசுக்கு ஆளில்லாதவர்களைப் பிடித்தோ வெறும் கணக்கு காட்டக் கூடாது. சிக்னலை மீறுபவர்கள், (இரவில்) தாறுமாறாக வண்டி ஓட்டுவோர் மட்டும் பிடிக்கப்பட்டு ரத்தசோதனையோ அல்லது மூச்சு சோதனையோ செய்யவேண்டும். இதெல்லாம் இல்லாமல், இருக்கும் சிஸ்டத்தை தொடர்ந்து ஃபாலோ செய்தால், சட்டத்தை மதித்து நடக்க விரும்பும் என்னைப் போல் பலரும், 500 ரூபாயையோ அல்லது சிபாரிசுக்கு நம்பரையோ தயாராக வைத்துக்கொண்டுதான் இனி ரோட்டில் செல்லவேண்டும்!

***

Thursday, December 22, 2011

தூசி தட்டியாச்சு!

கடந்த ஒரு வருஷமா ஒன்னும் எழுதல (ம்க்கும்...அதுக்கு முன்னே, எழுதி கிழிச்ச மாதிரி). கடுமையான வேலை பளு, உக்காந்து எழுத நேரமில்லாதது (இப்படித்தான் சொல்லணுமாம்!), கிடைத்த நேரத்தில் சோம்பல், அதீத வெளியூர் பயணங்கள்னு ஒரு வருசம் ஓடிப்போச்சு!

நிறைய நண்பர்கள், 'நீ என்னதான் செய்றேப்பான்னு' கேக்குறாங்க. IT ல உள்ள சில நண்பர்களுக்கும் நான் இருக்குற Data Warehouse & Business Intelligence துறை கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. இது ஒரு புக முடியாத துறைன்னு சில பேர் நினைக்கிறாங்க. அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமா, துறை சார்ந்த வலைப்பூ ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதில், Data Warehouse & Business Intelligence பத்தின உபயோகமுள்ள (அத நீங்கதான் சொல்லணும்!!) பதிவுகள் எனக்குத் தெரிந்த எளிய ஆங்கிலத்தில் வரும்.

இந்தத் துறையில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை தெரிவிக்கவும் இந்த வலைப்பூ பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

நண்பர்கள் இதைப்பற்றி ஆலோசனை எதுவும் இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள், நன்றி!

எனது துறை சார்ந்த வலைப்பூ ...... விரைவில்......!

Friday, October 29, 2010

கள் வேண்டுவோர் கழகம்

80களில் தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி அளித்திருந்த காலம். என் அப்பாவும் இன்னொரு உறவினரும் சேர்ந்து கள்ளுக்கடை வைத்திருந்தார்கள். அப்போது டாஸ்மாக் இல்லாத காலம், நகரங்களில் மட்டுமே 'சாராயக் கடை'கள் இருந்த காலம். உள்ளூர் குடிமக்களின் நலன் கருதி இந்தக் கடை திறக்கப்பட்டது!

கள் இறக்கவென்று 'தெக்கேருந்து' (தென் தமிழ்நாட்டிலிருந்து) கலியமூர்த்தி என்ற 'நாடாவி' (மரமேறுபவர்) வரவழைக்கப்பட்டு, எங்கள் இடத்தில் ஒரு குடிசை வீடும் அமைக்கப்பட்டு, தினமும் கள் விற்பனை ஜோராக நடந்தது. எங்கள் வீட்டில் இருந்த சில தென்னை மரங்களில் இருந்து 'தனிக்கள்' இறக்கி வீட்டுக்குப் போகும். சில மரங்களில் இருந்து 'பயனி' (பதநீர்) எடுக்கப்பட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பரிமாறப்படும்.

எனக்கு முதன் முதலில் கள் குடிக்கக் கற்றுக்கொடுத்தது என் அப்பாதான் (நல்ல அப்பாடான்னு முனுமுனுக்காதீங்க!). அரை லிட்டர் காணும்படி ஒரு சொம்பில் ஊற்றிக் கொடுப்பார். 'ஒடம்புக்கு நல்லதுடா. கண்ண மூடிகிட்டு இழுத்தெறி'ன்னு சொல்லுவார். ஒருமாதிரியான இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவை அது. கொஞ்ச நேரத்துக்கு சுள்ளென்று இருக்கும், அப்புறம் சரியாகிடும். தென்னை மரக்கள், பனைமரக்கள்ளை விட கொஞ்சம் இனிப்பு அதிகம். மயக்கம் குறைவு!



நாடாவி, மரங்களைத் தேர்வு பண்ணி 'பாளை' சீவி விட்டுக் கட்டி விடுவார். சில நாட்கள் கழித்துதான் பாளை நுனி சீவி அதில் பானையைக் கட்டுவார். அடுத்த நாள் ஒரு சுரை குடுவையுடன் மேலேறி, ஒவ்வொரு பானையிலும் வடிந்திருக்கும் கள்ளை குடுவையில் சேகரித்துக்கொண்டு இறங்குவார். குடுவையில் பார்த்தால், ஊர்பட்ட பூச்சிகள் இறந்துகிடக்கும் (ஒரு வேளை போதைக்கு இதுதான் காரணமோ?) . பூச்சி, தும்பட்டைகள் வடிகட்டப்பட்டு இன்னொரு பெரிய பானையில் கள் சேகரிக்கப்படும். இப்படியே ஒரு 40-50 மரங்கள் ஏறி கள் இறக்குவார். நமக்கு ஒரு மாமரம் கூட ஒழுங்கா ஏறத் தெரியாது!!! பானையின் உள்புறத்தில் சுண்ணாம்பு தடவினால் அதில் கிடைப்பது பதநீர். அவ்வளவு சுவையாக இருக்கும். நோ மயக்கம்... :)



கடையில் ஒரு பெரிய பானை இருக்கும். அதில் சேகரம் செய்யப்பட்ட கள் ஊற்றப்படும். நமக்கு கடைக்கு செல்ல அனுமதியில்லை!! கடை பக்கத்தில் ஒரு 'சாக்கனா கடை' இருக்கும். சுண்டல், ஊறுகாய், மாங்காய் வத்தல், முறுக்கு போன்ற சைடுகளுடன், அவித்த முட்டையும் ஆம்லெட்டும் கிடைக்கும். ரொம்ப நாளாக, போதைக்காக பானைக்கு கீழே ஊமத்தங்காய்களையும், பானைக்குள் பழங்கஞ்சியும் சேர்ப்பதாக ஒரு வதந்தியும் உலவியது. உண்மை தெரியவில்லை. அங்கு போய் நமக்கு சாப்பிடவும் அனுமதியில்லை.

கள்ளுகடை வைப்பதற்கு முன்பே என் அப்பா மன்னார்குடி பகுதி 'கள் வேண்டுவோர் கழகத்தில்' இருந்தார். கள் விற்க அனுமதி தர அரசை தொடர்ந்து வற்புறுத்துவதுதான் இதன் நோக்கம். இந்தக் கழகத்தின் வழி அப்பா மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். மன்னை நாராயணசாமி அவர்கள் வென்று அமைச்சரான தேர்தல் அது. வெளியூரில் ரொம்பப் பிரபலம் ஆகாததாலும், உள்ளூரில் அடிதடியான 'போக்கிலி' (போக்கிரி) என்று பெயர் எடுத்திருந்ததாலும், அப்பாவால் 5000 க்குமேல் ஓட்டு வாங்க முடியவில்லையாம் :)

இப்போது கள்ளுக்கு மீண்டும் வருவோம்!! கள் குடித்தால் கேடு என்று சொல்லித்தான் அரசாங்கம் 'மேல்நாட்டு' வகை சரக்குகளை விற்கிறது. இந்த மேல்நாட்டு மதுவகைகளின் லட்சணம் நிறைய நண்பர்களுக்கும் தெரியும். என்னத்ததான் போட்டு செய்றாய்ங்களோன்னு நிறைய பேர் புலம்புவதையும், ஒரு குவாட்டர்தான் சாப்பிட்டேன் ஒரே தூக்கா தூக்கிடுச்சு போன்ற அலறல்களையும் கேட்டுகிட்டுதான் இருக்கோம். ஆனால், கள்ளில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவது இல்லை. முழுக்க முழுக்க இயற்கை அளிக்கும் ஒரு பானம்தான் இது. எனக்குத் தெரிந்து எந்த உடல் உபாதையும் இதனால் வந்தது இல்லை.

இந்தப் பதிவு, கள் குடிப்பதற்கு மட்டும் ஆதரவானது இல்லை. பனைமரத்தை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதியும்தான். பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களின் பயன்கள் எண்ணிலடங்காதவை. சில பயன்கள்:

- ஓலை (வீட்டுக் கூரை வேய, விசிறி, பெட்டிகள் செய்ய)
- பனை மரம் (வீடு கட்ட உதவும்)
- பனைமட்டைக் கழி (நார் உறிக்க)
- பனங்காய் (நுங்கு)
- பனங்கிழங்கு (உணவுப்பொருள்)
- கள் (சிறந்த இயற்கை பானம்)
- பதநீர் (சுவை மிகுந்த இயற்கை பானம்)
- பதநீரிலிருந்து பனைவெல்லம் (சிறந்த இயற்கை இனிப்பு)
- பனங்கல்கண்டு (இருமலுக்கு நல்லது. சிறந்த இயற்கை இனிப்பு)
- கருப்பட்டி (இரும்புச்சத்து மிகுந்த இயற்கை இனிப்பு)

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் திருச்செந்தூர் போகும் வழியில், காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினரைக் கொஞ்ச நேரம் காக்கவைத்து விட்டு, 3 லிட்டர் பதநீர் குடித்துவிட்டுதான் போனேன்!! வரும்போது நிறைய்ய்ய்ய்ய்ய பனங்கல்கண்டு வாங்கி வந்தோம். பால், டீயில் போட்டுக் குடித்தால் அமிர்தமாக இருக்கும்!!

இப்படி ஏகப்பட்ட பயன்தரும் பனைபொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்ய அரசு உதவலாம். பதநீரையும், பனம்பழக் கூழையும் பதப்படுத்தி இனிப்புகள் செய்ய பயன்படுத்தலாம். கண்ணில் தெரியா பொருட்கள் கொண்ட 'ஈக்குவல்' இனிப்பான் பயன்படுத்துவதைவிட, பனங்கல்கண்டைப் பயன்படுத்தச் சொல்லலாம். எல்லாவற்றையும் விட, கள்ளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி, அதை விற்பவர் மட்டுமல்ல, குடிப்பவர் வயிற்றையும் பாதுகாக்கலாம்.

கள் வேண்டுவோர் கழகத்தில் சேந்துகுறீங்களா?? :)

Friday, October 15, 2010

விற்பனைக்கு: மரபணு மாற்றம் செய்யப்பட்ட 'உணவுப்பொருட்கள்'

ஆராய்ச்சியில் உள்ள, மரபணு மாற்றம் செய்யப்பட்ட டிசைனர் உணவுப்பொருட்கள் விற்பனைக்கு:

1. பீன் ஆரஞ்சு






2. பீஃப் ஆப்பிள்





3. பியர் காய்க்கும் மரம்





4. பெல்ஜியன் கிரீன் ஆப்பிள்





5. கார்னானா!





6. எக் பிளாண்ட்





7. லவ் தக்காளி





8. மெலங்ரேப்ஸ்





9. பன்றிபில்லர் (புதிய சைனீஸ் உணவுக்கு!)





10. பன்றேவல் (அசைவ பிரியர்களுக்கு- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்)

 11. ஸ்ட்ராப்பிள்



இவைகள் கடைகளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை. நாம் வாங்காமலும் இருக்கப் போவதில்லை. Please avoid buying Genetically Modified Food and save our future generation!


படங்கள் நன்றி - www.freakingnews.com

Friday, October 8, 2010

அவந்தியாகிட்ட உஷாரா இருங்க!

டிஸ்கி: இது ஏதோ புனைவோ, பதிவர் சம்பந்தப்பட்ட பதிவோ இல்லை! ஒரு விழிப்புணர்வு முயற்சி மட்டுமே. கதையில் வரும் நபர்களோ சம்பவங்...... சரி சரி விஷயத்துக்குப் போவோம்!


புதுசு புதுசா நோய்கள், அதுக்குப் புதுசு புதுசா மருந்துகள், அப்புறம் புதுசு புதுசா மருந்துகளுக்குத் தடைகள். இப்போ சமீப தடை - அவன்டியா (Avandia) என்ற சர்க்கரை வியாதிக்கான மருந்துக்கு! இதில் ஆச்சரியம் என்னன்னா, அமெரிக்காவுல இதை தடை பண்றதுக்கு பெரிய விவாதமே நடந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்தியாவில் இந்த மருந்துக்குத் தடை. இதயம் சம்பந்தப்பட்ட சைட் எஃபெக்ட் வியாதிகள் வருவதால் இந்த மருந்து ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

வழக்கமா புருண்டி, சியர்ரா லியோன் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட பிறகுதான் நம்ம நாட்டுல தடை போடுவாங்க. அவ்வளவு வேகம்!! ஆனா, இந்த முறை உண்மையிலேயே வேகமா செயல்பட்டு(!) தடை பண்ணியிருக்காங்க. பாராட்டப் படவேண்டிய விசயம்தான்.

உண்மை நிலவரம் என்னன்னா, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள், உணவுப்பொருட்கள் நம் நாட்டில் தாராளமா புழக்கத்தில் இருக்கு. நம்மிடையே உள்ள அறியாமை, வெளிநாட்டில் இருந்து வந்தாலே அது தரமா, பாதுகாப்பா இருக்குங்குற மோகம்தான் இதுக்குக் காரணம்.

சர்க்கரை நோயின் தாயகம் என்கிற அசைக்கமுடியா இடத்தில் இருக்கும் நம் நாட்டுக்கு, இந்த மாதிரி தடைகள் அவசியம். உங்க உறவினர், நண்பர்கள் யாராவது 'அவந்தியா'கிட்டே சிநேகமா இருந்தா, உடனே அதை கட் பண்ண சொல்லுங்க.

வாணலியில் இருந்து அடுப்பிற்குள் பாயவேண்டாமே...

மேலதிக தகவல்களுக்கு:

நன்றி: www.pharmainfo.net, டைம்ஸ் ஆஃப் இந்தியா
டிஸ்கி1: இந்த இணையங்களில் இருக்கும் தகவல்களுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது.  

Monday, October 4, 2010

இந்தப் பயங்கரம் இந்தியாவிலும் நடக்கும்!

செய்தி: 1940 களில் அமெரிக்க மருத்துவர் குழு - மருத்துவ பரிசோதனைங்குற பேர்ல க்வாதமாலா (லத்தின் அமெரிக்க நாடு) நாட்டுல லட்சக்கணக்கான பேருக்கு பால்வினை நோய் பரப்பும் கிருமிகளை செலுத்தி சோதனை பண்ணியிருக்காங்க.

இந்தப் பயங்கரச் செய்தி எப்படியோ வெளில வந்ததும், தானைத்தலைவி ஹிலாரியும், கறுப்புத்தலைவன் ஒபாமாவும் ஒரு போன் போட்டு அந்த நாட்டுத் தலைவரிடம், 'சாரிங்க தெரியாம(?)  இந்தத் தவறு நடந்து போச்சு. 40களில் நடந்ததாலே, இதை அப்படியே விட்டுடுவோம். என்னதான் இருந்தாலும் இந்தமாதிரி அயோக்கியத்தனம் செய்றதல்லாம், எங்களுக்குப் பழக்கமில்ல' ன்னு சொல்லியிருக்காங்க.

விசயம் வெளில வந்ததுனாலே சாரி கேட்டாங்க. இல்லன்னா???

இதே மாதிரி பல சோதனைகள் நம்ம இந்திய 'எலிகள்'மீது இன்னும் நடந்துகிட்டுதான் இருக்கு. என்ன ஒண்ணு, இப்போதைய சோதனைகள் எல்லாம் ஓப்பனாவே வருது.

பி.டி பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய்ன்னு ஒவ்வொன்னா வருது. சோளக்களி சாப்பிடறது நமக்கு அருவருப்பா இருக்கு. அதே சோளத்த செக்சியா பாக் பண்ணி, கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னு குடுத்தா பல்ல இளிச்சிட்டு சாப்பிடுறோம்.

நம்மள்ல எத்தன பேரு கேழ்வரகு கூழ் குடிக்கிறோம்? நம்ம மேட்டுகுடி மக்களுக்கு, ஏன் பெரும்பாலான மக்களுக்கு அது ஜெயில்லயும், நாகாத்தம்மன் திருவிழாலயும் மட்டும் கிடைக்கிற பொருளா தெரியிது. ஆனா, நெஞ்சுக்கொழுப்பு குறைய 'ஓட்ஸ்' குடிக்கிறோம்.

அமெரிக்காகாரன் எலியத் தேடி ஓடவேண்டியதில்ல. நாமளே போய் பெருமையா எலிவரிசையில போய் நிக்கிறோம்.

தக்காளி, வெண்டை, வெள்ளரி, கத்தரிக்காய், வெங்காயம் (பெருசு) இதுலல்லாம் என்ன சுவை இருக்கு இப்போ? பாக்க நல்லா பளபளன்னு இருக்கு. கோழி கூட கொழு கொழுன்னு இருக்கு, ஆனா நாட்டுக் கோழியின் சுவை இருக்கா? முன்னே இருந்த பாலின் சுவை இப்போ இருக்கா? முட்டை, நீர் (நிலத்தடி நீர் கெட்டுப்போயி வருஷமாச்சு, கெமிக்கல்களால்).......?????

இன்னும் சில வருடங்கள் கழிச்சு, இதே அமெரிக்காவுலருந்து நமது இந்திய பிரதமருக்கு இதே மாதிரி ஒரு போன்கால் வரும். அமெரிக்க அதிபர் 'சாரிங்க. இது 2007 ல நடந்ததாலே, எங்களால ஒன்னும் பண்ண முடியல. பெயர் தெரியா, குணப்படுத்த முடியா நிறைய கிருமிகள எங்க மன்சான்டோவும், மத்த கம்பெனிகளும் உங்க நாட்டுப் பயிர்களில் கோத்து வுட்டுட்டாங்க. பரவால்ல. அத அழிக்க 'சூப்பர் அழிப்பான் 2050' அதே கம்பெனிதான் தயாரிச்சு இருக்கு. நைசா அதையும் அனுமதிச்சுடுங்க'ன்னு சொல்லத்தான் போறார். நம்ம பிரதமரும் (யாரு அப்போ இருப்பா? ராகுலோட பேரன் ரோஷன் வாந்திதான்), இளிச்சுகிட்டே தலையாட்டத்தான் போறாரு.

இப்போதைக்கு, இலவச மருந்து, புயல் நிவாரணம், இலவச மருத்துவ முகாம், உங்க மருத்துவர், 'இந்த மருந்து இப்பத்தான் அமெரிக்காவுலருந்து வந்துருக்கு. ஒரு வாரம் ட்ரை பண்ணலாம்' -- இதுலல்லாம் கொஞ்சம் உசாரா இருங்க!!!

விரிவான செய்திக்கு:
http://timesofindia.indiatimes.com/world/us/Barack-Obama-apologizes-to-Guatemala-for-US-sex-disease-study/articleshow/6670605.cms

Monday, April 7, 2008

இவரல்லவோ வாத்தியார்?

அஞ்சும் அஞ்சும் எத்தனைன்னு கண்டுபுடிக்க கால்குலேட்டரத் தேடும் இந்தக் காலத்துல, மனக்கணக்கு மூலமே மாணவர்களை, குறிப்பா கிராமத்து மாணவர்களைச் சிக்கலான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்கச் செய்து அசத்தி வருகிறார் ஒரு ஆசிரியர்!

அந்த ஆசிரியர் பெயர் : திரு.எம்.காளிமுத்தன். இராமனாதபுரம் அரசினர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 2006 ம் ஆண்டுக்கான 'டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது' பெற்றவர்! கிராமத்து மாணவர்கள் தங்கள் ஞாபக சக்தியைப்் பயன்படுத்தி கணக்கிலும், ஆங்கிலத்திலும் வெற்றியடைய உதவி செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அவர்களின் புதைந்து கிடக்கும் சக்தியை வெளிக்கொணருவது இவரின் ஆசை. அதே சமயம், அவரின் இந்த பயிற்றுவிக்கும் முறைக்கு காப்புரிமை (patent) பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்!

திரு.காளிமுத்தன் அவர்களின் முயற்சி வெற்றி பெறவும், அவரின் தொண்டு தொடரவும் நம் வாழ்த்துக்கள்!

அவரையும் அவருடைய அசத்தும் மாணவர்களையும் நீங்கள் youtube-ல் சந்திக்கலாம்!

நன்றி: அருனா சேதுபதி அக்கா, ரவி வெங்கடேஷ் மற்றும் aimsindia.net

Thursday, March 13, 2008

லஞ்சம் இல்லாம காரியம் சாதிக்கனுமா? இவரைப் போய் பாருங்க!

இவர் பேரு Mr. RTI. இவருக்கு வயசு 3 தான். ஆனா பவர் ரொம்ப அதிகம்! இவர் எப்பிடி உங்களுக்கு உதவி பண்ணுவாரு?

உதாரணத்துக்கு, நீங்க உங்க புது வீட்டுக்கு மின்சார இணைப்பு வாங்கனும். பொறுப்பான குடிமகனா, விண்ணப்பம் எல்லாம் நிரப்பி, வட்டார மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிச்சிட்டீங்க. சாதாரணமா, 10 நாள் எடுக்கவேண்டிய இந்த சேவை 20 நாளாச்சு, 40 நாளாச்சு ஒண்ணுத்தையும் காணோம். போன் பண்ணி பாக்கிறீங்க, நேரா போயி பாக்கிறீங்க ம்ம்ம்ஹூம்ம் ஒண்ணும் ஆகலே. வெறுத்துப் போய் இருக்குற நேரத்துல, பக்கத்து தெரு பரமசிவம் வறாரு.

'என்னங்க, இதுக்குப் போய் வருத்தப் படுறீங்களே. ஜேயீயை பாத்து ஒரு ஆயிரம் ரூவா குடுத்தா டாண்ன்னு வரும் கரண்டு' ன்னு சொல்றாரு. நீங்க இந்த சமயத்துல தாராளமா நம்ம RTI யை அணுகலாம்!

நீங்க செய்யவேண்டியது எல்லாம், நேரா வட்டார மின்வாரிய அலுவலகத்துக்கு போங்க. அங்கே போய், 'Public Information Officer - PIO' ஐப் பாக்கனும்னு சொல்லுங்க. அவர்கிட்டே போய், ஒரு பத்து ரூவா கட்டுனா ஒரு படிவம் குடுப்பாரு. அத வாங்கி, உங்க முகவரி, நீங்க விண்ணப்பம் அனுப்புன நாள், அதற்கான கட்டணம் கட்டப்பட்ட ரசீது (நகல்) எல்லாம் சேத்து, சுருக்கமா, தெளிவா உங்கப் பிரச்சினையைப் பத்தி எழுதுங்க. 40 நாள் ஆச்சு, என் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்குன்னு கேள்வி கேட்டு படிவத்த முடிச்சு அத அவருகிட்டே குடுத்துட்டு வாங்க. வேற யாருக்கும் எதுவும் குடுக்கவேண்டாம்.

நேரா போக முடியலேன்னா பரவாயில்ல. ஒரு வெள்ளைத்தாளில் மேற்கண்டவற்றை எழுதி, 10 ரூபாய்க்கு போஸ்டல் ஆர்டரோ இல்ல டிமாண்ட் டிராப்டோ எடுத்து (Payable to PIO - Department Name) சாதாரண தபால் அல்லது பதிவுத் தபாலில் கூட அனுப்பலாம். சில தபால் நிலையங்களுக்கு போயி கூட படிவத்தைக் குடுக்கலாம். அவங்க, பணத்த வாங்கிகிட்டு படிவத்த ஏத்துகிட்டதுக்க்கான ஒரு ரசீது குடுப்பாங்க. எந்தெந்த தபால் நிலையங்களில் இதச் செய்யலாம்? இங்கே போய் பாருங்க.

உங்க படிவம் ஏத்துக்கலைன்னா? கவலையே வேண்டாம். அதுக்கும் நம்ம RTI ஒரு வழி பண்ணியிருக்காரு. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தல இருக்கும். இந்தத் தலைங்களுக்கு, இந்த மாதிரி படிவத்த ஏத்துக்காத PIO - க்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் போட அதிகாரமிருக்கு. எண்ணி 30 நாட்கள்ல (35 நாட்கள் நீங்க Assistant PIO கிட்டே படிவத்த குடுத்துருந்தா. உயிர் போற அவசரம்னா, 48 மணி நேரத்துல உங்களுக்கு தகவல் குடுத்தாகனும்்!) உங்களுக்கு தகவல் எதுவும் வரலன்னா, நீங்க அப்பீல் பண்ணலாம். பொதுவா, PIO-க்களுக்கு மேலே உள்ளவர் அப்பீல பாக்குறவரா இருப்பாரு.

இது சும்மா ஒரு மாதிரிதான். நெறய விசயங்களுக்கு நீங்க இவர் உதவிய நாடலாம்!
இவரப் பத்தி மேலும் தெரிஞ்சிக்கனுமா? கீழே உள்ள சுட்டிகள்ல போய் பாக்கலாம்:

http://www.rti.gov.in/
http://rti.aidindia.org/
http://www.righttoinformation.org/

அமெரிக்காவுல இருக்கீங்களா? கவலையே வேண்டாம். இவர நீங்க வாஷிங்டனில் சந்திக்கலாம்!

இவர் கூட பழகிப் பாருங்க. உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிடும் :) மத்தவங்களுக்கும் இவரப் பழகிப் பாக்கச்சொல்லுங்க. வாழ்த்துக்கள்!

நன்றி: http://www.indiatogether.org மற்றும் http://aidindia.org

Thursday, February 14, 2008

பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்!

என்னங்க, ஆச்சரியமா இருக்கா? இப்ப இருக்குற அமெரிக்க நுகர்வுக் கலாச்சார வாலன்டைன்ஸ் டே இல்ல அது. ஒரு ஜாலியான (அர்த்தமே புரியலேன்னாலும்!) கொண்டாட்டம்.
எனக்கு 7-8 வயது இருக்கும்போதே அந்த விழா அழிந்து விட்டது. நினைவில் இருப்பவை மட்டும் இங்கே..


அந்த விழாவுக்கு பேரு, காமன் பண்டிகை (காமாண்டி - எங்க ஊரு மொழியில!). ஒவ்வொரு தெரு முனையிலேயும் அல்லது நால்ரோடு கூடும் இடங்களிலேயும் சின்னதா ஒரு இடத்தைத் தேர்வு பண்ணி கீழே சாணம் போட்டு மொழுகி விட்ருவாங்க. நாலு மூலையிலேயும் சின்ன சின்னக் கம்பு நட்டு, சின்ன பந்தல் மாதிரி போட்டுடுவாங்க. நடுநாயகமா, ஒரு கம்பு நட்டு அதுமேலே வக்க பிரிய (வைக்கோல் கயிறு) சுத்தி உச்சியில ஒரு வரட்டிய வச்சு கட்டிவிட்ருவாங்க. அந்தக் கம்பு ஒரு கரண்டிய நட்டு வச்ச மாதிரி இருக்கும் (உத்தேசமா!). அதுக்கு, மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு எல்லாம் வச்சு அலங்காரம் பண்ணியிருக்கும். 'வசதியான' தெருவா இருந்தா அதுக்குள்ள ஒரு விளக்கு ஒன்னு வச்சு சாயந்திரம் ஆனா எரியவிடுவாங்க. இதுல பாருங்க, பொம்பளைக யாரும் இந்த 'விசேசத்துல' கலந்துக்க மாட்டாங்க. ஏன்னு எனக்குத் தெரியல!

இது ஒரு 15 நாளைக்கு அப்படியே இருக்கும். யாரும் கண்டுக்க மாட்டாங்க!! தெருப் பெருசுங்க 15ஆம் நாள் முடிவுல ஒன்னு கூடி, இன்னிக்கு ராத்திரிக்கு 'காமாண்டி கொளுத்துறது' அப்பிடின்னு 'அதிகாரப்பூர்வமா' அறிவிப்பாங்க! அன்னிக்கு ராத்திரிதான் விசேசம். சாயந்திரம் ஆனா, வீட்டுல வெளையாடப் போறதா பொய் சொல்லிட்டு, தெருமொனைக்கு ஜூட் விடுவோம். வீட்டுப் பெருசுங்களுக்குத் தெரியும், காமாண்டி கொளுத்துறதப் பாக்க போறான்னு!

சாயந்திரமே, தெருவுல இருக்குற 'தொழிலதிபர்கள்' (பெட்டிக் கடைக்காரர்கள் என்று பொருள் கொள்க!) மற்றும், 'பெருந்தனக்காரர்கள்' அளிக்கும் அஞ்சு பத்த வச்சுகிட்டு, பொட்டுக்கடலையும், நாட்டுச் சக்கரையும் வாங்கி வச்சுருப்பாங்க. ஒரு ஏழு எட்டு மணி ஆனவுடனேதான்யா, மெயின் கூத்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு 'பாட்டுக்காரர்' இருப்பார். அவருக்கு 'ஆனத' பாத்துகிட்டா (செல பேரு வெத்தலை பாக்கு - low maintenance, செல பேரு 'தண்ணி மிண்ணி' கேப்பாங்க!), அவரு ஸ்பாட்டுக்கு வந்துடுவாரு கொரல தட்டி சட்டி சரி பண்ணிகிட்டு!

பாட்டுக்காரர் சிக்னல் குடுத்தவுடனே, ஒரு ரெண்டு விடலப் பசங்கள செலெக்ட் பண்ணி, திருநீறு பூசி சாமி கும்பிடச் சொல்லுவாங்க. ஒருத்தன் ரதி, இன்னொருத்தன் 'மம்முதன்' (மன்மதன்). ரெண்டு பேரும் ரெண்டு குழுவுக்குப் பிரதிநிதி! ரெண்டு குழுவும் எதிரும் புதிருமா நிக்கும். பாட்டுக்காரர் நடுவாந்திரமா நிப்பார் (செல தெருவுல குழுவுக்கு ஒரு பாட்டுக்காரர் இருப்பார்). ரெண்டு குழுவுலேயிருந்தும் ஒரு 'பலசாலி' கையில் நீள துண்டோட இருப்பாரு. துண்ட அந்தந்த எளவட்டத்தோட இடுப்புல சுத்தி ரெண்டு மொனையையும் பலசாலி கையில வச்சுருப்பாரு. ரதி, மம்முதன் ரெடி. பாட்டுக்காரரு நல்லா கொரலெடுத்துப் பாடுவாரய்யா... அப்பிடி பாடுவாரு. நமக்கு இப்போ ஒண்ணும் ஞாபகம் இல்ல! அப்பிடி, பாடும் போது, ரதி பக்கம் பாடும்போது, மம்முதன் அப்பிடியே ரதி பக்கம் வருவாரு. ஒடனே பலசாலி, துண்ட ஒரு இழு இழுத்து மம்முதனக் 'கட்டுப் படுத்துவாரு'!! அதே மாதிரி, ரதி் பக்கமும் நடக்கும்.

பாட்டெல்லாம் முடிஞ்ச பெறகு (இல்ல, பாட்டுக்காரருக்கு 'சரக்கு' தீந்தபெறகு!), போட்டு வச்ச பந்தலப் பிரிச்சுப் போடுவாங்க. எல்லாத்தையும் கூட்டிக் குமிச்சுத் தீ வச்சுருவாங்க!!!! அப்படியே சைடுல, பொட்டுக்கடல வினியோகம் நடக்கும். தீ அணைஞ்சவுடனே எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவாங்க.

அடுத்த நாள், இன்னும் சரி கூத்து நடக்கும். அன்னிக்குத்தான் 'புலிவேடம்'!! வேடம் போடுறதுக்கு ஒருத்தர் ரெடியா இருப்பாரு. இத யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஒரு வீட்டில் ரகசியமா 'பெயிண்டிங்' நடக்கும். உடம்பு முழுதும் - ஆமா, உடம்பு முழுதும் (லங்கோடு ஏரியா தவுத்து!) பெயிண்ட பூசிகிட்டு, 'புலி' ரெடியாய்டும். செல படங்கள்ல காட்டுற மாதிரி துணிப்புலி இல்ல. வெளியூர்லருந்து 'டமுர்செட்டு' (drums set with clarinet) வந்து எறங்கி (அவங்களுக்கும் 'எறங்கி' இருக்கும்!) கூட்டம் கள கட்ட ஆரம்பிக்கும்! நாங்க வீட்டுல அதே பொய்ய சொல்லிட்டு 'புலி' ஆட்டம் பாக்க கெளம்பிடுவோம்.

எல்லாரும் ரெடியானவுடனே, டமுரு செட்டு அடி தூள் கெளப்பும். புலி ஆட ஆரம்பிக்க, வசூல் ராஜா மஞ்சள் பையோட பின்வர, ஊர்வலம் ஆரம்பிக்கும். ஒவ்வொரு வீடா போயி, ஒரு ஆட்டத்த போட்டுட்டு வசூல பண்ணிட்டு தொடருவாங்க. செல பேரு நெல்லு குடுப்பாங்க. செல பேரு வீட்டுகுள்ள போய் ஒளிஞ்சுகிட்டு, இல்லேன்னு பொய் சொல்ல சொல்லுவாங்க. இதுல, மாமன் மச்சான் புலி வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான்னா போச்சு. கணிசமா ஒரு 'துகை' (தொகை) போய்டும். அங்கங்கே புலிக்கு வாய் புளிக்க எலுமிச்சம்பழம் குடுப்பாங்க. அத வாயில கடிச்சுகிட்டு புலி வேக வேகமா போக ஆரம்பிக்கும். ஒரு ரெண்டு மூனு தெரு போனதுக்கு அப்புறம், புலிக்கு கொஞ்சம் கொஞ்சமா 'கிலி' புடிக்க ஆரம்பிக்கும். ஏன்னா, பெயிண்டெல்லாம் நல்லா காஞ்சு ஒடம்பு வறவறன்னு ஆக ஆரம்பிக்கும். வேர்வை சொரக்கும் ஆனா, வெளியில போக வழியில்லாமே 'புலி' படற அவஸ்தை பாவமா இருக்கும்!

ஒரு கட்டத்துல புலி வேற வழியில்லாம, போதுண்டா சாமின்னு ஊர்க்கொளம் பாத்து வேக வேகமா 'ஓட' ஆரம்பிச்சுறும். 'புலிப்படை' பின்னாலேயே மண்ணெண்ணை, சோப்பு சகிதம் ஓடும். ஒரு வழியா கொளத்தடியில போயி ஒக்காந்து, நண்டு சுண்டெல்லாம் பெயிண்ட சொரண்டி எடுக்கும். அப்ப 'புலி' படுற வேதன நமக்கெல்லாம் சிரிப்பா இருக்கும். ஒரு வழியா சொரண்டல் முடிஞ்சு ஒரு குளியலப் போட்டுட்டு, அப்பிடியே மத்ததயும் உள்ளே போட்டுட்டு புலி ரெஸ்ட் எடுக்க குகைக்குள்ள (வீடுதாங்க!) போயிடும். புலிப்படை, டமுரு செட்டுக்கு செட்டில் பண்ணி அனுப்பிட்டு, வசூல எடுத்துகிட்டு 'வேட்டை' தேடி கடைக்குப் போயிடுவாங்க!! நாங்களும் திட்டு வாங்க காதுகள ரெடி பண்ணிகிட்டு மெதுவா வீட்டுப் பக்கம் ஒதுங்குவோம்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் ஏதாவது புராண கதைய ஒட்டி நடந்ததா, அந்தப் பாட்டுகளுக்கு என்ன பொருள், ரதி, மன்மதன் உண்மை மனிதர்களா, ஏன் 'காமாண்டியை' எரிக்கிறாங்க - இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா இங்கே சொல்லுங்களேன்! இப்போ எங்க ஊர்ல இதெல்லாம் நடக்குறது இல்ல. எல்லாரும், 'நாகரீகமாயிட்டதாலே' இனிமே வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவங்கன்னு நெனைக்கிறேன். ஆனா, நான் பாத்தது கிட்டதட்ட வாலன்டைன்ஸ் தின கொண்ட்டட்டம்னுதான் சொல்லனும்.

கொசுறு: சிங்கப்பூரில் மட்டும்தான் இந்த நாளுக்கு ஒழுங்கான தமிழ்ப்படுத்தல் இருக்குன்னு நெனைக்கிறேன். அங்கே 'அன்பர்கள் தினம்' அப்பிடின்னுதான் சொல்றாங்க. அன்பு வைத்திருக்கும் யாருக்கும் வாழ்த்துக்கள், பரிசுகள் பரிமாறிக்கொள்ளலாம். ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???

Wednesday, July 25, 2007

மெல்லக் கொல்லும் விஷங்கள் ...

(முன்குறிப்பு: ஏப்ரல் 22, 2005 அன்று திண்ணையில் வெளிவந்தது)
====*====

குடிக்கத் தண்ணீரில்லாத நமது நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து எழுப்பப்படும் தொழிற்சாலைகள். பணம் பார்ப்பதே லட்சியம் என்று ஆலாய்ப்பறக்கும் கனவுத் தொழிற்சாலையின் உருப்படியில்லாப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப்பொருட்களான நடிகர், நடிகையரை வைத்துத் தயாரிக்கப்படும் விளம்பரங்கள். கண்மூடித்தனமான மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் இளையர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து எதை முன்னிருத்துகிறார்கள்? ஒரு பைசாவுக்கும் புண்ணியமில்லாத,
நம் உடலுக்கு கெடுதலன்றி வேறு எதுவும் அளிக்கமுடியாத, விதவிதமான அளவுகளில் வரும் மேற்கத்திய குளிர்பானங்களை!

இளநீர், கோடையின் கொடுமையைத் தணிக்க இயற்கை நமக்கு அளித்த உலகின் மிகச்சிறந்த குளிர்பானம். பனைமர நுங்கு, பதனீர், வெள்ளரிக்காய், தர்பூசணி என நமக்கு இயற்கை அளித்த கொடை ஏராளம்! ஆனால், அன்புகூட செயற்கையாகிவிட்ட தற்காலத்தில், இயற்கையை இயற்கை எய்த வைத்துவிட்டு, செயற்கையான பல விஷயங்களை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். செயற்கைக்கோள், செயற்கைப் பட்டு, செயற்கை முடி, செயற்கைப் பூக்கள் என வாழ்வில் பல செயற்கையாகிவிட்டன. ஆக, செயற்கையான விஷயங்கள் நமக்குப் புதிதில்லை. ஆனால், செயற்கை குளிர்பானங்களை அவ்வாறு எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இது உடம்பு மற்றும் உயிர்
சம்பந்தப்பட்டது. செயற்கைக் குளிர்பானங்களுக்கும், உயிருக்கும் என்ன தொடர்பு?

http://www.mercola.com/2004/jun/26/soda_diabetes.htm என்ற தளத்திற்கு சென்று பாருங்கள். இந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் உங்களை அதிர்ச்சியடைய செய்யும்! சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. உங்களில் சில பேருக்குகூட வந்திருக்கும். டெல்லியில் ஒரு மாணவன் ஒரு போட்டிக்காக தொடர்ந்து ஒருவகை குளிர்பானத்தை அருந்திவிட்டு, முடிவில் இறந்தேபோனான் என்று! அது உண்மையா பொய்யா நமக்குத் தெரியாது. ஆனால் மெதுவாக உயிரை எடுக்கும் அளவுக்கு அதில் சமாச்சாரம் உண்டு என்பது உண்மைதான். அதனால்தானோ என்னவோ சில மாநிலங்களில் சிலவகை குளிர்பானங்களை பூச்சிமருந்தாக விவசாயிகள் வெற்றிகரமாக பயன்படுத்திவருகின்றனர்! இதுபற்றியும் மேலும் இந்த குளிர்பானங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் விபரங்கள் அறிய: http://www.indiaresource.org என்ற வலைதளத்தைப் பாருங்கள்.

சிலமாதங்களுக்கு முன், இந்த வகை குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்பட்ட(?!) அளவுக்கு மேல் பூச்சிமருந்து கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் குளிர்பான அழிப்பு, எதிர்ப்பு, கழுதைக்கு குளிர்பானம் புகட்டுதல், சாக்கடையில் வீசுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன. கொஞ்ச நாட்களில் அவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. மக்கள் வழக்கம்போல் அடுத்த பரபரப்புக்குத் தாவி விட்டனர். எந்த பரபரப்பும் பத்திரிகைகளின் உதவியால் சில நாட்கள்தான் தாக்குப் பிடிக்கின்றன. பிழைப்பு நடத்த அவர்களுக்கும் புதுப்புது
பரபரப்புகள் வேண்டியிருக்கிறது.

இந்த மாதிரி விஷ(ய)ங்களை உலகத்திற்கு 'அர்ப்பணிப்பு' செய்த அமெரிக்காவோ இப்போது, குளிர்பானங்களை பள்ளிகளில் விற்கக் கூடாது என்று மாநிலத்திற்கு மாநிலம் சட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம், பள்ளி மாணவ மாணவியர் அதிக அளவு குளிர்பானங்களைக் குடித்துவிட்டு பருமனாகிவிட்டனராம். சமீபத்தில் மார்கன் ஸ்பர்லாக் (Morgan Spurlock) என்பவர் எடுத்த Supersize Me என்ற ஒரு விவரண படம் ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. அப்படத்திற்குப் பிறகு McDonalds உணவு நிறுவனம் Supersize (பெரிய பெரிய அளவுகளில் உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்குவது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் அளவை விட பல மடங்கு அதிகமாக calories கொண்டது)என்ற முறையையே கைவிட்டுவிட்டது. அவர்களுக்கு உள்ள அரசியல் மற்றும் பண பலம் காரணமாக எதிர் நடவடிக்கை எதுவும் சாத்தியப்படவில்லை. இருந்தாலும், McDonalds - க்கு எதிராக பலர் வழக்குப் போடுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவிற்கு எல்லா விஷயத்திலும் பட்டால்தான் புத்தி வருகிறது!

உள்ளூர் நெருக்கடி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக இந்த குளிர்பான நிறுவனங்கள் இந்தியா போன்ற ஏமாளி நாடுகள் பக்கம் வருகின்றன. பழய சாதத்தை அழகாக பொட்டலம் போட்டு அதில் அமெரிக்க கொடி மற்றும் 'Made in the USA' என்று பொறித்தால், போட்டி போட்டுக்கொண்டு பெருமையுடன் வாங்கும் நமது இந்தியர்கள்தான் அவர்களின் இலக்கு.

இந்நிலையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளாவில் உள்ள பளாச்சிமடா என்ற கிராம பஞ்சாயத்து, ஒரு மிகப்பெரிய குளிர்பான நிறுவனத்துக்கு உரிமம் புதுப்பிக்க மறுத்துவிட்டது! அதற்க்குக் காரணம், அளவுக்கு மீறி அந்த நிறுவனம் அந்த கிராமப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். என்ன ஒரு கொடுமை, நீரை உறிஞ்சி விஷம் தயாரிக்கிறார்கள்! ஆனால். அந்த நிறுவனமோ தன் பணபலத்தாலோ வேறு எதுவாலோ தமக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தமிழக சிவகங்கை போன்ற இடங்களில் மேலும் தனது தொழிற்சாலைகளைக் கட்ட திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது! மேலும் சகாய விலையில் சாகும் மருந்து அளிக்கும் திட்டமோ என்னவோ!

கண்மூடித்தனமாக மேலை நாட்டு உணவு மற்றும் குளிர்பான வகைகளை வாங்கும் நாம், சற்று சிந்திப்போம். வருங்கால சந்ததியினர் வளமான வாழ்வு வாழ முடிந்தவரை இயற்கை
உணவு முறையை பின்பற்றுவோம்.

வாழ்வோம் வளமுடன், வலிமையுடன்...

====*====