நேற்று நள்ளிரவு 12:30 இருக்கும், தூங்கப் போகலாம்ணு பெட்டுக்குப் போயி கண்ணயரும் நேரம் திடீர்னு கண்ணில் ஏதோ தூசி விழுந்த மாதிரி ஒரு உணர்வு. சரி, நம்மூர்ல இருக்கும் பாசக்கார தூசிப் பயபுள்ள நம் கண்ணுக்குக் கண்ணா வந்துருச்சு போலன்னு அனிச்சையா கண்ணைக் கசக்கிட்டேன். சில வினாடிகள் ஆச்சு, ஒன்னும் சரியாகிற மாதிரி இல்ல. சரி ஏதோ, பூச்சிதான்
தஞ்சமடைய வந்திடுச்சு போலன்னு லைட்டை போட்டு (அட ஆமாங்க, கரண்ட் இருந்துச்சு!) கண்ணாடில பாத்தா இடது கண்ணு புசுபுசுன்னு வீங்கிடுச்சு. இதுமாதிரி முன்ன பின்ன ஆனது இல்லேங்கிறதாலயும், கண்ணானது நமக்கு கண் போன்றது(!?) எனும் காரணத்தாலயும் கொஞ்சம் முனைப்பா பாத்தா, கண்ணுக்குள்ளே கலவரம் ஆகி, வெள்ளை கறுப்பை மறைச்சு ஒரு layer கட்டிடுச்சு.
தங்ஸ் உடனே பரபரப்பாகி, கண்ணைக் கழுவுங்க, கண்ணைக் கழுவுங்கன்னு என்னவோ நான் சைட்டடிக்கும்போது சொல்றமாதிரி திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டே இருந்தாங்க. எனக்கு எதுவோ சரியில்லை மாதிரியான உணர்வு!
உடனே கிளம்பி, பக்கத்தில் இருக்கும் KM மருத்துவமனைக்குப் போகலாம்னு முடிவெடுத்தாச்சு. தங்ஸ் நான் ஸ்கூட்டில கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்னு சொன்னதும் புதுப்பயம் தொத்திகிச்சு! ஆத்தா, நீ இருக்குற டென்ஷன்ல எங்கியாவது ஆட்டோவா பாத்து மோதிடாதேன்னு கேட்டுகிட்டேன். நல்லவேளை, சாலையில் யாரும் இல்லைங்குறதாலே ஒத்தக்கண்ணன் உயிருக்குப் பங்கம் வரல. மருத்துவமனைக்குப் போயி கேட்டா, இங்கே பணி மருத்துவர் மட்டும்தான் இருக்காரு, பக்கத்துல இருக்கும் clinic போங்கன்னு சொன்னாங்க. அங்கே போனா, ரெண்டு பணி மருத்துவர்கள், இளைஞர்கள். கண்ணப் பாத்துட்டு, allergy மருந்து எழுதித் தரேன்ன்னாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு சின்ன discussion என்னவா இருக்கும்னு. எனக்கு, அங்கே பாக்கிறது சரின்னு படல. அவங்ககிட்டேயே கேட்டோம், இப்போதைக்கு கண் பாக்குற மருத்துவர் எங்கே இருப்பார்னு. அவரு, இப்போ எந்த சிறப்பு மருத்துவமனையும் இருக்காது, பேசாம எழும்பூர்ல உள்ள அரசு கண் மருத்துவமனைக்குப் போங்கன்னு சொன்னார்.
எனக்கு அந்த மருத்துவமனையைப் பத்தி தெரியாது. தவிரவும், அரசு மருத்துவமனைகள்மேல் பொதுவாக இருக்கும் தப்பான ஒரு பார்வை எனக்கும் இருந்தது. தயங்கிகிட்டே, சரி வாசன் மருத்துவமனையை எதுக்கும் ஒரு தடவை பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். அவ்வளவு தூரம் தங்ஸ் வண்டி ஓட்டவேணாம்னுட்டு (கடவுள் உசுருக்கு ஒரு தடவை மேல கருணை காட்டலேன்னா?) ஒரு ஆட்டோவைப் பிடிச்சோம். நான் நண்பர்களை யாராவது கூப்பிட்டுகிட்டுப் போறேன்னு சொன்னா, தங்ஸ் அவங்கல்லாம்
தூங்கிகிட்டு இருப்பாங்க, தொந்தரவு பண்ணவேணாம், நானே கூட வரேன்னுட்டாங்க (நண்பர்களே, இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது?). நல்லவேளை, வீட்டில் அக்கா பையன் இருந்ததால் குழந்தைகளைப் பாத்துக்கச் சொல்லிட்டு முதலில் வடபழனி வாசனுக்கு போகச் சொன்னேன். இடையில், இடது கண்ணை திறக்கவே முடியல, ஆனா வலி இல்ல. முதல்ல பார்த்த மருத்துவர், நீங்க நெனச்சமாதிரி விழிப்படலம் கிழியல்லாம்
இல்ல, கிழிஞ்சுருந்தா வலி தாங்க முடியாதுன்னு சொன்னார்.
வாசன் பூட்டி இருந்தது. பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோக்காரர், சூரியாவுக்குப் போங்க அங்க பாப்பாங்கன்னு சொன்னார். சரின்னுட்டுஅங்கே போனா, அங்கேயும் பணி மருத்துவர் மட்டும்தான் இருக்கார். சரி இது ஒத்துவராதுன்னு ஆட்டோவை நேரா எழும்பூருக்கே விடச்சொன்னேன். வண்டி வேகமெடுக்கவும், எனக்குள் பல சிந்தனைகள். இனிமே, நம்மள ஒத்தக்கண்ணன்னுதான் கூப்பிடப்போறதாக உறுதியா நம்பினேன். நினைவில், அந்தக்கால ஒத்தக்கண்ணன் வில்லன்கள் வரிசையா வந்து hai
சொல்லிட்டுப்போனாங்க. எனக்கு என்னவோ, water world villain தான் புடிச்சுருந்தாரு, சரி அதேமாதிரி கெட்டப்புலேயே ஆகிருவோம்னு முடிவெல்லாம் பண்ணியாச்சு!
தங்ஸ் வழி முழுக்க இருந்த பெரிய கோயில்களில் இருந்து, இன்னிக்கோ நாளைக்கோ இடிபடப்போகும் சாலையோர திடீர் தெய்வங்கள் வரை instant பிரார்த்தனை, நேர்த்திகடன் எல்லாம் வேண்டிகிட்டு வந்தாங்க. நல்லா ஆனதுக்கு அப்புறம், என்ன பாடோ? எந்தக் கோயில் நேர்த்திக்கடனோ? இவ்வளவு ரணகளத்திலும், தூங்கப்போறதுக்கு கொஞ்ச முன்னாடி ஒரு சாமியைப் பத்திக் கிண்டலடிச்சுகிட்டு இருந்தேனே, அதான் கண்ணக் குத்திருக்குமோன்னு நான் கேட்ட கேள்வியை தங்ஸ் ரசிக்கவில்லை! நீங்க அடங்கவே மாட்டீங்களான்னு ஒரு முறைப்பு கிடைத்தது.
ஒரு வழியா மருத்துவமனை வந்தோம். யாருமே இல்லை (ஈ, காக்கா உள்பட. ஆனா நிறைய நாய்கள் வெளியில் நின்றிருந்தன). ஆட்டோவை காக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனோம். ஒரு ஆண் செவிலி வந்து என்னவென்று கேட்டார். விபரத்தைச் சொன்னோம். உக்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனார். கொஞ்ச நேரம் கழித்து ரெண்டு பெண் மருத்துவர்கள் வந்தார்கள். ஒருவர் ரொம்பச் சின்ன வயது. இன்னொருவர் 30 - 35 இருக்கலாம், கர்ப்பமாக இருந்தார். அடடா, அவரை இந்த நேரத்தில் தொந்தரவு செஞ்சுட்டமேன்னு கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது. ரெண்டு பேரும் ரொம்ப பொறுமையாவும், அக்கறையாவும் கண்ணை சோதிச்சாங்க. vision test பண்ணிட்டு, ஏதோ chemical இல்லேன்னா பூச்சி விழுந்துருக்கும், கவலைப்படத் தேவையில்லைன்னு
சொன்னாங்க. செவிலியைக் கூப்பிட்டு, ஒரு wash பண்ணிட்டு மருந்து போட்டு அனுப்பிவிடச் சொன்னாங்க. அவரும், பொறுமையா ஒரு power wash பண்ணி மருந்து போட்டு விட்டார். திரும்பும்போது, மருந்துகள் மாத்திரைகள் கொடுத்து காலை வரை பார்த்துவிட்டு, சரியாகலன்னா வந்து காண்பிக்கச் சொன்னாங்க. சரியாகிவிட்டது!
அரசு மருத்துவமனைகள்மேல் எத்தனையோ குற்றச் சாட்டுகள் இருந்தாலும், எனக்குக் கிடைத்த கவணிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. மன்னார்குடியில் சின்ன வயதில் பார்த்த அந்த மிரட்டும் மருத்துவமனை இல்லை. சத்தம்போடும் செவிலிகள், ஏனோ தானோவென்ற மருத்துவர்களின் கவனிப்பும் இங்கில்லை. ஒரு வேளை கூட்டம் குறைவாக இருந்தால் உரிய கவனிப்பு கிடைக்குமோ என்னவோ? அவர்களும் உணர்ச்சியுள்ள மனிதர்கள்தானே?
செவிலிக்கு இந்தப் பதிவின் மூலம் நன்றி. இதே கவனிப்பை எல்லோருக்கும் அளிக்க வாழ்த்துகள்! அந்த இரண்டு பெண் மருத்துவர்களுக்கும், மகளிர் தினமான இன்று வாழ்த்துகளும் நன்றிகளும் கூறுவது மிகப் பொருத்தமானதாக இருக்கும். கர்ப்பமாய் இருக்கும் அந்த மருத்துவர் சுகப்பிரசவத்தின் மூலம் ஒரு நல்ல குடிமகனை/குடிமகளைப் பெற்றெடுக்கவும் மனமார்ந்த வாழ்த்துகள்!!
===