பதின்ம வயதில் இருக்கும்போது, பொங்கல் வந்தாலே நமக்கு ஒரு தனி உற்சாகம்தான். குலத்தொழிலான விவசாயத்தை முன்னிறுத்தி வரும் பண்டிகை என்பதாலோ, இல்லை அந்த நான்கைந்து நாட்களும் தனி சுதந்திரம் கிடைக்கும் என்பதாலோ தெரியலை.
பொங்கலுக்கு முதல்நாள் வரிசைகிழமை (போகின்னல்லாம் சொல்றது இல்லை). சகோதரி வீடுகள், அப்பாவோட சகோதரிகள் (அத்தைகள்) வீட்டுக்கு சீர் வரிசை கொண்டு போறதுதான் முக்கிய நிகழ்வு இன்னிக்கு. நமக்கு செம ஜாலியா இருக்கும். ஏன்னா, வரிசை கொண்டு போனா, புது சட்டை, காசு கிடைக்கும். நாம பாக்குற பெரிய தொகையே பொங்கல் போதுதான்! கரும்பு, மஞ்சள், வாழைத்தார், பொங்கல் வைக்க வேண்டிய பொருட்கள் எல்லாம் தனித்தனியே எடுத்து ரெண்டு பங்கா வச்சுடுவாங்க. நமக்கு ரெண்டு சகோதரிகள். மாட்டு வண்டில வச்சு வேலையாள் வண்டியோட்ட ஒரே குதியாட்டம் போட்டுகிட்டு போய் சேருவோம். பெரிய சகோதரி வீட்ல ஒண்ணும் பிரசினை இருக்காது. வரிசைய வாங்கிட்டு நாங்க குடுக்குற வரிசப் பணத்துல பாதிய 'பொங்க காசா' திருப்பி குடுத்துடுவாங்க. சட்டைத்துணி கிடைக்கும் சில சமயம். இன்னொரு சகோதரி வீட்டில் ஒரு சிறு நாடகம் நடக்கும். சின்னத்தான் சுருதி லயத்தில், அன்புத் தகராறு செய்துகொண்டு வரிசையை வாங்க மாட்டார். சிறிது தாஜாவுக்குப் பின் பெரிய மனசு பண்ணி வாங்கிக்குவார். ரெண்டு வீட்லயும் வயிறு முட்ட சாப்பாடு கட்டாயம். சாப்பிடாவிட்டால் கோச்சுகுவாங்க. அத்தைகளுக்கு பணமா வச்சு குடுத்துடுவோம். எங்க வீட்டுக்கு என் தாய்மாமன் தவறாம வரிசை கொண்டு வருவார். பேத்தி பாத்த பிறகும், இன்னும் அது தொடருது!
இன்னிக்குதான் நெறைய பேரு தன் தண்ணியடிக்கும் கெப்பாசிடிய சோதிச்சு பாப்பாங்க. நெறய சண்டைகளும் நடக்கும். ரோட்டுல நெறய சர்வேயர்கள் விழுந்து கெடப்பாங்க. புதுக் குடிகாரர்கள் முளைப்பாங்க. பாசம் புதுசா பொங்கல விட அதிகமா பொங்கும்!
பொங்கல் அன்னிக்கு (பெரும்பொங்கல்ன்னும் சொல்லுவோம்) மதியம் வரை, பெருசா ஒண்ணும் நமக்கு வேலையிருக்காது. எதுத்த மாதிரி இருக்குற கேயார்பி மாப்ள வீடு, மத்த பங்காளிங்க வீட்டுக்குப் பொங்கல் பரிமாற்றம் நடக்கும். அன்னிக்குப் பொங்கசோறு மேல வரும் பாருங்க ஒரு கோவம்... போற எடத்துலயெல்லாம் சாப்பிட சொல்லிக் கட்டாயப்படுத்துனா?
இதுக்கெடையில, கரும்பு மெஷின் நிக்காம ஓடிகிட்டு இருக்கும். உதடுகள் கிழிந்து திங்கிற கொழம்பு சுறுக்குன்னு குத்தும்போது, சனியன் இந்தக் கரும்பத் தொடக்கூடாதுன்னு நெனச்சுகிறது...ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு!!
பொங்கல் முடிஞ்சு 10 மணிக்கு மேலதான் நமக்குக் கொண்டாட்டமே. வேலையாட்களுடன் சேர்ந்துகொண்டு புல்லறுக்க கெளம்பிடுவோம். அப்போ எங்க வீட்ல 50க்கும் மேல பசு, எருமை, காளை மாடுகள் இருந்தன. கட்டையன், கட்டையன் மவன், ராசப்பன் மவன் , மாரிமுத்து, பனையகொட்டையான், உண்டுலு (நெஜப்பேரு பன்னீர்), ஆறுமம் (ஆறுமுகம்) போன்ற உடலுழைப்பாளர்களுடன் எல்லாம் சேந்து அண்ணன்களோட நாங்களும் கெளம்பிடுவோம். ஊரே புல்லறுக்கக் கெளம்பிடும். வண்டியைக் கூடி கூடி (வேகமா) ஓவர்டேக்கல்லாம் எடுத்து காட்டாறு பக்கம் போயிடுவோம். நமக்குப் புல்லறுக்கற வேலையெல்லாம் குடுக்கமாட்டாய்ங்க. அவங்க அறுத்து முடியுற வரை வண்டி மாடுகள மேய்க்கறதுதான் வேலை!
புல்லறுத்து வண்டியில ஏத்துனதுக்கு அப்புறம் கூடிக் கிட்டே வீடு வந்து சேர மத்தியானமாயிடும். இதுக்கு எடையில மத்த மாடுகளப் பக்கத்திலிருக்குற பெரியாத்துல (இப்போ பிளாஸ்டிக் குப்பை ஆறு ஆயிடுச்சு:( ) குளிப்பாட்டி வீடு கொண்டு வந்து சேத்துடுவாங்க. சாயந்திரமானா அவங்கவங்க மாடுகளுக்கு அவங்கவங்க கட்சிப் பெயிண்ட் கொம்புல ஏறிடும். எங்க வீட்டுல ஒவ்வொரு அண்ணனும் ஒரு கட்சி, அப்பா ஒரு கட்சி (கிட்டத்தட்ட எல்லா கட்சியிலயும் இருந்துருக்காரு :) , ஒவ்வெருத்தருக்கும் புடிச்ச மாட்டு ஜோடிகளுக்கு அடிச்சு விடுவாங்க. பெரியண்ணன் அப்போ இருந்த பொலிகாளைக்கு ஸ்பெஷல் கவனிப்பு காட்டுவாரு.
வீட்டுக்கு வந்தப்புறம், நான் கோரை வாங்க பறத்தெருவுக்கு (அரிஜன சகோதரர்கள் வசிக்கும் தெரு) போயிடுவேன். அப்போ குடிப் பறையர்கள்னு ஒவ்வொரு பங்காளிகளுக்கும் இருப்பாங்க. பங்காளிகள் வீட்ல எந்த நல்லது கெட்டதுக்கும் அவங்கதான் வருவாங்க. எங்களுக்கு முத்தன் வீடு. நேரா முத்தன் வீட்டுக்குப் போயி கோரை வாங்கப் போயிடுவேன். எங்க வீட்டுக்காகவே ஒரு கட்டு கோரை தனியா இருக்கும். வாடி சின்னய்யா ன்னு பாசத்தோட கட்டிகுவாரு முத்தன். சரி வீட்டுக்கு வந்துட்டே, ஒரு வாய் சாப்பிட்டுட்டு போன்னு சொல்லுவாங்க. முத்தன் வீட்டுக்காரம்மா, சின்னய்யா நம்ம வீட்டுலல்லாம் எப்பிடி சாப்பிடுவோ ன்னு சிரிச்சுகிட்டே கேக்கும். நான் போடுங்க சோத்தன்னு உக்காந்துருவேன். அட, வரும் பாருங்கய்யா சாப்பாடும் மீன் குழம்பும். அந்த மாதிரி மீன் குழம்பு என் வாழ்க்கையில எங்கயும் நான் சாப்பிட்டதில்ல. ஆறுமம் வீட்டு மீன்குழம்பை விட சூப்பராக இருக்கும்.
இந்தக் கோரை, ஆற்று ஓரங்களில் வளரும் ஒரு நீளமான புல். பாய் முடைய பயன்படும். மாட்டுப் பொங்கல் அன்னிக்கு அதை கிழித்துக் காய வைத்துப் பதமா இருக்குற கயிறு மாதிரி குடுப்பாங்க. மாடுகளுக்கு மாலை கட்டலாம். இந்த மாலையில் கோர்க்க, சங்கெலை, பூலாங்கொத்து, பெரண்டை, மாவிலை தேடிப் பிடிச்சு கொண்டு வருவோம். இந்த மாலைய கட்டுனா, ஆடு மாடுங்க நீண்டகாலத்துக்கு வாழுங்குறது நம்பிக்கை. பொங்கலுக்கு முன்னே ஏழாம் நாளே ஆடு மாடுகளுக்கு கழுத்துல மணி கட்டி விடுவாங்க. வண்டி/ஒழவு மாடுகளுக்கு அழகா வார்ப்பட்டையில் கோத்த சலங்கை, பெரிய பசு மாடுகளுக்கும் எருமைகளுக்கும் டொப்பு மணி (டொப்பு டொப்புன்னு சத்தம் கேக்கும்), இளந்தாரி மாடுகளுக்கும், கன்னுகுட்டிகளுக்கும் வீரமணி (சத்தம் அதிகமா கேக்குற வெங்கல ஒத்தை மணி) எல்லாம் கட்டி, அவங்க எல்லாம் நடக்கும் போது கலவையா ஒரு சத்தம் கேக்கும் பாருங்க, காதுக்கு இனிய ஒலி அது! இதுல, நம்ம திருட்டுச் சகோதரர்கள் தெரியாம மணிய அவுத்துட்டுப் போயி விக்கிற கொடுமையும் நடக்கும்.
சாயந்திரம் எலை, கொத்தெல்லாம் ரெடியா குமிச்சு இருக்கும். கோரை வந்ததும், சுல்லாப்பா (சுறுசுறுப்பா) மாலை கட்டறது நடக்கும். இந்த மாலை தவிர நெட்டியால செய்யுற கலர் கலரான நெட்டிமாலையும் சேத்து கட்டுவாங்க, கழுத்துல. சாயந்திரம் ஆனவொடனேதான் ஜாலியின் உச்சகட்டம். ஏன்னா, அப்போதான் எங்க தெருவுல மாடுகள கூடி விடுவாங்க. ஜல்லிகட்டுக்குப் பதிலா மாடுகள எல்லாம் ஆத்தாங்கரைக்கு கூட்டிட்டுப் போவாங்க. வரிசைய நிக்க விடுவாங்க. ஒரு 100-150 ஜோடி மாடு நிக்கும். எல்லாம் வண்டி/ஒழவு மாடுங்கதான். நல்லநேரம் பாத்து நம்ம குஞ்சுபிள்ள சித்தப்பா, ஒரு சொம்புல இருக்குற தண்ணிய தெளிச்சு சிக்னல் குடுப்பாரு. ஒடனே மாடுகளக் கூடிகிட்டு பந்தயம் மாதிரி ஓட்டிகிட்டு ஓடுவாங்க. ஜல் ஜல்னு சலங்கைங்க சத்தம் காதப் பொளக்கும். நாங்களும் முடிஞ்ச வரைக்கும் பின்னடியே ஓடுவோம். எங்க வீட்ல காளை இருந்த வரைக்கும் அதுதான் முந்தி வரும். காளை போனதுக்கு அப்புறம் நம்ம ஒழவு மாடுங்க வரும். அதுங்களும் போனதுக்கு அப்புறம் மத்த மாடுங்க வரும். உள்ளுக்குள்ளே பெரிய மறைமுக போட்டியும் நடக்கும். இப்போ எங்க அண்ணன் வீட்ல மட்டும் சில பசுக்களும், ஆடுகளும் பழைய நினைவுகளின் எச்சமாய்!!
ஓட்டல் முடிஞ்சதுக்கு அப்புறம், எல்லாம் வீட்டுக்கு வந்து சாமி கும்பிடுவோம். பொங்கல் வைப்போம். அப்புறம், ஒரு கிண்ணத்தில நல்லெண்ணை, ஒரு கிண்ணத்துல அரப்பு (சீயக்காய், அரைத்தது), கொஞ்சம் மஞ்சள், பொங்கல், மாலை சகிதம் கெளம்பிடுவோம். மாட்டு சாப்புக்குள்ளே (மாட்டுக் கொட்டகை) கட்டியிருக்குற மாடுகளுக்கு, முதல்ல எண்ணை, மஞ்சள், அரப்பு தேச்சு விட்டு, பின்னடியே ஒருத்தர் தலையில தண்ணி தெளிச்சு விட்டுகிட்டே வருவாரு. அப்புறம், பொங்கல் ஊட்டு, மாலை. இதுக்கு எடையில ஒரு பழைய சட்டியில நெருப்பு உண்டாக்கி வச்சுருப்பாங்க. அதை கையில ஏந்தி உண்டுலு மாடுகளைச் சுத்தி 3 முறை வருவாரு. நாங்க இசைக்கருவிகள (தட்டு, தகரம், எண்ணை டின், தாம்பாளம்) தட்டிகிட்டு 'பொங்கலோ பொங்கல்... இன்னிக்குப் போயிட்டு நாளைக்கு வா' ன்னு கை வலிக்கத் தட்டிகிட்டு வாய் வலிக்கக் கத்திகிட்டே ரவுண்டு வருவோம். அப்புறம் அந்த சட்டிய சாலையோரத்துல வச்சுடுவோம். அறுத்துகிட்டு வந்த புல்ல எல்லா மாடு, ஆடுகளுக்கும் கொண்டுபோய் வைப்போம்.
அடுத்தது வசூல் ரவுண்டு. சின்னப் பசங்கள்லாம், அப்பா, அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகிட்டு, அக்கம் பக்கத்துல இருக்குற பெரியவங்க எல்லார் கால்லயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க கெளம்பிடுவோம். சில தாத்தாக்கள் காசு குடுப்பாங்க, சில வீட்ல வாழைப்பழம், பொங்கல் குடுப்பாங்க. அதோட அன்னிக்கு ஆட்டம் முடிஞ்சது.
அடுத்த நாள் கன்னுப் பொங்கல் (கானும் பொங்கல்). மாடு மேய்க்கிற இளந்தாரிங்க, காசு சேத்து வயல்ல பொங்கல் வைப்பாங்க. அவ்வளவுதான் இன்னிக்கு. சேந்த காசுல பக்கத்தூரு (உள்ளிகோட்டை/வடசேரி) போய் படம் பாத்துட்டு வருவோம். அதுவும் அவ்வளவு சீக்கிரம் அனுமதி கெடைக்காது, என்ன படம், யாரு கூட வறாங்கன்னெல்லாம் நெறய கேள்விகள் கேக்கப்படும். ஒரு வழியா சமாளிச்சு போய் பாத்துட்டு 'வாங்கி திங்க' கொண்டுபோற காசையெல்லாம் முடிச்சிட்டு வருவோம். நானும் கேயார்பி மாப்ளேயும் திருட்டு தம் அடிக்க கட்டையன் மவன் கத்துக் குடுக்குறதும் இந்த மாதிரி ட்ரிப்புகள்லதான்!!
இப்போவும் பொங்கலப்போ 3 நாட்கள் நான் ஊருக்குப் போறத வழக்கமா வச்சுருக்கேன். பிள்ளைகளுக்கு சந்தோஷமா இருக்கு.
ஆனா எங்க ஊருல இப்போ,
கோரை மாலை யாரும் கட்றது இல்ல
மாடுகளும் வீட்ல இல்ல
ஆத்தாங்கரையில கூடுறது இல்ல
புல்லறுக்க யாரும் போறதும் இல்ல
சங்கெல, பூலாம்பூ, பெரண்டை மருந்துக்கும் இல்ல
தீச்சட்டி ரோட்டோரம் வைக்கிறதும் இல்ல
முத்தன், ஆறுமம் வீட்டு மீன் கொழம்பு மாதிரி யாரும் வைக்கிறதும் இல்ல
சாதிகள் மட்டும் அப்படியே ....இன்னும் இளமையா....முறுக்கேறி.

28 comments:
test
அழகா சொல்லியிருக்கீங்க. கிராமத்துல பொங்கல் கொண்டாடுற சந்தோஷம் தனி தான்.
தலைவரே,
அருமை... அட்டகாசம். ஒவ்வொரு நிகழ்வையும் ஞாபகப் படுத்தி சொல்லியிருக்கிறீர்கள்.
நம்ம பொங்கல் பண்டிகையும் Ditto இதே மாதிரிதான். Nostalgic memories...
//அன்புத் தகராறு செய்துகொண்டு வரிசையை வாங்க மாட்டார். சிறிது தாஜாவுக்குப் பின் பெரிய மனசு பண்ணி வாங்கிக்குவார். //
ஹி...ஹி... நம்ம ஊரு ஆள்களுக்கே உள்ள குணமாச்சே. எங்க் அத்தான் (பெரியப்பா மகள் கணவர்-மதுக்கூரில் பல வருடங்கள் போலிஸ்காரர்)அவர ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும் சமதானப்படுத்தி சாப்பிட வைக்கிறதுள்ள தாவு தீந்து போயிடும்.
//இன்னிக்குதான் நெறைய பேரு தன் தண்ணியடிக்கும் கெப்பாசிடிய சோதிச்சு பாப்பாங்க. நெறய சண்டைகளும் நடக்கும். ரோட்டுல நெறய சர்வேயர்கள் விழுந்து கெடப்பாங்க. புதுக் குடிகாரர்கள் முளைப்பாங்க. பாசம் புதுசா பொங்கல விட அதிகமா பொங்கும்!//
உண்மை... உண்மை. நான் ஒன்பதாவது படிக்கும் போது மாட்டுப் பொங்கல் அன்று அப்பா அவர் குடித்த சாரயத்தில் கடைசியில் கொஞ்சம் குடுத்து “சாப்பிட்டு பாற்றா...சுர்ன்னு” இருக்கும் என்று சொல்லி கொடுத்தார். பல சொட்டுகள் கொண்ட அந்த சாரயத்தை சாப்பிட்டு விட்டு நானே என் நண்பர்களிடம் அலப்பறை பண்ணினேன்:)))
மாட்டுப்பொங்கல் அன்று எங்கள் வீட்டில் பெரியப்பா, அப்பா, சித்தப்பாக்கள், மருமகன்கள், மகன்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடிக்கும் பாசக்கார குடும்பம்!
//ஆனா எங்க ஊருல இப்போ,
கோரை மாலை யாரும் கட்றது இல்ல
மாடுகளும் வீட்ல இல்ல
ஆத்தாங்கரையில கூடுறது இல்ல
புல்லறுக்க யாரும் போறதும் இல்ல
சங்கெல, பூலாம்பூ, பெரண்டை மருந்துக்கும் இல்ல
தீச்சட்டி ரோட்டோரம் வைக்கிறதும் இல்ல
முத்தன், ஆறுமம் வீட்டு மீன் கொழம்பு மாதிரி யாரும் வைக்கிறதும் இல்ல//
உண்மை... நம்ம ஊரிலும் இதே நிலைமைதான்:(((
இப்போவும் பொங்கலப்போ 3 நாட்கள் நான் ஊருக்குப் போறத வழக்கமா வச்சுருக்கேன். பிள்ளைகளுக்கு சந்தோஷமா இருக்கு.
.....ஊரில் பழக்கங்கள் மாறினாலும், இதை மாத்திடாதீங்க. நல்ல விஷயம்ங்க.
ஒருமாசம் முன்னாடியே பொங்கல் வச்சுட்டீங்க.. நல்லா இருக்கு நம்ம ஊரு பொங்கல். ;-)
இப்பலாம் எங்க மாப்ள.. அது ஒரு கார் காலம் ....
நல்லாருக்கு. இத ஏன் முழுக்க முழுக்க நம்மூரு நடையிலயே எழுதி இருக்கக் கூடாது... கரிசல்காட்டு இலக்கியம் மாதிரி நம்மளும் வயக்காட்டு இலக்கியம் எழுதுவமே. என்ன நாஞ்சொல்றது?
அட, அட இப்படி வெளாவாரியா சொன்னதை வும்ம ஊரு நடையில எழுதியிருந்தா இன்னும் டக்கரா இருந்திருக்குமோய்.
எனக்கும் சொச்ச மிச்சம் ஞாபகமெல்லாம் வருது. ஒரு வருஷம் நான் கரும்பு வியாபாரியா அவதாரமெடுத்தேன் அது ஒரு மறக்க முடியா அனுபவம்தேய்ன்.
வெட்டிக்காட்டுக்குத்தேய்ன் வந்தோம் கரும்பு தோட்டம் பார்க்க... ஹிஹிஹி.
இருந்தாலும் பீடிய அடிச்சதுமில்லாம அதக் தூக்கி அவந்தலையில போட்டிய பத்தியலா... அனுபவம் பேசுகிறது :)))
//என்ன நாஞ்சொல்றது?//
ஆமாங்குறேன்.
கிராமத்துல பொங்கல் கொண்டாடுற சந்தோஷம் தனி தான்..//
repeattu..
இப்பவெல்லாம் பொங்கல் டிவி பொட்டியோட சுருங்கிப் போயிருச்சுங்க
பாட்டி வீட்டு நினைவுகள் வந்துடிச்சி அண்ணே.. நல்ல பதிவு...
//புவனேஸ்வரி ராமநாதன் said...
அழகா சொல்லியிருக்கீங்க. கிராமத்துல பொங்கல் கொண்டாடுற சந்தோஷம் தனி தான்.//
நன்றி. இப்போ அந்த கிராமம் தொலஞ்சு போச்சுங்க :(
//Blogger ரவிச்சந்திரன் said...
தலைவரே,
அருமை... அட்டகாசம். ஒவ்வொரு நிகழ்வையும் ஞாபகப் படுத்தி சொல்லியிருக்கிறீர்கள்.
நம்ம பொங்கல் பண்டிகையும் Ditto இதே மாதிரிதான். Nostalgic memories...//
நன்றி, ரவி. அப்போ நடந்த பொங்கல் இப்போ நினைவில் மட்டுமே :(
//ஹி...ஹி... நம்ம ஊரு ஆள்களுக்கே உள்ள குணமாச்சே//
:))
//பல சொட்டுகள் கொண்ட அந்த சாரயத்தை சாப்பிட்டு விட்டு நானே என் நண்பர்களிடம் அலப்பறை பண்ணினேன்//
அட நம்ம கேசு. நானும் அதே மாதிரி அலப்பறை பண்ணிருக்கேன், நடவு சமயங்களில் :)
//ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடிக்கும் பாசக்கார குடும்பம்!//
அப்போ பொங்கும் பாருங்க ஒரு தனி பாசம்!!!
@சித்ரா,
//.....ஊரில் பழக்கங்கள் மாறினாலும், இதை மாத்திடாதீங்க. நல்ல விஷயம்ங்க.//
நன்றி. பழக்கம் மட்டுமில்லே, ஊரே மாறிடுச்சுங்க...
@ஆர்வியெஸ்,
//ஒருமாசம் முன்னாடியே பொங்கல் வச்சுட்டீங்க.. நல்லா இருக்கு நம்ம ஊரு பொங்கல். ;-)//
நன்றி. உங்க பொங்கல் விளையாட்டையும் எழுதுங்க!
@கேயார்பி,
//இப்பலாம் எங்க மாப்ள.. அது ஒரு கார் காலம் ....//
இல்ல மாப்ள, அது நடராஜா காலம். இதுதான் கார் காலம், கிராமத்தத்தான் காணும் :)
@விந்தைமனிதன்,
//நல்லாருக்கு. இத ஏன் முழுக்க முழுக்க நம்மூரு நடையிலயே எழுதி இருக்கக் கூடாது//
நன்றி. முழுக்க எங்க ஊரு நடையில எழுதினா, எங்க ஊரு ஆளுங்க மட்டும்தான் படிக்க முடியும். ஒரு நல்ல இலக்கியம் (?!?@?) நெறைய பேருக்கு போய் சேரணுங்குற நல்ல எண்ணம்தான்!!
@தெகா,
//அட, அட இப்படி வெளாவாரியா சொன்னதை வும்ம ஊரு நடையில எழுதியிருந்தா இன்னும் டக்கரா இருந்திருக்குமோய்.//
நன்றி. முழுக்க எங்க ஊரு நடையில எழுதினா, எங்க ஊரு ஆளுங்க மட்டும்தான் படிக்க முடியும். ஒரு நல்ல இலக்கியம் (?!?@?) நெறைய பேருக்கு போய் சேரணுங்குற நல்ல எண்ணம்தான்!!
//எனக்கும் சொச்ச மிச்சம் ஞாபகமெல்லாம் வருது. ஒரு வருஷம் நான் கரும்பு வியாபாரியா அவதாரமெடுத்தேன் அது ஒரு மறக்க முடியா அனுபவம்தேய்ன்.//
நல்ல சீசனல் யாவாரந்தான்!
//வெட்டிக்காட்டுக்குத்தேய்ன் வந்தோம் கரும்பு தோட்டம் பார்க்க... ஹிஹிஹி.//
நம்ம ரவி வீட்டுத் தோட்டத்துக்கு வந்தியளா?
//இருந்தாலும் பீடிய அடிச்சதுமில்லாம அதக் தூக்கி அவந்தலையில போட்டிய பத்தியலா... அனுபவம் பேசுகிறது :)))//
இப்ப படிக்கிற சந்ததிகள் பீடிய நாமளா விருப்பப்பட்டு அடிச்சோம்னு தவறா நெனச்சுடக் கூடாதில்லையா? :)
@கும்மி,
//ஆமாங்குறேன்.//
நன்றி. முழுக்க எங்க ஊரு நடையில எழுதினா, எங்க ஊரு ஆளுங்க மட்டும்தான் படிக்க முடியும். ஒரு நல்ல இலக்கியம் (?!?@?) நெறைய பேருக்கு போய் சேரணுங்குற நல்ல எண்ணம்தான்!!
@இளா,
//இப்பவெல்லாம் பொங்கல் டிவி பொட்டியோட சுருங்கிப் போயிருச்சுங்க//
வெவசாயி நீங்களே பொட்டில வெவசாயம் பண்றீங்க. சீக்கிரம் ஊருக்கு வாரும் ஓய்!
@சந்தோஷ்,
//பாட்டி வீட்டு நினைவுகள் வந்துடிச்சி அண்ணே.. நல்ல பதிவு...//
நன்றி, சகோ. இந்த வருஷமும் பாட்டி வீட்டுக்கு போயிடுங்க. இல்லே, உங்க அம்மாதான் பாட்டியா ப்ரமோஷன் ஆயிட்டாங்களே, வீட்ல பொங்கல் வச்சு அசத்துங்க. இல்ல தம்பி, உனக்கு வயசாச்சுன்னு சொல்ல வரலே :))
//
அருமையான பதிவுண்ணே.
பழைய நினைவுகளில் மூழ்க வச்சிட்டீங்க.
அண்ணே,நாஸ்டால்ஜியாவில் பொங்கல் மட்டும் என் பக்கத்தில் விட்டுவைத்திருந்தேன், பொங்கல் நெருங்கும் சமயத்தில் எழுத நினைத்திருந்தேன். நீங்க பாட்டுக்கும் நான் யோசித்து வைத்திருந்ததை அப்படியே அதே ஆர்டரில் எழுதிபுட்டீங்களே.
//ஆனா எங்க ஊருல இப்போ,
கோரை மாலை யாரும் கட்றது இல்ல
மாடுகளும் வீட்ல இல்ல
ஆத்தாங்கரையில கூடுறது இல்ல
புல்லறுக்க யாரும் போறதும் இல்ல
சங்கெல, பூலாம்பூ, பெரண்டை மருந்துக்கும் இல்ல
தீச்சட்டி ரோட்டோரம் வைக்கிறதும் இல்ல
முத்தன், ஆறுமம் வீட்டு மீன் கொழம்பு மாதிரி யாரும் வைக்கிறதும் இல்ல//
இந்தளவுக்கு மோசமில்லைன்னாலும் எங்க ஊரு பக்கமும் 10 வருஷத்திற்கு முன்பான பொங்கல் பண்டிகையின் அடையாளங்கள் நிறைய மறைந்துவிட்டது வேதனையான விஷயம்.
எல்லாம் மறந்து போச்சி
சார் அருமையான பதிவு...
என் சிறு வயது காலங்கள் அப்படியே நிழலாடுகிறது...
இப்பவும் நான் ஊரில் கொண்டாடிகிட்டு தான் இருக்கோம்..
ஆனால் அப்போதைய சந்தோஷம் இப்போ கெடைக்கிறது இல்ல..
நாகரிக மாற்றமா இல்ல வேற எதாவது மாற்றமா சரியா சொல்ல தெரியல...
இருந்தும் அந்த நினைவுகள் அப்படியே இருக்கு...
நல்ல பதிவு ...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... வாழ்த்துக்கள்
"அடுத்தது வசூல் ரவுண்டு. சின்னப் பசங்கள்லாம், அப்பா, அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகிட்டு, அக்கம் பக்கத்துல இருக்குற பெரியவங்க எல்லார் கால்லயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க கெளம்பிடுவோம். சில தாத்தாக்கள் காசு குடுப்பாங்க, சில வீட்ல வாழைப்பழம், பொங்கல் குடுப்பாங்க. அதோட அன்னிக்கு ஆட்டம் முடிஞ்சது".
"சாதிகள் மட்டும் அப்படியே ...
இன்னும் இளமையா....முறுக்கேறி".
sir, excellent.go..go.,go ahead.
கிராமத்து வாசனை அழகாய் அருமையாய்.. வாழ்த்துக்கள்.
@நாடோடி இலக்கியன்,
நன்றி, தம்பி!
@தொப்பிதொப்பி,
நன்றி.
@அரசன்,
நன்றிங்க.
@ராமநாதன் சாமித்துரை,
ரொம்ப நன்றி, குமார்!
@அன்புடன் மலிக்கா,
நன்றிங்க.
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
ஆஹா................ குத்தியாச்சுல்லே ஒரு ப்ளஸ்.
அருமையோ அருமை.
அருமையான பொங்கல் நினைவுகள்..
கடைசி வரிகள்ல, சாட்டையை எடுத்து விளாசிப்புட்டீக.
//துளசி கோபால் said...
ஆஹா................ குத்தியாச்சுல்லே ஒரு ப்ளஸ்.
அருமையோ அருமை.//
நன்றி, அக்கா.
//அமைதிச்சாரல் said...
அருமையான பொங்கல் நினைவுகள்..//
நன்றி, அமைதிச்சாரல்!
//சிவகுமாரன் said...
கடைசி வரிகள்ல, சாட்டையை எடுத்து விளாசிப்புட்டீக.//
நன்றி, சிவகுமாரன். கசப்பான உண்மை!
கலக்கல் ....
சோழர் பரம்பரையில் ஒரு பதிவர்
ரெண்டாவது பதிவரும் வந்தாச்சி .....
http://buildappu.blogspot.com/2011/02/blog-post.html
Post a Comment